இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏன்?

0

சமூக ஊடகங்கள், வாட்ஸ் அப் செய்திகளில் என எல்லாவற்றிலும், இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு தொடர்பான பதிவுகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 73 எனும் அளவுக்கு சரிந்திருப்பது இந்த பதிவுகளின் விவாதப் பொருளாக அமைந்துள்ளது.

ஒரு சில பதிவுகள், ரூபாய் மதிப்பு சரிவை, தேசிய பெருமிதத்தின் சரிவாகவும் பார்க்கின்றன. இன்னும் சிலர், வருங்காலத்தில் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பை 100 இலக்கத்தை தொடலாம் எனும் கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் நவீன கால நாணய மாற்று விகிதத்தில், நாணயத்தின் மதிப்பு என்பது, தேசிய பெருமிதம் சார்ந்தது அல்ல, தேசிய விலை சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு, நாணய மதிப்பை, தேசம் மற்றும் சமூகத்தின் நிலையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் தன்மை இந்தியாவுக்கு மட்டும் உரியது அல்ல. யுவான், லிரா போன்ற நாணயங்களுக்கும் இதே போக்கு தான்.

ஒவ்வொரு நாட்டின் நாணய மதிப்பும், அந்நாட்டின் வசம் இருக்கக் கூடிய தங்க கையிருப்பு அளவை பொருத்து அமைந்த காலத்தில் ஏற்பட்ட சார்புத் தன்மை என இதைக் கூறலாம். நாணயத்தின் மதிப்பு அதிகம் எனில் கையிருப்பில் அதிக தங்கம் இருப்பதாக மார்த்தட்டிக்கொள்ளலாம். 1930 களோடு இந்த நிலை மாறிவிட்டது.

தற்போதுள்ள மாற்று நாணய விகித உலகில், ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு என்பது, அதன் வர்த்தகம், முதலீடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே டாலருக்கு எதிராக நாணயத்தின் மதிப்பு என்பது, கணக்கீடு சார்ந்தது தான். அதனால் இதை தேசிய விலை என குறிப்பிடலாம். மேலும் இந்த விலையானது அதன் ஸ்திரத்தன்மை சார்ந்ததே தவிர, அதன் அளவு சார்ந்தது அல்ல.

ஒரு நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவின் தன்மையை அதன் அளவைவிட, தேசத்தின் பொருளாதாரம் மீது தாக்கம் செலுத்தும், அதன் விகிதம் மற்றும் மாற்றத்தின் விகிதத்தை கொண்டே புரிந்து கொள்ள வேண்டும்.

இதன்படி பார்த்தால், அடிப்படையில் இந்திய ரூபாய் அந்த அளவுக்கு பலவீனமாகிவிடவில்லை. அதாவது கடந்த இரண்டு மாதங்களில் ரூபாய் விற்கப்படும் அளவுக்கு பலவீனமாக இல்லை. இதை புரிந்து கொள்ள, ரூபாயின் மதிப்பு சரிவுக்கான அடிப்படை பொருளாதாக காரணங்களை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டும்.

ரூபாய் மதிப்பு சரிவின் அளவு மற்றும் தீவிரத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டில் ரூபாய் 14 சதவீத சரிவை சந்தித்துள்ளது. 2008 பொருளாதாக தேக்க நிலையின் போது ஏற்பட்ட 19 சரிவுக்கு பின் ஏற்பட்டுள்ள அதிக சரிவு இது என்றாலும், 1991ல் உண்டானது போல, பாலன்ஸ் ஆப் பேமெண்ட் சிக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரியவில்லை.

இந்த சரிவை, மற்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்துடன் இணைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 2013 ம் ஆண்டில் மார்கன் ஸ்டான்லி நிறுவனம், பிராஜைல் பை எனும் பதத்தை உண்டாக்கியது. இந்தியா மற்றும் பிரேசில், துருக்கி, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்த பிரிவில் இடம்பெற்றன. இறக்குமதி மற்றும் வெளிநாட்டு கடன் பொறுப்புகளை நிறைவேற்ற அந்நிய மூலதனத்தை சார்ந்திருக்கும் நாடுகள் எனும் அடிப்படையில் இந்த பிரிவு உண்டாக்கப்பட்டது.

இந்த பிரிவில் உள்ள மற்ற நாடுகள் இரண்டு இலக்க நாணய சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியா இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக 5 முதல் 7 சதவீத சரிவையே சந்தித்துள்ளது. கடந்த 2 மாத கால சரிவை கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட, ரூபாயின் நிலை அத்தனை மோசமில்லை.

மேலும், நாணயத்தின் மதிப்பிற்கான அடிப்படை அம்சங்கள் இந்திய ரூபாயை பொருத்தவரை வலுவாகவே உள்ளது. எனவே தான், இந்திய ரூபாய் அதிக படியாக விற்கப்பட்டிருப்பதே (நாணய மாற்று உலகில், ரூபாயை விற்பவர்கள் அதிகரித்திருப்பது), இதற்கான காரணம் என கருதலாம். ரூபாயின் மதிப்பில் சரிவு என்று மட்டும் பாராமல், அது அளவுக்கு அதிகமாக விற்கப்படும் நிலை இருப்பதால் ஏற்பட்ட சரிவு என்று புரிந்து கொள்ளலாம்.

இதற்கான பொருளாதார காரணங்கள் என்று பார்த்தால், நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கமான போக்கு தான் முதல் காரணமாக அமைகிறது. சர்வதேச போக்குகள் காரணமாக, ரூபாயை பல முதலீட்டாளர்கள் விற்கும் நிலை உள்ளது. இதன் காரணமாகவே, பலரும் அடிப்படை அம்சங்களை கருத்தில் கொள்ளாமல், முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் தரகர்கள் போன்றவர்கள் சந்தை போக்கை பார்த்து முடிவு எடுக்கின்றனர். அதாவது ரூபாயை கையில் வைத்திருக்காமல் விற்கின்றனர்.

இந்த வகை போக்கை நிரூபிக்க ஆழமான ஆய்வுகள் இல்லை என்றாலும், இதை எளிதாக புரிந்து கொள்ளலாம். சர்வதேச அளவில் பங்குகளை, பத்திரங்களை விற்கும் பொதுவாக கரடி போக்கும் தாக்கமாக ரூபாயின் நிலையை கருதலாம். இந்த இரண்டு காரணங்கள் வெளிப்புறக் காரணங்கள் மற்றும் நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை.

ஆனால், பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகிய இரண்டு காரணங்கள் ரூபாயின் மதிப்பை பாதித்திருக்கும் உள்நாட்டு காரணிகளாகும். இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இவற்றிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதை தான் செய்ய முயன்று கொண்டிருக்கிறது. பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அந்நாட்டு மைய வங்கிகள் தடுமாறும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் இலக்கிற்குள் வைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெயின் விலையேற்றம் பண வீக்கத்தின் போக்கை பாதிக்கலாம். இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதால் இந்த போக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதும் கூட, ரூபாய் மதிப்பு தொடர்பாக நாம் காணும் வேறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், ரூபாயின் மதிப்பை உயர்த்த செயற்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.

பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறையை குறைப்பதில் கவனம் செலுத்தினாலே போதும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெற்றுவிடலாம். ரூபாய் சரிவில் இருந்து மீண்டு வரவும் இதுவே கைகொடுக்கும். அதுவரை ரூபாயின் மதிப்பு குறைவு பற்றி வீண் கவலைகள் தேவையில்லை.

யுவர்ஸ்டோரியில் ஆங்கிலத்தில் சைலேஷ் ஜா எழுதிய கட்டுரையின் சுருக்கமான வடிவம்.