சர்வதேச தலைவர்கள் வெற்றிக்கு கைகொடுத்த ’5 மணிநேர விதி’  

4

வெற்றிக்கு உதவக்கூடிய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருந்தால் நீங்கள் எந்த பழக்கத்தை தேர்வு செய்வீர்கள்?  தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி வைப்பது என்றால், அதற்காக நீங்கள் கடைப்பிடிக்கக் கூடிய மந்திரம் என்னவாக இருக்கும். வெற்றிக்கு வித்திடக்கூடிய அந்த மாய வழி என்ன என்பது உங்களுக்குத்தெரியுமா? 

இத்தகைய கேள்விகள் அலைமோதிக்கொண்டிருந்தால் அதற்கான எளிய பதில், உங்கள் அறிவுசார் முதலீட்டை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது என்பதாகும். இதை செய்ய சுலபமான வழி வாசிப்பது.

தொடர்ந்து வாசிப்பதன் மூலமே அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை விரும்பும் எவரும், கற்றுக்கொள்வதில் நேரத்தை செலவிட்டாக வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை வரித்துக்கொள்வது, வெற்றியுடன் தொடர்பு கொண்டிருப்பதை ’ரிச் ஹாபிட்ஸ்; தி டெய்லி சக்சஸ் ஹாபிட்ஸ் ஆப் வெல்தி இண்டுஜுவல்ஸ்’ புத்தக ஆசிரியர் தாம்ஸ் கோர்லி புள்ளிவிவரங்களோடு கண்டறிந்துள்ளார். புத்தகங்கள் அறிவை பெருக்கிக் கொள்வதற்கான நுழைவு வாயிலாக இருக்கின்றன. உங்கள் கையில் இருக்கும் நேரத்தில் இந்த அற்புத ஆற்றலை திறம்பட பயன்படுத்திக்கொள்வது எப்படி? இந்த கேள்விக்கு பதிலாக அமைகிறது 5 மணி நேர விதி.

இந்த விதி என்ன சொல்கிறது என்றால், வாரந்தோறும் ஐந்து மணி நேரம் புத்தகங்களை வாசித்தால், நீங்கள் தேவையான அளவு அறிவை தேடிக்கொள்ளலாம். பெஞ்சமின் பிராங்ளின் வார நாட்களில் ஒரு மணி நேரம் அல்லது வாரத்தில் ஐந்து மணி நேரம் வாசிப்பது என பின்பற்றி வந்த பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விதியை உருவாக்கியதாக தொடர் தொழில்முனைவோரான மைக்கேல் சிம்மன்ஸ் சொல்கிறார்.

ஆனால் படித்தால் மட்டும் போதுமா? படித்ததை பயன்படுத்திக்கொண்டால் தான் அதற்குறிய பலன் இருக்கும். இதற்கும் மூன்று எளிய வழிகள் இருக்கின்றன: வாசி, யோசி மற்றும் பரிசோதனை செய்வது.

விடாமல் வாசியுங்கள்

குறைவாக வாசிக்கும் பழக்கத்திற்கு நம்முடைய பரபரப்பான வாழ்க்கையை ஒரு காரணமாக சொல்லலாம். ஆனால் உலகின் வெற்றிகரமான மனிதர்களில் பலர் முடிந்த அளவு வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனரும், கோடீஸ்வர கொடை வள்ளலுமான பில் கேட்ஸ், வாசிப்பு தன் வாழ்க்கையை மாற்றியது என்கிறார். அவர் வாரம் ஒரு புத்தகம் அல்லது ஆண்டுக்கு 50 புத்தகங்கள் வாசிக்கிறார். ஆனால் அவர் வாசிப்பதற்காக மட்டும் வாசிப்பதில்லை, அறிவு தாகமே அவரை வாசிக்க தூண்டுகிறது. புத்தகங்களை வாசிக்கும் போது அவற்றின் பக்கவாட்டில் குறிப்புகளை எழுதி வைக்கும் பழக்கமும் கொண்டிருக்கிறார். இது புரிதல் மற்றும் பரிவை அளிப்பதாகவும் சொல்கிறார்.

முதலீட்டு மகாராஜாவான, பெர்க்‌ஷய்ர் ஹேத்வே சி.இ.ஓ வாரென் பபெட், தனது 80 சதவீத நேரத்தை வாசிப்பில் செலவிடுவதாக சொல்கிறார். சும்மா உட்கார்ந்து யோசிப்பதை விட, வாசித்து விட்டு யோசிப்பது பலன் அளிப்பதாக அவர் நம்புகிறார். புத்தகத்தில் படித்த ஒன்று பற்றி யோசிப்பது புதிய எண்ணங்கள் மற்றும் புரிதலை ஏற்படுத்துகிறது.

பெர்க்‌ஷயர் ஹேத்வே துணைத்தலைவரான சார்லஸ் தாமஸ் மங்கரும் தீவிரமாக வாசிக்ககூடியவர் தான். அவரே கால் முளைத்த புத்தகம் என அவரது குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகள் கூறியிருக்கின்றனர். வாசிப்பு பழக்கம் சரியான எண்ணங்களை கண்டறிந்து, அவற்றை செயல்படுத்த உதவுவதாக மங்கர் கூறியிருக்கிறார். வாசிப்பு எண்ணங்களின் அமைப்பை புரிந்து கொள்ள உதவுகிறது. வாசிப்பு மூலம் ஒருவர் நாள்தோறும் மேலும் அறிவை வளர்த்துக்கொண்டு, ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளலாம்.

கற்றதை யோசிப்பது

வாசிப்பது மட்டும் போதாது. வாசிப்பின் முழு பலனை பெற, படித்தது குறித்து யோசிக்க வேண்டும். வாசித்தது குறித்து யோசிப்பதன் மூலம், புத்தகங்களில் இருந்து பெறக்கூடிய பாடங்களை புரிந்து கொள்ளலாம். இது வாழ்க்கை மேம்பட கைகொடுக்கும்.

தொழில்முனைவோர், எழுத்தாளர், நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பலமுகங்கள் கொண்ட ஓபரா வின்பிரே, புத்தகங்கள் தான் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதையாக அமைந்தது என்று நம்புகிறார். வறுமையான வாழ்க்கையில் இருந்து வளமான வாழ்க்கைக்கு முன்னேற புத்தகங்கள் அவருக்கு உதவியிருக்கிறது. வளரும் பருவத்தில் அவர் அதிகம் தஞ்சமடைந்த இடம் நூலகமாகும். புத்தகங்கள் அவரை ஊக்கம் பெற வைத்து, பொருளாதார மற்றும் சமூக போராட்டங்களை கடந்து எதிர்காலத்தை உருவகப்படுத்திக்கொள்ள வழி செய்தன. சிறுமிகளை வறுமையில் இருந்து மீட்டு, தலைமைப் பண்பு பெற வைப்பதற்காக அவர் நவீன நூலகத்திற்கு 40 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். ஒரு பெண்ணுக்கு கல்வி அளிக்கும் போது நீங்கள் அவருக்கு விடுதலை அளிக்கிறீர்கள் என்கிறார் அவர்.

ஃபேஸ்புக் சி.ஒ.ஒ வான ஷெரில் சாண்ட்பர்க், தான் வேகமாக படிக்கக் கூடியவர் அல்ல என்பதை ஒப்புக்கொண்டாலும், வாசிப்பதை ஒரு பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். வாசிப்பதில் இருந்து அர்த்தமுள்ள புரிதலையும் பெறுகிறார். அவர் எங்கு சென்றாலும் தனது ஐபேடை உடன் கொண்டு செல்கிறார். ஆனால் வீட்டில் வாசிக்கும் போது புத்தக மூளையில் குறிப்பெழுதி வைக்கிறார். சிறப்பாக தொடர்பு கொள்வது எப்படி?, பாதிக்கப்பட்டவராக இல்லாமல் பங்கேற்பவராக இருப்பது எப்படி?, பொறுப்பேற்பது எப்படி? ஆகியவற்றை புத்தக வாசிப்பு மூலம் கற்றுக்கொள்வதாக அவர் கூறுகிறார். இது அவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாண்ட்பர்கும் சிறந்த எழுத்தாளராக இருப்பதால், எழுத்து மூலம் தாக்கத்தை ஏற்படுத்தும் எண்ணங்களை பெற இது உதவுகிறது.

பரிசோதனை செய்யுங்கள்

குறிப்பிட்ட வகை புத்தகங்களை மட்டுமே வாசிக்கும் எண்ணத்திலும் சிக்கி கொண்டுவிடக்கூடாது. வாழ்க்கையை போலவே, உங்கள் எல்லைகளை விரிவு படுத்திக்கொள்வது பலவிதமான எண்ணங்களை பரீட்சயமாக்கும். வெற்றிக்கு இவை தான் தேவை.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எலன் மஸ்க் சிறுவயதில் இருந்தே புத்தக புழுவாக இருந்திருக்கிறார். முதலில் புத்தகங்களால் வளர்க்கப்பட்டு, அதன் பிறகே பெற்றோர்களால் வளர்க்கப்படதாக அவர் விளையாட்டாக கூறியிருக்கிறார். 9 வயதில் அவர் கலைக்களஞ்சியங்களை தீவிரமாக வாசித்திருக்கிறார். பெளதீகம் மற்றும் வானவியல் தவிர அறிவியல் புனைகதைகளையும் ஆர்வமாக வாசித்திருக்கிறார். ராக்கெட்கள் செயல்பாடு பற்றிய புரிதலுக்கு அறிவியல் புனைகதைகளே காரணம் என்கிறார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா, சிறு வயதில் சிறுகதைகள், மர்ம கதைகளை என படித்திருக்கிறார். தயக்கத்தை உதறி நன்றாக பேசும் குணத்தை பெற இவை உதவியதாக அவர் குறிப்பிடுகிறார். மேலும் எழுத்தார்வத்தையும் வளர்த்தது. சிறந்த வாசகர், அசாதரணமாக பேச்சாளர் மற்றும், உரை எழுதிக்கொடுப்பவருமான ஒபாமா புனைகதைகள் சிறந்த அதிபராக உதவியதாக தெரிவிக்கிறார். ஏனெனில் மற்றவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ள இது உதவியிருக்கிறது.

5 மணி நேர விதி கஷ்டமாக இருந்தால் சிறிய அளவில் துவங்கலாம். ஒரு மணி நேரம் படியுங்கள். வாசிப்பது பழக்கமான பிறகு நேரத்தை அதிகமாக்குங்கள். வாசிக்கும் போது கற்றுக்கொள்வது தான் முக்கியம். கேள்விகள் கேட்டு, பதில் தேடும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். திறந்த மனதுடன் வாசிப்பது முக்கியம். உங்கள் அறிவு தசைகளை வலுப்பெறச்செய்தால் வெற்றி தானாக தேடி வரும். பல வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் இந்த 5 மணி நேர வாசிப்பு மூலம் பலன் அடைந்துள்ளனர். நீங்களும் பலன் அடையலாம்.

ஆங்கிலத்தில்: ரெஜினா ரம்யதா ராவ் |   தமிழில்: சைபர்சிம்மன்