வர்தா புயலால் சேதமடைந்த சென்னை எம்ஐடி வளாக மறுசீரமைப்பு பணியில் முன்னாள் மாணவர்கள்!

0

அண்மையில் சென்னையை புரட்டி போட்ட வர்தா புயல், நகர் முழுதுமுள்ள பல்லாயிரக் கணக்கான மரங்களை சாய்த்துள்ளது. இதே போன்று தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகபட்டினத்தை அடித்த ஹுட் ஹுட் புயல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. வைசாக்கின் பசுமையை அழித்தது போலவே தற்போது சென்னையிலும் புயலின் போது 140 கிமி வேகத்தில் அடித்த சூறாவளி காற்று சுமார் 17000 மரங்களை வேரோடு சாய்ந்தது. சென்னையில் உள்ள பல பள்ளி, கல்லூரிகளில் உள்ள மரங்களும் இதில் விழுந்து பசுமை இழந்து காணப்படுகின்றன.  

எம்ஐடி அதாவது Madras Institute of Technology (MIT) சேர்ந்த மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து தங்கள் கல்லூரி வளாகத்தில் கீழே விழுந்துள்ள மரங்களை ஈடு செய்ய புதிய மரங்களை நடுவதற்கான பணியை கையில் எடுத்துள்ளனர். இதற்காக, ’ஏதென்னியம்’ ‘Athenaeum’ என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து கூட்டுநிதி தளம் கெட்டோ Ketto மூலம் நிதி திரட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில்,

“வர்தா புயல் சென்னையில் உள்ள மரங்களை வேரோடு சாய்த்துள்ளது, அதில் எம்ஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள பெரும்பாலான மரங்களும் அடங்கும். இதனால் சில கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் மாணவர்களும், ஆசிரியர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இழந்த மரங்களை மீண்டும் பெற பல ஆண்டுகள் ஆகும், இருப்பினும் அதற்கான முயற்சியை உடனடியாக எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.” 

தி நியூஸ் மினிட் தளத்திற்கு பேட்டியளித்த முன்னாள் மாணவர் ஒருவர்,

“எம்ஐடி வளாகம் புயலுக்கு பின் மோசமான நிலையில் உள்ளது. இதற்கான விழிப்புணர்வை நான்கு நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளோம். இந்த கல்லூரி அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது, அதனால் எங்களிடம் இருந்து நிதியுதவி அவர்களுக்கு தேவையில்லை இருப்பினும் நாங்கள் எங்கள் கல்லூரிக்காக நிதி பெற்று அதை பயன்படுத்த விரும்புகின்றோம்.” 

தங்களின் பிரச்சாரத்திற்கு, “எம்ஐடி உண்மையான அழகை மீட்டெடுப்போம்” "Restore MIT to its original glory", என்று பெயரிட்டுள்ள இந்த குழுவில் சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் உதவ முன்வந்துள்ளனர். பல்கலைகழக டீன் உடன் பேசி அதற்கான அனுமதியை பெற்றுள்ளனர். வளாகத்தை சுத்தம் செய்ய, புதிய கன்றுகளை நட மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக கெட்டோவில் இருந்து பெறப்போகும் நிதியை பயன்படுத்த உள்ளனர். அதை தவிர தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் இதற்காக பேசி வருகின்றனர். 

“புதிய கன்றுகளை எப்படி நடுவது, பாழடைந்த மரங்களை எப்படி சீரமைப்பது, சேதமடைந்த கட்டிடங்களை சரிசெய்யும் முறைகள் பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம். எங்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் 2017 ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெறும், பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கும்,” என்று மாணவர் ஒருவர் தெரிவித்தார். 

இவர்கள் கூட்டுநிதி மூலம் சுமார் 5 லட்ச ரூபாய் திரட்ட இலக்கு வைத்துள்ளனர். 

கூட்டுநிதி செலுத்த விரும்புவோர்: "Restore MIT to its original glory"