எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமஉரிமை: பாராளுமன்ற இருஅவைகளிலும் மசோதா நிறைவேற்றம்!

0

எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்விதமான பாரபட்சமான செயலுக்கும் ஆட்படுவதைத் தடுக்கவும் முறையான சிகிச்சை பெறவுமான சம உரிமை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமானதொரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. மனிதர்களின் நோய்த்தடுப்புச் சக்தியைக் குறைக்கும் கிருமி (எச்.ஐ.வி.), பெறப்பட்ட நோய்த்தடுப்பு சக்தி குறைவுக்கான நோய்க்குறி (எய்ட்ஸ்) (தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தலுக்கான) 2017ஆம் ஆண்டின் மசோதா இந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதியன்று மாநிலங்களவையாலும், ஏப்ரல் 11-ம் தேதியன்று மக்களவையாலும் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் முதன்முதலாக 1986-ம் ஆண்டில் சென்னையில் இருந்த பெண் பாலியல் தொழிலாளிகளிடையே எச்.ஐ.வி கிருமியினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் எச்.ஐ.வி பரவுதல் குறைந்து கொண்டு வந்தபோதிலும், தென் ஆப்ரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளை அடுத்து எச்.ஐ.வி பெரிதும் பரவியுள்ள மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இப்போதும் இருந்து வருகிறது. 

இந்தியா இப்போது புதிதாக நிறைவேற்றியுள்ள எச்.ஐ.வி குறித்த மசோதா தெற்காசியாவிலேயே முதலாவதாகும். இத்தகைய பாரபட்சமான வகைகளைத் தடை செய்யும் வகையில் சில சட்டங்களை தென் ஆப்ரிக்காவும், நைஜீரியாவும் கூட இயற்றியுள்ளன. இந்தியாவில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட சுமார் 21 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் சுமார் 86,000 பேர் புதிதாக எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 66 சதவீதம் குறைவாகும். 2015-ம் ஆண்டில் எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் சுமார் 68,000 பேர் இறந்துள்ளனர். புதிதாக இந்நோய் தொற்றுவதைத் தடுக்கவும், 2030-ம் ஆண்டிற்குள் இந்த நோய்க்கு முடிவு கட்டுவதற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடையவும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு இந்த மசோதா உதவி செய்வதாக அமையும்.

எச்.ஐ.வி./எய்ட்ஸ் ஆகியவை தம்மோடு ஏராளமான அவமானங்களையும் அவதூறுகளையும் பாரபட்சமான அணுகுமுறையையும் கொண்டதாக அமைந்துள்ளன என்ற நிலையில் இத்தகையதொரு சட்டம் இந்த நாட்டிற்குத் தேவைப்படுகிறது என்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைகிறது. அரசின் முயற்சிகளாலும், மக்கள் சமூகத்தின் பங்களிப்பாலும் கடந்த பல வருடங்களில் இந்த நோயாளிகள் மீதான பாரபட்சமான போக்கு குறைந்துள்ள போதிலும், இன்னும் தொடர்ந்தே வருகிறது. இந்தப் போக்கிற்கு முடிவு கட்டுவதில் இந்தப் புதிய சட்டம் பெருமளவிற்கு உதவி செய்வதாக அமையும். 

வேலைவாய்ப்பை மறுப்பது அல்லது வேலையிலிருந்து நிறுத்தி விடுவது, கல்வி, மருத்துவ சேவைகள், வாடகைக்கு விடுவது அல்லது தங்க அனுமதிப்பது, பொது அல்லது தனியார் அலுவலகம், காப்பீடு, பொதுச் சேவைகள் போன்ற வசதிகளை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது ஆகியவற்றை இதனால் பாதிக்கப்பட்டோர் எதிர்கொள்ளும் பாராபட்சங்களாக இந்த மசோதா சுட்டிக் காட்டியுள்ளது. 

இத்தகைய விஷயங்களில் அரசு அல்லது எந்தவொரு நபரும் அநியாயமாக நடந்து கொள்வது பாரபட்சமான நடவடிக்கையாகவே கருதப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றாகவே கருதப்படும். வேலையைப் பெற, மருத்துவ வசதி அல்லது கல்வி வசதியைப் பெற வேண்டுமெனில் அவர் எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிவதற்கான சோதனை எவர் மீதும் நடத்தப்படக் கூடாது எனவும் இந்த மசோதா குறிப்பிடுகிறது. 

எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதை மட்டுமின்றி, எவரொருவரும் எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டவருக்கு எதிரான வெறுப்புணர்வை வெளியிடுவதற்கும் இது தடை விதிக்கிறது. இவர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நன்கறிந்த வகையிலான ஒப்புதல் இல்லாமல் எச்.ஐ.வி. க்கான சோதனையையோ அல்லது மருத்துவ சிகிச்சையையோ மேற்கொள்வதையும் இந்த மசோதா தடை செய்கிறது.

 எனினும், அனுமதிபெற்ற ரத்த வங்கிகள், மருத்துவ ஆராய்ச்சி அல்லது அடையாளம் ஏதுமற்ற வகையிலான சோதனையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, அந்த நபரின் எச்.ஐ.வி. தகுதியை இறுதிப்படுத்துவதற்கான சோதனையாக அல்லாத போன்றவற்றிற்கு இத்தகைய நன்கறிந்த வகையிலான ஒப்புதல் தேவையில்லை. இந்த மசோதாவின்படி எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டவர் தனது நிலையை நீதிமன்ற உத்தரவின்படி வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கும்போது மட்டுமே வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.

இவர்களுக்கெதிரான பாரபட்சப் போக்கைக் கடைப்பிடிப்பது, நம்பகத்தன்மையை குலைப்பது ஆகியவற்றுக்கும் தண்டனை வழங்கும் ஏற்பாடுகளும் இதில் அடங்கியுள்ளது. 

”இந்த மசோதாவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் எவராயினும் அவர்கள் தண்டனைக்கு உரியவர்களாவர். இத்தகைய நபர்களுக்கு எதிராக பொதுவான, குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” 

என சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார். இந்த மசோதாவை அமல்படுத்துவதற்குத் தடை செய்ய முயற்சிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டவரின் ரகசியத் தன்மையை மீறுபவர்களுக்கு இரண்டு வருடம் வரையிலான சிறைத்தண்டனையும் ரூ. ஒரு லட்சம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை அல்லது நோய்க்கிருமி மீண்டும் தாக்காத வகையிலான சிகிச்சை என்பது தற்போது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்ற போதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய சிகிச்சையைப் பெறுவதென்பது அவர்களின் சட்டபூர்வமான உரிமை என்பதாக இந்த மசோதா மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

“அரசின் பொறுப்பில் உள்ள ஒவ்வொருவருமே எச்.ஐ.வி. நோய்த் தடுப்பு, சோதனை, சிகிச்சை, ஆலோசனை ஆகியவற்றை பெறுவதற்கான உரிமை உள்ளவர்களாக அமைகின்றனர்” என இந்த மசோதா குறிப்பிடுகிறது. 

எனவே எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை, சந்தர்ப்பவசமாக தொற்று ஏற்பட்டவர்களுக்கு அத்தகைய தொற்றை நிர்வகிப்பதற்கான சேவைகள் ஆகியவற்றை மத்திய-மாநில அரசுகள் வழங்கும். எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் ஆகியவை மேலும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். 

நோய்க்கிருமி மீண்டும் தாக்காத வகையிலான சிகிச்சைக்கென அரசு கடந்த ஆண்டில் ரூ. 2,000 கோடி செலவழித்துள்ளது. 

மனிதர்களின் நோய்த்தடுப்புச் சக்தியைக் குறைக்கும் கிருமி (எச்.ஐ.வி.), பெறப்பட்ட நோய்த்தடுப்பு சக்தி குறைவுக்கான நோய்க்குறி (எய்ட்ஸ்) (தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான) மசோதா 2014ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்களால் மாநிலங்கள் அவையில் பிப்ரவரி 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இப்போதைய அரசால் இந்த மசோதாவில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே முதலில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 

உதாரணமாக, ‘சோதிப்பது, சிகிச்சை தருவது’ என்ற கொள்கையை இந்த மசோதா கடைப்பிடிப்பதாக உள்ளது. அதாவது இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் என உறுதி செய்யப்படும் எவரொருவரும் மத்திய-மாநில அரசுகளிடமிருந்து இலவசமாக சிகிச்சை பெறுவதற்கான உரிமை பெற்றவராகிறார். எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் அடங்கியுள்ளன. 

18 வயதிற்குக் கீழான, எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவருக்குப் உரிமையுள்ள வீட்டில் வசிப்பதற்கும் அந்த வீட்டில் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்கும் உரிமை உள்ளது. எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என்றும் இந்த மசோதா வரையறுக்கிறது. 

எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கையிலும் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்டவராக இருப்பின், அந்த நபரின் அடையாளத்தை மறைத்து விட்டு, அந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகளை, மூடிய அறைக்குள், மறைவான வகையில் நடத்துவதற்கு நீதிமன்றம் உத்திரவிடலாம் என்பதோடு, இந்த மனுதாரரின் அடையாளத்தை வெளியிடும்படியான எந்தவொரு தகவலையும் எவரொருவரும் பதிப்பிக்க்க் கூடாது என்றும் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். 

எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்ட நபரால் பதிவுசெய்யப்பட்ட பராமரிப்புச் செலவுத் தொகைக்கான விண்ணப்பத்தின் மீது எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும்போது அந்த மனுதாரர் எதிர்கொள்ள வேண்டிய மருத்துவச் செலவுகளையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டத்தை மீறுவது, மருத்துவ சேவைக்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்த புகார்களை விசாரிக்கவென ஒவ்வொரு மாநிலமும் குறைகேள் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா குறிப்பிட்டுள்ளது. தன்னிடம் வந்த புகார்களின் எண்ணிக்கை, எடுக்கப்பட்ட நடவடிக்கை, பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ஆகியவை குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த குறைகேள் அதிகாரி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் குறைகேள் அதிகாரியின் உத்தரவைச் செயல்படுத்தாதவர்கள் மீது ரூ. 10,000/- அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்துள்ளது.

பாலியல் தொழிலாளிகள், தன்பாலின சேர்க்கைப் பழக்கமுள்ள ஆண்கள், திருநங்கைகள், போதைப் பொருட்களுக்கு அடிமையானோர் போன்ற எச்.ஐ.வி. தொற்றக்கூடிய அபாயம் உள்ள பிரிவினர், எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டோர், மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள், சிறுவர்களின் அமைப்புகள், பெண்களின் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வழக்கறிஞர்கள், மாநில அளவிலான எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகங்கள் உள்ளிட்டு இது தொடர்பானவர்களிடம் நாடுதழுவிய அளவில் கலந்தாலோசனை நடத்தப்பட்ட பிறகே இந்த மசோதா வடிவமைக்கப்பட்டது.

(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையின் ஆங்கில ஆசிரியர் சவிதா வர்மா; அறிவியல்- மருத்துவம் தொடர்பான துறைகளில் 18 வருடங்களுக்கு மேலான அனுபவமுள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஆவார். இவர் இதற்கு பிடிஐ செய்தி நிறுவனத்திலும் வேறு சில முக்கிய நாளிதழ்களிலும் பணியாற்றியவர் ஆவார். இக்கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்களே ஆகும்.)