ப்ளாஸ்டிக் அற்ற நகரமாக மாற்றும் முயற்சிக்கு கைகோர்த்த கேரள தொழில்முனைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!

1

கேரளாவின் கண்ணுரைச் சேர்ந்த ஒரு திட்டம்தான் கலெக்டர்ஸ்@ஸ்கூல் (Collectors@School). இத்திட்டம் உன்னதமான விளைவை ஏற்படுத்த உன்னதமான வழிமுறைகளை பின்பற்றுகிறது. இவர்கள் கழிவு மேலாண்மை பிரிவில் செயல்படுகின்றனர். கழிவுகளை வகைப்படுத்துதல் மற்றும் மறுசுழற்கு உட்படுத்துதல் ஆகிய பணிகளில் கவனம் செலுத்துகின்றனர். 

இந்த நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இதன் மூலம் இயற்கையின் மீது அக்கறை கொள்ளும் ஒரு உணர்வை மாணவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்துகின்றர். அத்துடன் லாபமும் ஈட்டுகின்றனர். 

இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். முதலில் கல்வி நிறுவனங்கள் கழிவு மேலாண்மை செயல்முறை சார்ந்த சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட்டு கலெக்டர்ஸ்@ஸ்கூல் உடன் இணையவேண்டும்.

பின்னர் கழிவுகளை அகற்றும் ஏஜென்சிக்களுடன் கழிவுகளின் அளவு மற்றும் கழிவுகள் அகற்றப்படவேண்டிய கால இடைவெளி ஆகியவை குறித்து பள்ளி ஒப்பந்தம் போட்டு அவர்களுடன் இணைந்து செயல்படும்.

இந்தப் பள்ளியின் மாணவர்கள் தொடர்ந்து மறுசுழற்சிக்கு உகந்த ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படுவார்கள். ஒரு ஆசிரியரோ அல்லது மாணவர் பிரதிநிதியோ ஒவ்வொரு மாணவர் சேகரிக்கும் தொகுப்புகளின் விவரங்களையும் கழிவு மேலாண்மை தகவல் அமைப்பு (W-MIS) என்கிற ஆன்லைன் தளத்தில் பதிவு செய்வார்கள். அவர்கள் சேகரித்த கழிவுகளின் அடிப்படையில் வெகுமதி புள்ளிகளும் வழங்கப்படும். திறன் மேம்பாட்டு டூல்கள், கம்ப்யூட்டர் மற்றும் டெக்னாலஜி அப்ளிகேஷன்கள், ப்ராஜெக்ட் கிட், விளையாட்டு கிட்கள் போன்ற பயனுள்ள பொருட்களை வாங்குவதற்கோ அல்லது பள்ளியில் மேற்கொள்ளப்படும் தொழில்முனைவு முயற்சிகளுக்கோ இந்தப் புள்ளிகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கழிவுகளை அகற்றும் ஏஜென்சியானது ஒப்பந்தப்படி பள்ளியிலிருந்து கழிவுகளை சேகரிக்கும். இதன் மூலம் கிடைக்கும் தொகையானது மாணவர்களுக்கு வெகுமதி வழங்க பயன்படுத்தப்படும். கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். அதிக வெகுமதி புள்ளிகள் பெற்ற கல்வி நிறுவனங்கள் முறையாக அங்கீகரிக்கப்படும்.

இது வரையிலான பயணம்…

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற கோபகுமார் முதலில் இந்த திட்டம் குறித்து சிந்தித்தார். இவர் Doer’s Club என்கிற கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப்பின் நிறுவனர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் கல்வி ஸ்டார்ட் அப் குறித்து ஆராய்ந்தார்.

”ஸ்டார்ட் அப் சூழலானது உத்திகளை உருவாக்குதல், திறம்பட செயல்படுத்துதல், நிதி மாதிரிகளைக் கையாள்வது போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்குத் தேவையான முக்கிய அம்சங்களைக் கற்றுக்கொடுத்தது. என்னுடைய பணியின் ஒரு பகுதியாக தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்பில் இருந்தேன். கல்விக்கும் பணி புரிவதற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளியை உணர்ந்தேன். எதிர்காலத்திற்கான திறன்கள் வகுப்பறையில் கற்பிக்கப்படவேண்டும். இதை மையமாகக் கொண்டு வாழ்க்கைத் திறனை கற்றுக்கொடுக்கவும் முழுமையான வளர்ச்சிக்காகவும் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் Doer’s Club துவங்கப்பட்டது.”

ஒரு முறை வீட்டிற்கு வந்தபோது வீடுகளிலும் நகரங்களிலும் பின்பற்றப்பட்ட கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் அவரை பெரிதும் பாதித்தது. ஒரு புறம் கழிவுகளை வகைப்படுத்துவது குறித்த போதுமான புரிதலோ அவற்றை மேற்கொள்வதற்கு தயார்நிலையோ மக்களிடையே இல்லை. மற்றொருபுறம் ப்ளாஸ்டிக் கழிவுகளுக்கான நிலையான கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி அமைப்பு இல்லை.

இந்திய நகரங்களில் 62 மில்லியன் டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகிறது. இதில் 11.9 மில்லியன் டன் மட்டுமே மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. மீதமிருக்கும் கழிவுகள் குப்பைகளாகவே நிலத்தில் தங்கிவிடுகின்றன. உண்மையில் 98 சதவீத திடக்கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடியதாகும்.

தொழில்முனைவிற்கான உந்துதலுடன் ப்ளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் பள்ளிக்குழந்தைகள் இணைத்துக்கொள்ளும் வகையில் ப்ளாஸ்டிக்கிற்கான மறுசுழற்சி வங்கிக்கான மாதிரியை கோபகுமார் உருவாக்கினார். 

அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மிர் மொஹமத் அலி ஐஏஎஸ் (கண்ணூர்) கலெக்டர்ஸ்@ஸ்கூல் என்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது ப்ளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க பள்ளிகளுடனும் நகராட்சியுடனும் இணைந்து செயல்படும் முயற்சியாகும். மிர் ’ப்ளாஸ்டிக் இல்லாத கண்ணூர்’ திட்டம் வாயிலாக ப்ளாஸ்டிக் பைகள் மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய தட்டுகள் மற்றும் கப்கள் போன்றவற்றின் பயன்பாட்டை தடுப்பது குறித்த பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தினார். அத்துடன் இவற்றைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

இவ்விருவரும் ஒன்றிணைந்து 2017-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி எட்டு பள்ளிகளுடனும் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் இரு ஆலைகளுடனும் கலெக்டர்ஸ்@ஸ்கூல் ஃபேஸ் 2 துவங்கினர்.

தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள்

குறைவான முதலீட்டுடன் இந்த திட்டம் துவங்கப்பட்டு முதல் மாதத்திலேயே லாபமோ நஷ்டமோ இல்லாமல் செயல்பட்டது. தற்போது லாபம் ஈட்டத் துவங்கும் நிலையில் உள்ளது. முதல் நான்கு மாதங்களிலேயே கலெக்டர்ஸ்@ஸ்கூல் ஃபேஸ் 2 குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்தது. 150 பள்ளிகளை இணைத்துக்கொண்டு நேரடியாக 38,000 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இவர்கள் 3.15 டன் ப்ளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்துள்ளனர்

கோபகுமார் தனது லாபம் ஈட்டும் வருவாய் மாதிரி குறித்து உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பகிர்ந்துகொள்கிறார். வருவாய்க்கு இரண்டு முக்கிய வருவாய் மாதிரிகள் உள்ளது. முதலில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் விற்பனை மூலம் லாபம் கிடைக்கிறது.

”நாங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த ப்ளாஸ்டிக்கிற்கும் சில்லறை மற்றும் மொத்த விலை உள்ளது. நாங்கள் சில்லறை விலையில் ப்ளாஸ்டிக்கை சேகரித்து மொத்த விலையில் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறோம். இதில் அதிக லாபம் ஈட்டப்படுகிறது.”

ஏற்கெனவே குறிப்பிட்டது போல பள்ளிகள் மற்றும் மாணவர்கள் கழிவுகளை சேகரித்து வகைப்படுத்தும் முயற்சிக்காக வெகுமதி புள்ளிகள் வழங்கப்படுகிறது. இவர்களது இரண்டாவது வணிக மாதிரியில் இந்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் பொருட்கள் மூலம் லாபம் ஈட்டப்படுகிறது.

”நாங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் மதிப்பு சார்ந்த புள்ளிகளை வழங்குவதால் இதைப் பயன்படுத்தி எங்களது ஆன்லைன் அப்ளிகேஷனான W-MIS-ல் இணைக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் கார்ட் (online cart) வாயிலாக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். கார்ட்டில் இருக்கும் பொருட்கள் வாயிலாகவும் லாபம் ஈட்டுகிறோம்.

இந்த முயற்சி தொழில்நுட்ப தளம் வாயிலாக இயங்குவதால் இவர்களது திட்டம் அதிக சிரமமின்றி வளர்ச்சியடையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது ஆன்லைன் அப்ளிகேஷனை மேலும் வலுவடையச் செய்யவும் அதிக மாணவர்களையும் பள்ளிகளையும் கையாள்வது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் ஆன்லைன் கார்ட்டை விரிவுபடுத்தவும் திட்டமிட்டு வருகிறோம். இந்த வணிக மாதிரியை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகளை தானியங்கி முறையாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்.

ஆங்கில கட்டுரையாளர் : சௌரவ் ராய் | தமிழில் : ஸ்ரீவித்யா