ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

107

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது?? 

இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள ‘தோசா ப்ளாசா’, உலகளவில் 1500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் மகன் ப்ரேம் கணபதி என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

தூத்துக்குடியில் பிறந்து, சென்னையில் சிலகாலம் பணி, பின்பு வீட்டினருக்கு தெரியாமல் மும்பை வரை சென்று, பாஷை அரியாத ஊரில், உறவுகள் இன்றி, பல பணிகளை செய்து, பின்னர் தோசா பிளாசாவை நிறுவி, அங்கோடு நில்லாமல், அதை உலக ப்ராண்டாக ஆக்க கனவு கண்டு மெய்பித்த கணபதியின் வாழ்க்கை பயணம் மிக சுவாரசியமும், சவால்களும் நிறைந்தவை. தற்போது துபாய்க்கு குடிபெயர்ந்துள்ள ப்ரேம் கணபதியுடன் நடத்திய இரண்டு மணி நேர உரையாடலில், அவரது எளிமை, அவரது கடுமையான உழைப்பு, கண்ட கனவை நோக்கி அவர் ஓடிய பாதை, சந்தித்த தடைக்கற்கள் அதைதாண்டிய வெற்றிகள் இவையெல்லாம் கேட்கக்கேட்க என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது உண்மை. எளிய குடும்பத்தில் பிறந்த கணபதி, ப்ரேம் கணபதி ஆனது எப்படி? தோசை மீதான அவரது காதல், தன்னை போன்றே பலரையும் ஹோட்டலின் உரிமையாளர்கள் ஆக்கிய சாதனை, அதை நோக்கிய திட்டங்கள் என்று அவர் ந ம்மிடம் பகிர்ந்தவை...

தூத்துக்குடி முதல் துபாய் வரை

தூத்துக்குடி மாவட்டத்தில் நகலாபுரம் என்ற சிறிய கிராமத்தில், ஏழு குழந்தைகள் கொண்ட ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் கணபதி. அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கணபதியிடம், ஆசிரியை அவரது வாழ்க்கை லட்சியம் என்ன என்று கேட்டபோது, “சென்னைக்கு சென்று கடை வைத்து சுயமாக தொழில் செய்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றார். குடும்பப் பின்னணி காரணமாக படிப்பை தொடரப் போவதில்லை அதில் எனக்கு பெரிய ஈடுபாடும் இல்லை” என்று அன்றே தன் இலக்கை நிர்ணயித்தத்தாக கூறினார் கணபதி. 

தந்தையின் அனுமதியுடன் 1989இல் சென்னைக்கு வந்த 16 வயது கணபதி, ஊர்காரர் மூலம் தெரிந்தவர் நடத்தி வந்த ‘சரவணா காபி ஹவுஸ்’ என்ற காபி அறைத்து விற்கும் நிலையத்தில் உதவியாளனாக பணிக்கு சேர்ந்தார். சென்னை வாழ்க்கை அவருக்கு பிடித்திருந்தது. காபி ஆர்டர் எடுக்க பல தெருக்களில் சைக்கிளில் சுற்றித்திரிந்துள்ளார் கணபதி. 100ரூபாயுடன் தொடங்கிய சம்பளம், பணியில் காட்டிய உற்சாகத்தினால் 250ரூபாயாக உயர்ந்தது. ஒரு வருட காலம் அங்கே பணிசெய்துவிட்டு டி.நகரில் உள்ள மற்றொரு காபி விற்பனை கடையில் சேர்ந்து பணியில் வளர்ச்சி அடையத்தொடங்கினார் கணபதி. காபி கொட்டை வறுப்பது, அறைப்பது, அதை எப்படி விற்பது என்ற அனைத்து சூட்சமத்தையும் கற்றுக்கொண்ட அவர், தானே தனியாக கடை ஒன்றை தொடங்க யோசித்தார். ஆனால் அதற்கு முதலீடாக ரூ.50000 தேவையாக இருந்தது. 

அந்த ஒரு சமயம் நண்பரின் தம்பி மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கணபதியை தேடிவந்தது... அவர் பணியாற்றிவந்த இடத்தில் இருந்த நண்பரின் தம்பி மும்பையில் 1200ரூபாய் மாத சம்பளத்திற்கு கப்பலில் லோட்மேன் வேலை வாங்கி தருவதாக அவரை அழைத்தார். சம்பளம் அதிகமாக இருந்ததனால், வீட்டில் சொன்னால் மும்பை செல்ல அனுமதிக்க மாட்டார்கள், என்று யாரிடமும் சொல்லாமல் அந்த நண்பருடன் மும்பை ரயில் ஏறினார் கணபதி. 

”மும்பை புதிய ஊர், புதிய மக்கள், ஹிந்தி தெரியாது... பாந்த்ரா ஸ்டேஷனில் இருவரும் இறங்கினோம். டீ வாங்கிக்கொண்டு வருவதாக என்னை உட்காரவைத்துவிட்டு போனார் நண்பர். நேரம் கடந்ததே  ஒழிய ஆள் வரவில்லை. அதன்பின்னரே புரிந்தது அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றும் என்னிடம் எஞ்சி இருந்த 200 ரூபாய் பணத்தையும் திருடி சென்றுவிட்டார் என்று. நான் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் நின்றேன்...”

மனம் துவளாத கணபதி, அதிர்ஷ்டத்தின் மீது பாரத்தை போட்டுவிட்டு எப்படியும் வாழ்ந்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் மும்பை நகருக்குள் நடந்தார். பாந்த்ரா மாரியம்மன் கோவில் அருகில் இருந்த தமிழர் இவருக்கு உதவ முன்வந்து, சென்னை திரும்பி செல்ல பணம் கொடுத்து உதவினார். ஆனால் ஒரு கனவோடு மும்பை வந்த கணபதி, ஊருக்கு திரும்பி செல்ல மறுத்து மும்பையில் வேலை தேட ஆரம்பித்தார். 

”ஊருக்கு திரும்பி போனா கேவலம் என்று நினைத்தேன். இங்கே இருந்து எப்படியாவது உழைத்து சம்பாதிப்போம் என்று நானே எனக்கு தைரியம் சொல்லிக்கொண்டேன். நடந்த ஏமாற்றத்தை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொண்டேன்,” என்கிறார் மனமுதிர்வோடு.

மும்பை வாழ்க்கையும் சந்தித்த ஏமாற்றங்களும்

செய்வதறியாது தவித்த கணபதிக்கு அடுத்த நாளே, மாஹிமில் பேக்கரி ஒன்றில் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. அவர் அங்கேயே இரவு படுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் தங்க இடம் தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 6 மாத காலம் இப்படியே போனது. மாதம் 650ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இடையில் அங்குள்ள நண்பர்களுடன் சபரிமலை சென்றுவர பேக்கரியில் லீவு போட்டு சென்று திரும்பி வந்த கணபதிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அவரது பேக்கரி வேலை பறிபோனது. மீண்டும் வீதிக்கு வந்தவர் அடுத்தக்கட்டத்தை பற்றி சிந்திக்கையில், நண்பர் நித்யானந்தத்தின் உதவியால், செம்பூரில் உள்ள சைவ உணவகம் ‘சத்குரு’வில் ப்ரெட், பிட்சா டெலிவரி வேலைக்கு சேர்ந்தார் கணபதி. 6 மாதகால பணிக்கு பின், நவி மும்மை பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகம் ‘ப்ரேம் சாகர்’ எனும் இடத்தில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார். 

“நான் பத்தாவது வரை படித்துள்ளேன், சர்வர் வேலை தரும்படி அந்த ஹோட்டல் நிர்வாகியிடம் கேட்டேன், ஆனால் நான் தமிழர் என்பதாலும், நிறம் குறைவாக இருந்ததாலும் அந்த வேலையை தர மறுத்தனர். ஆனால் நான் எதற்கும் சோர்ந்துபோகவில்லை...” 

என்றார் கணபதி சிரித்துக்கொண்டே. மெல்ல மெல்ல ஹோட்டலில் இருந்து கடைகளுக்கு டீ, காபி கொடுக்கச் சென்றேன் என்று கூறும் அவர், அங்குள்ள கடைக்காரர்களுக்கு எந்த வகையான டீ பிடிக்குமோ அதற்கேற்ப தயார் செய்து கொடுப்பாராம். சுமார் 12 மணிநேரம் வேலை செய்வேன். அதனால் அவர்கள் அனைவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் என்றார். அதனால் எனக்கு டிப்ஸ் பணம் நிறைய கிடைத்ததால் சம்பளத்தோடு மாதம் 1000 ரூபாய் ஈட்டினேன் என்றார்.

டீ சப்ளை செய்த இடத்தில் ஒருவர், இவரது சுறுசுறுப்பை பார்த்து, அவருடன் இணைந்து ஒரு உணவகம் வைக்க கணபதியை அழைத்தார். அவர் முதலீடு செய்ய என்னை பணிகளை பார்த்துக்கொள்ளச் சொன்னார், லாபத்தில் பாதியை தருவதாக கூறியுள்ளார். மாத சம்பளத்தை விட தொழில் புரிவதே வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உடைய கணபதி, அந்த வாய்ப்பை ஏற்றார். 

”நாங்கள் தொடங்கிய உணவகம் நன்றாக சென்றது, ஆனால் என்னுடன் தொழில் தொடங்கியவர் என்னை ஏமாற்றினார். லாபத்தின் பங்கு தர மறுத்துவிட்டு, மாத சம்பளமாக 1200ரூபாய் தருவதாக கூறினார். மீண்டும் வாழ்க்கையில் ஏமாற்றம்... ஆனால் மனம் துவளவில்லை. சுயமாக நானே தொழில் தொடங்குவதே இதற்கு ஒரே வழி என்று முடிவெடுத்தேன்,” என்றார்.

தொழிலில் எடுத்த முதல் அடி

ப்ரேம் சாகர் ஹோட்டலில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு அங்கிருந்த நண்பர், கோவில்பாண்டி என்பவரின் உதவியோடு, தள்ளுவண்டி இட்லி-தோசை கடை போட முடிவெடுத்தார் கணபதி. 2 ஆண்டுகள் மும்பை வாழ்க்கையில் பழகிவிட்ட அவர், 1992 இல் ஊருக்கு சென்று அண்ணனை அழைத்துவந்து, 150ரூபாய் முதலீடு செய்து தள்ளுவண்டி ஒன்றை ரெடி செய்தார். 

“அருகில் இருந்த தமிழ்காரர்களிடம் இட்லி  மாவு அரைத்து வாங்கிக்கொண்டு, அம்மாவிடம் சாம்பார், சட்னியின் செய்முறைகளை கேட்டு கேட்டு நாங்களே இட்லி, தோசை செய்ய ஆரம்பித்தோம். தள்ளுவண்டியை கடைவீதியில் நிறுத்தி சுடச்சுட சுட்டுத் தருவோம்...” என்றார்.

மும்பையில் வாஷி, பரேல் என்று பல பகுதிகளில் தள்ளுவண்டியில் விற்பனை, 4 இட்லி 2ரூபாய், 1 தோசை 1.50ரூபாய் என்று விற்றுவந்ததை நினைவு கூறினார். தள்ளுவண்டி வைத்திருப்பதிலும் பல பிரச்சனைகள். காவல்துறை அனுமதி, சிலசமயம் ரோட்டில் நிற்கும் வண்டியை உடைத்துவிடுவர், இப்படி தினம் தினம் ஒரு பிரச்சனை. 

“மும்பை ஒரு பெருநகரம் அதனால் எங்கள் தள்ளுவண்டியை சுத்தமாக பெயிண்ட் அடித்து, அழகாக வைத்திருப்போம். சுகாதாரமும் எனக்கு முக்கியம். அதனால் இட்லி தோசையை அழகான தட்டுகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்போம். அவர்கள் கேட்கும் வகை தோசைகளையும் செய்து தருவேன், பென்ஸ் காரில் வந்தும் என் தோசையை சாப்பிடுவார்கள்...” 

அருகில் இருந்த என்ஐஐடி மையத்தில் படித்த மாணவர்களின் பிடித்த இடமாகிப் போனது எனது தள்ளுவண்டி கடை. அப்போது அழகர்சாமி என்ற நண்பர் கிடைத்தார். அதேசமயம் இவர்களின் கடை இருந்த தெரு அருகில் முதன்முதல் ’மெக்டொனால்ட்ஸ்’ தனது முதல் கிளையை திறந்தது. அதற்கு குவிந்த கூட்டத்தையும் அதில் விற்கப்படும் புதுவித உணவுவகைகள் கண்டும் பிரமிப்படைந்ததாக கூறினார் கணபதி. 

“உலக ப்ராண்டுகளுக்கு இத்தகைய வரவேற்பு கிடைக்க காரணம் என்ன? நம்மால் இதுபோன்ற உலகம் போற்றும்  உணவுமையத்தை நிறுவ முடியாதா? என்றெல்லாம் மனதில் தோன்றியது... ஆம் அன்றுதான் முடிவெடுத்தேன், இதுவே என் இலட்சியம் என்று...” 

பெரிய அளவில் சாதிக்க துடித்த கணபதி, நண்பர் அழகர்சாமியிடம் இருந்து கணினி உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளார். தினமும் சில மணி நேரம் கணினியில் உலகில் உள்ள ப்ராண்டுகள் பற்றியும் தொழில் வளர்ச்சி, உணவுத்துறை குறித்து படித்து அறிவை வளர்த்துக்கொண்டுள்ளார். 

தொழிலை ப்ராண்டாக உயர்த்த கண்ட கனவு

1998இல் வாஷி ஸ்டேஷன் வாசலில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து தனது முதல் கடையை திறந்து “ப்ரேம் சாகர் தோசா ப்ளாசா” என்று பெயரிட்டு தொடங்கினார் கணபதி. உலக அளவில் ஒரு ப்ராண்டாக அடி எடுக்க, பர்கர் என்றால் மெக் டொனால்ட்ஸ், கோலா என்றால் கோக கோலா, இந்த வழியில் தோசை என்றால் ‘தோசா ப்ளாசா’ என்று உருவாக்க திட்டமிட்டு அதை நோக்கி செயல்பட தொடங்கியதாக கூறுகிறார். சைனீஸ் உணவு பற்றி தெரிந்துகொண்டு அதை தோசையில் கலந்து புதியவகைகளை செய்ய ஆரம்பித்தார்கள். 

“மக்களிடம் எங்கள் புதுவகை தோசைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சாப்சூ தோசா, சேஸ்வான் தோசா என்று பல பெயர்களில் சுமார் 25 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினோம்.” 

மெல்ல மெல்ல சூடு பிடித்தது பிசினஸ். தோசை வகைகளுக்கு ஏற்ற புதுவித சாஸ்கள், சட்னி உருவாக்கினோம். 2003 இல் புதிய மால் ஒன்று திறக்கப்பட்டது. அதில் ஒரு பெரிய கடையை திறந்தார் கணபதி. இது இவரது வெற்றிப் பயணத்தின் முதல் அடி. ‘ப்ரேம் சாகர்’ ஹோட்டலில் பணிபுரிந்தமையால் ப்ரேம் என்று தனது ஹோட்டலின் பெயரில் சேர்த்துக்கொண்டதாக கூறும் அவரை எல்லாரும் ப்ரேம் கணபதி என்றே அழைக்கத்தொடங்கினர் என்றார். 

ஒரு ப்ராண்டாக இதை உருவாக்க, எங்கள் உணவக பெயரை ‘தோசா ப்ளாசா’ என்று மாற்றி, லோகோ ஒன்றை வடிவமைத்து கொடுத்தனர் வல்லுனர்கள். ஒரு மாலில் தொடங்கி ஆங்காங்கே பல மால்களில் கிளைகளை திறந்தார் ப்ரேம் கணபதி. பர்கருக்கு கோக்க கோலா கொடுப்பதை போல் தாமும் தோசைக்கு கூட கோலா கொடுக்க முடிவெடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கோக கோலா பவுண்டென் மெசின் வாங்க முற்பட்டார். ஆனால் தோசை போன்ற இந்திய உணவுக்கு அந்த மெசினை தர மும்பை விநியோக அலுவலர் மறுப்பு தெரிவித்தது ப்ரேம் கணபதியை வருத்தத்தில் ஆழ்த்தியது. 

“நான் அதோடு விடுவதாக இல்லை. கோககோலா’வின் அமெரிக்க தலைமை அலுவலக மெயில் ஐடியை கண்டுபிடித்து, என்னை மும்பையில் அவமானப்படுத்தியதாக எழுதினேன். எங்களுக்கு நல்ல விற்பனை மாதிரி இருந்தும் பவுண்டென் மெசின் தர மறுப்பது பற்றி விளக்கி இருந்தேன். என் முயற்சிக்கு பலன் கிட்டியது. அடுத்த நாளே அவர்களே வந்து எங்கள் உணவகத்தில் கோககோலா பவுண்டென் மெசின் வைத்துவிட்டு சென்றனர்,”  

என்ற தனது விடாமுயற்சியின் பலனை பெருமிதத்துடன் பகிர்ந்தார். தொழிலில் வளர்ச்சி அடைய உலக அளவில் பிரபலம் அடைய ‘ப்ரான்சைஸ்’ முறை சிறந்தது என்று அறிந்து கொண்டு மும்பையில் தானே’வில் முதல் ப்ரான்சைஸ் கிளையை திறந்தார். பின் ஆங்காங்கே மால்களில் எங்கள் ப்ராண்ட் பெயர்களில் கிளைகள் பிறந்தது. தோசா ப்ளாசா பிரபலம் அடையத்தொடங்கியது என்றார். 

உலக சந்தையில் அடிஎடுக்க கனவு கண்ட ப்ரேம் கணபதி, தனது முதல் சர்வதேச கிளையை நியுசிலாந்தில் 2008இல் தொடங்கினார். பின் துபாய், மஸ்கெட், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என்று தடையில்லாமல் கிளைகள் விரியத்தொடங்கியது. தற்போது இந்தியா முழுதும் 52 கிளைகளோடும், வெளிநாடுகளில் சுமார் 10 கிளைகளோடும் வளர்ந்துள்ள ‘தோசா ப்ளாசா’, மேலும் பல கிளைகளை ப்ரான்சைஸ் முறையில் வரும் ஆண்டில் தொடங்கவுள்ளது. தென்னிந்திய உணவான தோசையை அளிக்கும் தோசா ப்ளாசாவின் கிளை, சென்னையில் இல்லையா என்று ஆர்வத்துடன் கேட்டேன்? சென்னையில் இடம் மற்றும் ப்ரான்சைஸ் எடுத்து பணிகள் நடப்பதாகவும் அடுத்த ஆண்டு தோசா ப்ளாசா திறக்கப்படும் என்று பதில் வருகிறது. 

ஹவுஸ் ஆஃப் பார்லிமெண்ட், லண்டன்
ஹவுஸ் ஆஃப் பார்லிமெண்ட், லண்டன்

தோசா ப்ளாசா’வை ஆரோக்கியமான சைவ உணவக ப்ராண்டாக முன்னெடுத்து செல்ல நினைக்கும் ப்ரேம் கணபதி, தன் சகோதரர்கள், தன்னுடையா ஆரம்பகால நண்பர்கள் பலரையும் இன்றும் தன்னுடன் நிறுவனத்தில் வைத்துள்ளார். உயர் பதவிகள் கொடுத்து, எல்லாருக்கும் நல்வழியை காட்டியுள்ளார். தன்னைப்போல் அவர்களும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆவதையும் அவர் ஊக்கப்படுத்தி ப்ரான்சைஸ் பார்டனராகவும் ஆக்கிக்கொண்டுள்ளதாக கூறினார். 

150 ரூபாயில் தொடங்கி இன்று 50 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, நினைத்த இலக்கை அடைந்துள்ள ப்ரேம் கணபதியிடம் இறுதியாக இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று கேட்டால்?

“எத்தனையோ முறை நான் தோல்வி அடைந்திருந்தாலும், ஒருநாளும் மனம் துவண்டதில்லை, அடுத்த தினமே மீண்டும் என் பணியை தீவிரமாக செய்ய புறப்பட்டுவிடுவேன். குடும்பப்பொறுப்பை என் மனைவி முழுமையாக ஏற்று நடத்தியதால் நான் என் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்தமுடிந்தது. இன்னமும் சாதிக்க உழைத்து கொண்டே இருப்பேன்...” 

என்று கூறி உரையாடலை முடித்துக்கொண்டார்.  


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan