கலைஞர்களை புக் செய்ய ஆன்லைன் தளம்: எஸ்.பி.பி. உறுதுணையுடன் அறிமுகம்!

0

பெர்ஃபார்மிங் ஆர்டிஸ்ட் எனப்படும் நிகழ்த்துக் கலைஞர்களுக்காக "ஜில்மோர்" (JilMore) என்ற ஆன்லைன் புக்கிங் தளத்தை, பிரபல திரையிசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உறுதுணையுடன் தொடங்கியிருப்பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த யுக்தா என்டர்டெயின்மென்ட் சர்வீஸஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே ரூ.50 லட்சம் அளவில் முதலீட்டைக் கொண்டுள்ள இந்த ஸ்டார்ட்அப், மார்ச் மாதத்துக்குள் ஒரு மில்லியன் டாலர்கள் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் ஜில்மோர் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சாரதி பாபு ரசாலா தெரிவித்தார்.

கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழா முதலான தனிப்பட்ட - குடும்ப நிகழ்ச்சிகளுக்காக பாடகர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி நடத்துபவர்கள், பிரபலங்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், மேஜிக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு நிகழ்த்துக் கலைஞர்களை ஜில்மோர் மூலம் நாடலாம். இது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறும்போது, "நான் நிறைய திறமையான பாடர்களைப் பார்க்கிறேன். அவர்களை அணுக விரும்புபவர்களையும் காண முடிகிறது. என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது... அவர்களின் திறமையை வெளிப்படுத்த என்னால் எப்படி உதவ முடியும்?" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "நிகழ்த்துக் கலைஞர்கள் தங்கள் கலைத் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்துவதற்கு இந்த தொடக்க நிறுவனம் உறுதுணைபுரியும் என்று நம்புகிறேன்" என்றார் ஜில்மோர் தளத்தின் விளம்பரத் தூதராகவும் அங்கம் வகிக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

கூகுள் ப்ளே ஸ்டோரியில் ஜில்மோர் செயலியை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்ற ரசாலா, "வாடிக்கையாளர்கள் பிரவுஸ் செய்து கலைஞர்களின் புரொஃபைல் டேட்டாக்களைப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட தேதி, நேரத்தில் நடக்கும் தங்களது நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்கலாம். அதுபோன்ற அழைப்பை குறிப்பிட்ட அந்தக் கலைஞர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதன் பின்னர் ஆன்லைனில் தொகை செலுத்தி அவரை உடனே புக் செய்யலாம்" என்றார்.

தற்போது, ஜில்மோர் நிறுவனம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவை மையப்படுத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த நிறுவன சேவையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழில்: கீட்சவன்