ஆங்கிலத்தில் பேச தெரியாத வெங்கட் மாரோஜு உலகளாவிய சமூக நிறுவனத்தின் தலைவரான கதை!

0

"சோர்ஸ் டிரேசஸ் இசர்வீசஸ் எவ்வரிவேர்" (SourceTrace’s eServices Everywhere) (ESE) என்பது வேளாண்மை, நிதிச் சேவைகள் மற்றும் சில்லரை வர்த்தகம் தொடர்பான தகவல்களை மொபைல் மற்றும் டேட்டா நெட்வொர்குகள் மூலமாக வளரும் பொருளாதாரங்கள் தொடங்கி மிகவும் பின்தங்கிய பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் பெற உதவும் ஒரு மேடையாகும். இந்த நிறுவனம் சிறிய விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றும் கூட்டுறவுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பண்டக நிறுவனங்கள் மற்றும் அரசு முகமைகளை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய மூன்று வெவ்வேறு கண்டங்களில் உள்ள கிராமப்புறங்களில், சோர்ஸ் டிரேஸ் தற்போது தீவிரமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, கோஸ்டா ரிகா மற்றும் பங்களாதேஷில் அலுவலகங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் நீடித்த செயல்பாடுகளைக் கொண்ட வேளாண் அறிஞர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

"மொபைல் அப்ளிகேஷன் உருவாக்குவதில் ஆழமான நிபுணத்துவம் கொண்ட நாங்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள் வரத் தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்தத் துறையில் செயல்பட்டு வருகிறோம்" என்கிறார் இதன் முதன்மை செயல் அதிகாரி வெங்கட் மாரோஜூ.

இருந்த போதிலும் இந்த நிறுவனம் ஒரே இரவில் வளர்ந்து விடவில்லை. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வளர வளர இந்த நிறுவனமும் வளர்ந்துள்ளது.

எம்ஐடியிலும், பெர்கலி பல்கலைக்கழகத்திலும் முன்னாள் மாணவராக இருந்த ஒருவரால் தொடங்கப்பட்ட சோர்ஸ் டிரேஸ் நிறுவனத்தில், வெங்கட் இணைந்த போது அந்த நிறுவனம் கடும் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருந்தது. " ஐந்து ஆண்டுகள் கழிந்து போன நிலையிலும், பல லட்சம் டாலர் நிதி வாரி இறைக்கப்பட்ட போதிலும எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்த நிறுவனத்தின் முன்னணி முதலீட்டாளர்களாக இருந்த, கிரே கோஸ்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு அவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட பல்வேறு முதலீடுகளுக்கு நான் ஆலோசகராக இருந்த நிலையில், அவர்கள் என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர். அப்போது நிதி உள்ளடகத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக வேளாண்மையில் கவனம் செலுத்தலாம் என்று நான் யோசனை கூறினேன். எனது இந்த யோசனை அவர்களுக்கு பிடித்துப் போனது. இந்த நிறுவனத்தை ஏற்று நடத்த முடியுமா என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது" என்று பழைய நினைவுகளைக் கூறினார் வெங்கட். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

இதுபோன்ற வாய்ப்புகள் வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டும் கிடைப்பதில்லை. வெங்கட்டின் இந்தப் பயணம் கடந்த எழுபதுகள் மற்றும் எண்பதுகளில்அவர் வளர்ந்த தெலுங்கானாவின் கிராமப்புறங்களில் இருந்து தொடங்கியது. "நான் அரசுப் பள்ளிகளுக்கு சென்று என்னுடைய 12ம் வகுப்பு வரையில் தெலுங்கு மொழியில்தான் படித்தேன். அப்போதெல்லாம் மழை பெய்யத் தொடங்கினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் ஆஸ்மானியா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பொது நுழைவுத் தேர்வின் மூலம் எனக்கு இடம் கிடைத்த போது நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தபோதிலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் உறுதியான செயல்பாடும் இருந்ததால் நான் அதை படித்து முடித்தேன்" என்கிறார் வெங்கட்.

" ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்த போது எனக்கு பெரும் போற்றுதல்கள் கிடைத்தன. எனினும் ஆஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த போது நான் ஒன்றுமே இல்லை என்பது போல் உணர்ந்தேன். மூன்று விதமான பிரச்சனைகளை நான் சந்தித்தேன். நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன், எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது (கல்லூரியில் சேர்ந்த போது என்னால் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் கூட சரியாக பேசமுடியாது). மேலும் நான் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்த மாணவன்.

துவக்கத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று தோன்றிய எண்ணம் பட்டம் முடிக்கும் வரை கூட நீடித்திருந்தது. "எந்த நம்பிக்கையும் இன்றி இருந்த எனக்கு அரசாங்க வேலை தான் இலக்காக இருந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்ததே வேறு. நமது உள்ளுணர்வை விட நமது அறிவு நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதை விரைவாக புரிந்து கொள்கிறது. "நான் எனது வகுப்புக்களில் முதலாவதாக வந்ததுடன், கேட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து அதன் பின்னர் முழு ஊக்கத்தொகை பெற்று பிஎச்டிக்காக என்னால் அமெரிக்காவுக்கும் செல்ல முடிந்தது".

கடந்த 1994ம் ஆண்டு வெங்கட் ஆட்டோமொபைல் துறையில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார், பின்னர் உடனடியாகவே நிர்வாகத்துறைக்கு மாறினார். போஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் குளோபல் ஆட்டோமோடிவ் பிரிவின் முதன்மை தகவல் அதிகாரியாக அவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அவர் எம்ஐடி ஸ்லோவன் ஃபெல்லோஷிப் திட்டத்தில் எம்பிஏ படிப்பதற்கு ஸ்பான்சர் செய்தது. "வளரும் போதே நான் எம்ஐடியில் பயில்வேன் என் கனவு கூட கண்டதில்லை. அது ஒரு நீண்ட பயணம். நான் கஷ்டப்பட்டு உழைத்து எம்பிஏ-வை முடித்த போதிலும், அது என்னைப் பொருத்தவரையில் ஒரு துவக்கமாகத்தான் இருந்தது".

தனது வாழ்க்கைப் பயணத்தில் எந்த ஒரு நேரத்திலும் வெங்கட் தனது வேர்களை மறந்து போகவில்லை. "தெலுங்கானாவில் சாதாரணமாகத் தொடங்கிய எனது பயணத்தில் நான் எப்போதுமே அடிப்படை மேம்பாடு மற்றும் சமூக காரணங்களைப் பற்றித்தான் ஆர்வத்துடன் இருந்தேன். எனது மாநிலம் கடந்த 1991 முதல் 2000 வரையில் உலகிலேயே அதிக விவசாயிகளின் தற்கொலையை சந்தித்த மாநிலமாக இருந்தது என்ற காரணத்தால் நான் 2000வது ஆண்டு முதல் தெலுங்கானா இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். அவர்களது துயரங்கள் பற்றி ஆய்வு செய்த நான் விவசாயத்தை மேலும் வளர்ப்பதற்கும் சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தீர்வுகளையும் கண்டறிந்தேன். இதனால் தான் என்னுடைய எம்பிஏ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் நுண்கடன் குறித்த விளக்க உரையை எழுதினேன்" என்கிறார் அவர்.

அதன் பின்னர் அவர் சமூக முன்னேற்றத்திற்கான தனது ஆர்வம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றைத் தன் வாழ்க்கையுடன் இணைத்துக் கொண்டார். கடந்த 2009ம் ஆண்டு தனது பணியை உதறிவிட்டு இந்தியாவுக்குத்திரும்பிய அவர் சிறுவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வேளாண்மையில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். "பெரும் வெற்றி பெற்ற விவசாயிகள் கூட்டுறவான கரீம்நகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முல்கனூர் கூட்டுறவு போன்றே லாபநோக்கத்துடன் கூடிய சமூக நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. விதைகள் உற்பத்தி வர்த்தகத்தை நான் ஆரம்பித்தேன் என்ற போதிலும் நான் அதில் பெரும் வெற்றி காண முடியவில்லை. கீழ்மட்டத்தில் அதனை செயல்படுத்துவதில் நான் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. வர்த்தகம் அல்லது சுமூக மூலதனத்திற்கான பின்னணி இல்லாததே இதற்கு காரணம்", என்கிறார் அவர்.

தனது நிறுவனத்தை அப்படியே விட்டு விட்டு 2012ம்ஆண்டு அவர் "சோர்ஸ் டிரேஸ்"சில் இணைந்தார். தனது பயணம் பற்றி அவர் ஒரு நிமிடம் சிந்தித்துவிட்டு கூறுகையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அங்கே சென்றேன். ஒரு வலிமையான பொருளை உருவாக்கி கார்கில் மற்றும் ஓலம் உள்ளிட்ட 10 நாடுகளில் 30 வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் தொடர்ச்சியாக இப்போது கௌரவமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்" என்கிறார்.

இது முற்றிலும் சவால்களே இல்லாத வெற்றிகரமாக முயற்சி என கூற முடியாது என க்கூறு அவர். "சோர்ஸ் டிரேஸ்சில் இரண்டாவது ஆண்டில் எங்களது வர்த்தக வளர்ச்சி பின்னடைவை சந்தித்தது. நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த எங்களது வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தம் கடைசி நேரத்தில் கைவிட்டுப் போனது. இதனால் ஊக்கம் குன்றியது. எனினும் நாங்கள் செய்யும் செயல்களில் நம்பிக்கை கொண்ட சில முதலீட்டாளர்கள் ஆதரவு அளித்தனர். நாங்கள் புதிதாக சில யுக்திகள் மற்றும் பெரிய வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் மூலம் வெற்றிகரமான நிறுவனமாக இதனை மாற்றினோம்".

"வளர்ச்சியின் வேகத்தை தற்போது அதிகரித்து அதிக சந்தைப் பங்களிப்பை பெற வேண்டும் என்பது எங்களது விருப்பம். இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் எங்களுக்கு நல்ல விற்பனை நுணுக்கம் உள்ளது. ஆப்ரிக்கா எங்களது அடுத்த பெரிய சந்தையாகும். அங்கும் சில பெரிய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறோம்" என்கிறார் அவர். பெரியதாக கனவு காண்பது, அதுவும் சமூக நிறுவனங்களைப் பொருத்தவரையில் மிகவும் அடிப்படையானது. "உலகின் மிகப்பெரிய விவசாயிகள் பற்றிய தகவல் களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. எங்களிடம் 2 லட்சம் விவசாயிகள் பற்றிய விவரங்கள் உள்ளன. இவர்கள் 3 கண்டங்கள் மற்றும் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 மில்லியனாக வேண்டும் என்பதே எங்களது இலக்கு" என்கிறார்.

"தோல்வியடைவது என்பது மோசமானதல்ல, ஏனெனில் தவறுகளில் இருந்து தான் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். ªதோல்விகள் என்பது வெற்றியின் படிக்கட்டு. உங்களது ஆர்வத்தை நோக்கி நேர்மையுடன் பின்தொடர்ந்து சென்றீர்களா என்றால், காலப்போக்கில் வெற்றி உங்களைப் பின்தொடரும்" என ஒரு புன்னகையுடன் வெங்கட் முடித்து கொள்கிறார்.