கணவரை இழந்து, புகுந்த வீட்டாரால் விரட்டி அடிக்கப்பட்ட நிதி துபே, வாழ்க்கையோடு போராடி ராணுவ வீரர் ஆன கதை!

0

25 வயதான நிதி துபேவின் கணவர் இந்திய ராணுவ ஜவானாக பணிபுரிந்த சமயத்தில் மாறடைப்ப்பில் காலமானார். அப்போது நிதி 4 மாத கர்பிணியாக இருந்தார். கணவர் இறந்த இரண்டே நாளில், நிதியை அவரது மாமியார் வீட்டார் அவர்களின் வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டனர். 

நிதி மத்திய பிரதேசில் உள்ள சாகரில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றார். பல மாதங்கள் மனமுடைந்த நிலையில் வாழ்ந்த அவர், தனது வாழ்க்கையை எதிர்த்து போராட முடிவெடுத்தார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை சுயஷ் முகத்தை பார்த்ததும், நிதிக்கு வாழ்க்கையில் மீது நம்பிக்கை பிறந்து, மனதிடம் ஏற்பட்டது. நிதியின் அம்மா சுயஷை பார்த்துக்கொள்ள, அவர் இந்தூருக்கு சென்று என்பிஏ படித்தார். ஒரு வருடம் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் என்று பத்திரிகை செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

நிதியின் கணவரின் ராணுவ நண்பர்களின் ஆலோசனைப்படி, ராணுவத்திற்கான செர்வீசஸ் செல்க்‌ஷன் போர்டு தேர்வு எழுத முடிவெடுத்து அதற்கு படிக்கத்தொடங்கினார். கடுமையான உடல் பயிற்சி மேற்கொண்ட நிதி, காலை 4 மணிக்கு எழுந்து தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடினார். காலை நேரத்தில், சாகரில் உள்ள ஆர்மி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். சுயஷும் அதே பள்ளியில் படித்தான். இரவு நேரத்தில் பரிட்சைக்கு படிப்பது என்று தன் நாள் பொழுதை கடத்தினார். 

ஐந்து முறை முயற்சிக்கு பின், நிதி எஸ்எஸ்பி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த மாத இறுதியில் சென்னையில் பயிற்சி தொடங்கவுள்ளது. அந்த வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிதி, தனது கணவரின் கனவை, இந்திய ராணுவத்தில் தன் சேவையின் மூலம் நிறைவேற்ற உள்ளார். 

கட்டுரை: Think Change India