சென்னை வெள்ளத் தாக்கத்தினால் இரு டெக்கீ’ஸ் உருவாக்கிய தளம்- மருந்துக்களுக்கான ‘ஸ்விக்கி’ இது!

பஸ்டிக்கெட் புக்கிங்கு ‘ரெட் பஸ்’, சாப்பாட்டுக்கு ‘ஸ்விக்கி’, சினிமாவுக்கு ‘புக் மை ஷோ’ அப்போ மருந்து, மாத்திரைக்கு? இனிமேல் ’AroundU’

0

எப்பொருள் யார் வாங்க நினைப்பினும், அப்பொருளை இருக்கும் இடத்திலிருந்தே வாங்கிக் கொள்ளுவது இன்று சாத்தியம். 

இணைய வழி விற்பனை நிலையங்களும் இங்கு ஏராளம். ஆனால், ஆடை, அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் என பெரும்பாலான பொருள்களை இத்தளங்களில் வாங்கினாலும், நம் அத்தியாவசியத் தேவையான மருந்துப் பொருட்களை நம்ம தெருமுக்கு மெடிக்கல் ஷாப்களில் வாங்க வேண்டிய நிலையே உள்ளது. ஆனால், இனி தலைவலி, வயிற்று வலி போன்ற இன்ஸ்டன்ட் வலிகளுக்கான மாத்திரைகள் தொடங்கி மாதம் அல்லது வாரத்துக்கு ஒருமுறை பிரிஸ்கிரிப்ஷன் பேப்பருடன் மெடிக்கல் ஷாப்களில் நிற்க வேண்டாம். ஆம், மருந்து, மாத்திரைகளை ’AroundU’-வில் ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தே வாங்கலாம். 

2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அரவுன்ட் யூ’ பார்மஸிக்களையும் நுகர்வோர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் நிறுவனமாகும். ஸ்கூல் ப்ரெண்ட்சான அரவிந்த் ராஜேந்திரன் மற்றும் அருண்பாபு தமிழ்செல்வனால் தொடங்கப்பட்டது அரவுன்ட் யூ

படபட பட்டாசு மற்றும் வத்திக்குச்சி தயாரிப்புக்கு பெயர்போன மாவட்டமான சிவகாசியில் பிறந்த இருவரும், அக்கம்பக்கத்து ஆன்ட்ருப்ரூனர்களின் வெற்றி, தோல்விகளை நெருக்கத்திலிருந்து பார்த்து வளர்ந்துள்ளனர். இன்ஜீனியரிங் படிப்பை ஒன்றாக முடித்தவர்களது கேரியர் பாதை வேறு வேறாக அமைய, அரவிந்த் ஐடி ஊழியராக, அருண்பாபு பேமிலி பிசினசை கவனித்து வந்துள்ளார். 

டைம் கிடைத்த போதெல்லாம் சந்தித்து பேசிக் கொள்ளும் இருவரது உரையாடல்களும் சுயத்தொழிலை சுற்றியதாக அமைந்துள்ளது. ஆனால், அப்போது ஐடியா ஜீரோ. 2015ம் ஆண்டு தலைநகர் சென்னை வெள்ளத்தில் தத்தளித்த தருணமே அரவுன்ட் யூ- ஆரம்பத்துக்கான அட்சாணி.

“மனிதனுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு மருந்து, மாத்திரைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களை நாங்கள் சந்தித்தோம். மிக இன்றியமையா தேவை மருந்து. ஆனால், அச்சமயத்தில் மருந்துகளை வாங்குவதற்கு மக்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டனர். வெள்ளத்துக்கு பிறகும், மருந்து வாங்குவது மக்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்பதை கவனித்தோம். சில சமயங்களில், மக்களுக்கு தேவைப்படும் மருந்து அருகிலுள்ள சிறிய மெடிக்கல் ஷாப்களில் இருக்காது. பெரிய மருந்தகத்துக்கு செல்ல வேண்டும் என்றால், சில கிலோமீட்டர் டிராவல் செய்யனும். சின்ன சின்ன ரொட்டின் லேப் டெஸ்டுக்கும் இதே நிலை தான்,” 

எனும் அவர்களது அவதானிப்பின் அடுத்த கட்டமே, ’AroundU’, ஆன்லைன் பார்மஸி. 

அரவுன்ட் யூ ஆப்பை போனில் தரவிறக்கம் செய்தோ, 9003579633 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டே ஆர்டர் செய்யலாம். 24 மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யும் ஆப்சனும், இமிடியட் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யக்கூடிய எமர்ஜென்சி டெலிவரி சேவையையும் வழங்குகின்றனர். தவிர, லேப்டெஸ்ட், பேலியோ டயட் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளையும் வீட்டிலேயே பெறுவதற்கான சேவையினையும் வழங்குகிறது.

“ஆனால், மொஸ்ட் ஆப் தி டைம் நாங்கள் ஆர்டர் எடுத்த 20 நிமிடத்தில் மருந்துகளை டெலிவரி செய்து விடுவோம்,” என்கிறார் அரவிந்த். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாங்கள் நேரடி மெடிக்கல் ஷாப்களையும், பார்மஸிக்களையும் எங்களுடைய போட்டியாளர்களாக கருதவில்லை. ஆன்லைனில் மருந்து விற்கும் பல தளங்களும், உள்ளூர் மருந்து கடைகள் மற்றும் மருந்தகங்களைவிட அதிகமான தள்ளுபடியில் மருந்துகளை விற்பதால், நேரடி விற்பனையில் சரிவை ஏற்படுத்துகின்றனர். ஆனால், நாங்கள் நேரடி மருந்தகங்களின் வளர்ச்சியில் பங்கெடுக்கிறோம். சிலர் நம்பிக்கையின் பொருட்டு குறிப்பிட்ட மருந்தகங்களில் மட்டுமே பல ஆண்டுகளாக மருந்துகளை வாங்குவர். டிஜிட்டல் முறையில் அவர்கள் பரிவர்த்தனையை தொடருவதற்கான தளத்தை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம்” என்றார்.

கஸ்டமர்களிடமிருந்து ஆர்டர் பெறப்பட்டவுடன், வாடிக்கையாளரது இருப்பிடத்துக்கு நெருக்கத்தில் உள்ள மருந்தகத்துக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அரவுன்ட் யூ-வுடன் இணைந்து செயல்படும் பங்குத்தார மருந்தகம், மருந்துச்சீட்டுக்கான விலைப்பட்டியலை தயார் செய்கிறது. வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பத்தாவது நிமிடத்தில், அவர் பில் மதிப்பு அனுப்பப்படுகிறது. விலை மதிப்பு வாடிக்கையாளருக்கு ஓகே எனில் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருந்து வீட்டு வாசலை வந்தடையும். 

பங்குதார மருந்தகத்தில் வாடிக்கையாளரிடம் மருந்துகளை கொண்டு சேர்ப்பதற்கான வசதிகள் இல்லையெனில், அப்பொறுப்பை அரவுன்ட் யூ ஏற்றுக் கொள்கிறது. இக்குழுவினர் மருந்தை பெற்று டெலிவர் செய்து விடுகின்றனர். இதுவரை, சென்னையில் 70 மருந்தகங்களும், மற்ற மாவட்டங்களில் 40 மருந்தகங்களும் அரவுன்ட் யூ-வுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டு விரிந்துள்ள 4 பெரும் பார்மஸிகளுடன் இவர்கள் இணைந்து செயல்படுவதாக கூறுகிறார் அரவிந்த்.

 “மெடிக்கல் ஷாப்களும், பார்மஸிக்களும் அரவுன்ட் யூ உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், அவர்களுடைய வருவாயில் 30 சதவீதம் அதிகரிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்கிறார். 

முன்னணி டயக்னஸ்டிக் மையங்கள் மற்றும் லேப்களுடனும் இணைந்து செயல்படும்  அரவுன்ட் யூ, வீட்டிலே ரத்த மாதிரி சேகரிப்பு, லேப் டெஸ்ட்டுக்கான முன்கூட்டியே புக்கிங் செய்வதற்கான தளமாகவும் செயல்படுகிறது. 

18 மாத தொழில் முனைவர் பயணத்தில், அப் அண்ட் டவுண்சை சந்தித்து வந்தாலும் அதை இருவரும் நேர்த்தியாக ந கையாண்டு வருகின்றனர். ஆல்ரெடி, பேமிலி பிசினை நிர்வாகித்த அனுபவம் அருண் பாபுவுக்கு இருப்பதால், தொழில் இயக்கத்தினை கவனித்துக் கொள்கிறார். ஐஎம்டி காஸியாபாத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற அரவிந்த் மார்க்கெட்டிங் துறையை கையாள்கிறார்.

“நாங்க தொடங்கிய போது, பல ஆண்டுகளாய் மெடிக்கல் ஷாப்பை நிர்வகித்து வருவோர், ஆன்லைன் மருந்து விற்பனை குறித்த தெளிவான புரிதலற்று இருந்தனர். 

எங்களை போட்டியாளர்களாக பார்க்கத் தொடங்கியதுடன், ஆன்லைன் மருந்து விற்பனை என்றாலே முற்றிலும் எதிர்க்கத் தொடங்கினர். அவர்களது அத்திடமான நம்பிக்கையை உடைத்து அரவுன்ட் யூ வருவாய் அதிகப்படுத்த உதவும் தளமே தவிர உங்களது வியாபாரத்தை எடுத்துக் கொள்ளக்கூடியதில்லை என்பதை புரிய வைப்பதே எங்களுக்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது.”

இப்போது பார்மஸிக்களுக்கு ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது, இவர்களுடன் சேர்ந்து செயலாற்ற ஆர்வம் காட்டுகின்றனர் என்கின்றார். 

இன்று சென்னை, மதுரை, சேலம், தேனி, கோயம்புத்தூரில் சேவையை வழங்கும் இவர்கள், வெகு விரைவில் பிற மாவட்டங்களிலும் விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். 

தவிர 2019ம் ஆண்டுக்குள் அவர்கள் வழங்கும் சேவைப் பட்டியலுக்குள், ‘ஹோம் ஹெல்த் கேர்’, ‘வயதானோர் பராமரிப்பு’, ‘அறுவை சிகிச்சைக்கு பின்னான கவனிப்பு’, ‘உணவு மற்றும் உடற்பயிற்சி ஆலோசனை’, ஆகியவையும் சேர்க்கப்படவிருக்கின்றன. 

வாடிக்கையாளர்களிடம் குட் ரிவ்யூ பெற்றிருக்கும் அரவுன்ட் யூ- குட் ரெவன்யூவையும் பெற்றுள்ளது. ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும் இவர்கள் தொடங்கப்பட்ட 12 மாதத்தில் ரூ.24 லட்சத்தை வருவாயாக ஈட்டியுள்ளனர். 

11 பேர் கொண்ட அரவுன்ட் யூ டீம், தற்போது ‘குயிக் அண்ட் குவாலிட்டி’யை வழங்க அதிதீவிரமாய் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.