ஆக்சென்சர் பணியை விட்டு இளநீர் விற்பனை செய்ய நண்பர்களுடன் நிறுவனம் தொடங்கிய மணிகண்டன்! 

11

’டென்கோ ஃபுட்ஸ்’ (Tenco Foods) ஸ்டார்ட் அப் மணிகண்டன் கே எம், அர்பிதா பஹுகுனா, சந்தோஷ் பாடீல் ஆகிய நிறுவனர்களால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் பகுதியில் செயல்படுகிறது.

கோடைக்கால வெப்பத்தில் இளநீரைப் போல் புத்துணர்வூட்டும் விஷயம் எதுவும் இல்லை. மக்களின் தாகத்தைத் தணிக்க இளநீர் விற்பனை செய்பவர்கள் இந்திய நகரங்களின் பெரும்பாலான சாலைகளில் வரிசையாக இருப்பதைப் பார்க்கமுடியும். 

மணிகண்டனுக்கு ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கவேண்டும் என்று தோன்றும்போதும் தனது காரை சாலை ஓரங்களில் நிறுத்தி வாங்க வேண்டியிருந்தது.

காற்றூட்டப்பட்ட பானங்கள் எளிதாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அதை பருகுவது எளிது. இந்த இரு முக்கியக் காரணங்களால் தான் அதிக சத்து நிறைந்த இளநீரைக் காட்டிலும் காற்றூட்டப்பட்ட பானங்கள் பிரபலமாக உள்ளது என்பது அவருக்குப் புரிந்தது.

அப்போதுதான் அவருக்கு டென்கோ உருவாக்கும் எண்ணம் தோன்றியது. மணிகண்டன் விவசாயப் பின்னணி உடையவர். இதனால் இளநீரை எளிதாக கிடைக்கச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆக்சென்சர் நிறுவனத்தின் பணியைத் துறந்து தனது சொந்த நிறுவனத்தைத் துவங்கினார்.

இளநீர் பருக ஒரு சிறிய கத்தி அல்லது ஸ்பூனின் உதவியுடன் தேங்காயை யார் வேண்டுமானாலும் கட் செய்யும் விதத்தில் தேங்காயை வெட்டக்கூடிய இயந்திரத்தை வடிவமைத்தனர்.

”குழந்தைகூட அதிக சிரமமின்றி எளிதாக தேங்காயை கட் செய்ய எங்களிடம் இளநீர் திறக்கும் கருவி (opener) உள்ளது. தினசரி சுமார் 4,000 இளநீர் வரை விற்பனை செய்கிறோம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நிறுவனத்தைத் துவங்கியபோது ஒரு நாளைக்கு 50 இளநீர் வரையே விற்பனை ஆனது,” என்றார் மணிகண்டன். 

டென்கோ நிறுவனத்திற்கான இயந்திரங்கள் அமைத்தல்

டென்கோ ஃபுட்ஸ் அதன் முதல் இயந்திரத்தை மூன்று மாதங்களுக்குள்ளாகவே உருவாக்கியது.

”முதலில் எங்களது நண்பர்களுக்கு வழங்கி அவர்களிடம் கருத்து கேட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படித்தான் பருகுவதற்கு எளிதாக வெட்டப்பட்ட தேங்காய் விற்பனை துவங்கப்பட்டது,” என்றார்.

ஒழுங்குபடுத்தப்படாத இளநீர் சந்தை அனைவரும் அணுகும் விதத்திலும் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டும் என்பதே இவரது நோக்கமாகும். டென்கோ குறித்து திட்டமிடத் துவங்கியதும் 20 ஆண்டுகள் அவருடன் பணியாற்றிய அர்பிதா பஹுகுணாவை இணைத்துக்கொண்டார்.

மென்பொருள் தளங்களை உருவாக்குவதில் 13 ஆண்டுகள் அனுபவம் உள்ள அர்பிதா, டெக்னோவில் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். சந்தோஷ் படீல் VegWala என்கிற ஸ்டார்ட் அப்பை துவங்கினார். இறுதி வாடிக்கையாளரிடம் பொருட்களை டெலிவர் செய்யும் last-mile delivery பிரிவில் அனுபவம் மிக்கவர். அக்‌ஷய் பல முன்னணி ப்ராண்டுகளுடன் பணியாற்றி மார்கெட்டிங் மற்றும் விளம்பரப் பகுதியில் 15 வருட அனுபவமிக்கவர். குழுவில் இளம் நபரான கௌதம் விற்பனைப் பிரிவில் நான்காண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர் மிகவும் உற்சாகமாக செயல்படுபவர்.

”இறுதியாக இயந்திரம் மற்றும் திறக்கும் கருவி தொடர்பான செயல்பாடுகளின் பின்னணியில் இருப்பவர் விஷ்ணு. பிட்ஸ் கல்வி நிறுவனத்தில் இருந்து தேர்ச்சி பெற்று வெளியேறி அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்த இயந்திரங்களை உருவாக்கும் பிரிவில் செயல்பட இந்தியா திரும்பினார்,” என்றார் மணிகண்டன்.

குழுவை உருவாக்கிய பிறகு மூலப்பொருட்களை வாங்குவது கடினமான பணியாக இருக்கவில்லை. தேவையான தயாரிப்பைப் பெற உதவும் குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் ஒவ்வொருவரிடமும் இருந்தது. தேங்காயை கொள்முதல் செய்ய உள்ளூர் விற்பனையாளர்களிடம் குழுவினர் பேசி தொடர்ந்து விநியோகிக்கக்படுவதை உறுதி செய்தனர்.

விநியோகம் மற்றும் வருவாய்

"ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 50 இளநீருடன் துவங்கினோம். தற்சமயம் தினமும் சுமார் 4,000 இளநீர் வரை விற்பனை செய்கிறோம். எங்களது வருவாய் மாதத்திற்கு சுமார் 30 லட்ச ரூபாயாகும். இந்த கோடைக்காலத்தில் வருவாயை இருமடங்காக்குவோம் என்கிற நம்பிக்கை உள்ளது,” என்றார் மணிகண்டன்.

டென்கோ தற்போது ஹைப்பர்சிட்டி, மோர், பிக்பஜார், மெட்ரோ, நீல்கிரிஸ், நம்தரிஸ், நேச்சர்ஸ் பேஸ்கட் உள்ளிட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களுக்கும் அமேசான், பிக் பாஸ்கட், க்ரோஃபர்ஸ், சாப்நவ் (Zopnow), தூத்வாலா உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களுக்கும் விநியோகிக்கிறது.

”நாங்கள் பி2சி பிரிவில் செயல்படத் துவங்கி இளநீரை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்தோம். ஐந்து அடுக்குமாடிக் கட்டிடங்களில் விற்பனையைத் துவங்கியுள்ளோம். சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற பகுதிகளுக்கும் விரைவாக விரிவடைந்து வருகிறோம்,” என்றார் மணிகண்டன்.

சந்தை

இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்ட இளநீர் சந்தையின் மதிப்பு 2016-ம் ஆண்டில் 15.38 மில்லியன் டாலராக இருந்ததாக TechSci அறிக்கை தெரிவிக்கிறது. இது 2017-2022 ஆண்டுகளிடையே 17 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 40.73 மில்லியன் டாலரை 2022-ம் ஆண்டில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வதோதராவைச் சேர்ந்த மன்பசந்த் பீவரேஜஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தப் பகுதியில் செயல்படத் துவங்கியுள்ளது. மற்ற பெரு நிறுவனங்களும் பேக்கேஜ் செய்யப்பட்ட இளநீர் பகுதியில் நுழைய திட்டமிட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. டென்கோ நிறுவனத்தின் தனித்துவம் குறித்து மணிகண்டன் குறிப்பிடுகையில், 

“இந்தப் பகுதியில் முன்னோடியாக செயல்பட்டதால் எங்களுக்கு பல நன்மைகள் உள்ளன. சிறப்பான குழு எங்களிடம் உள்ளது. எங்களது பரவலான அனுபவம் வணிகத்தில் மாறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கிறது. கொள்முதல், விநியோகம், தொழில்நுட்பம் (ஹார்ட்வேர் மற்றும் மென்பொருள்) ஆகியவையே இந்த வணிகத்தில் முக்கியமானதாகும். வணிகத்தின் இந்த செயல்பாடுகளில் மிகச்சிறந்தவர்கள் எங்களுடன் உள்ளனர்,” என்றார்.

பி2பி2சி பிரிவில் 20 சதவீத மொத்த லாபமும் பி2சி பிரிவில் 30 சதவீத லாபமும் ஈட்டப்படுவதாக குழுவினர் தெரிவித்தனர். தற்போது சுயநிதியில் இயங்கி வரும் இந்த ஸ்டார்ட் அப் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வாயிலாக நிதி உயர்த்தியுள்ளது.

சென்னை, ஹைதராபாத், பூனே, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விரிவடைய திட்டமிட்டுள்ளனர். தேங்காய் பால், தேங்காய் துகள்கள், பனை வெல்லம் (coconut sugar), தூய தேங்காய் எண்ணெய் போன்ற தேங்காய் சார்ந்த பிற பொருட்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

வருங்கால திட்டம் குறித்து மணிகண்டன் குறிப்பிடுகையில், “கழிவு மேலாண்மை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். அதில் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதை உணரமுடிகிறது. கோகோ பித் (coco pith), செறிவூட்டப்பட்ட கரிமம் (activated carbon), கரி ஆகியவற்றை உருவாக்கத் தேங்காய் கழிவுகளை பயன்படுத்தலாம். அத்துடன் உயர் தர உரத்தையும் தயாரிப்போம். இவை விவசாயிகளே பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கும் சுய சார்புடைய சுற்றுச்சூழலை உருவாக்குவோம். இதனால் இளநீர் சந்தையின் மதிப்பு மட்டுமே ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாயாகும். மற்ற தேங்காய் சார்ந்த ப்ராடக்டுகள் பிரிவில் செயல்படுவதற்கு முன்பு இந்த சந்தை மதிப்பில் ஒரு சதவீதத்தையாவது (120 கோடி ரூபாய்) கைப்பற்ற விரும்புகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா