விளையாட்டில் இருந்து தொழில்முனைவுக்கு… தொழிலில் தலைநிமிர்ந்து நிற்கும் வீரர்கள்!

0

அது பார்வையாளர்களை வசீகரிக்கும் சிக்ஸர்களாக இருக்கட்டும், எதிரணியினருக்கு எதிரான கனல் தெறிக்கும் ஆட்டமாக இருக்கட்டும், உலக சாம்பியனாக விளையாட்டில் காட்டும் வேகம்… எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத்தில் விளையாட்டு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.

மணிக்கணக்கான பயிற்சி மற்றும் தியாகத்திற்குப் பிறகு, இந்தியாவின் விளையாட்டு நட்சத்திரங்கள் அந்த வெற்றியை அப்படியே ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் பிரதிபலிக்கிறார்கள். பின்வரும் பட்டியலில் தொழிலில் வென்ற இந்தியாவின் 11 விளையாட்டு சாம்பியன்களின் வெற்றிக்கதைகள் இருக்கின்றன.

யுவராஜ் சிங்

கிரிக்கெட் ஆடுகளத்தில் வெடிகுண்டாகத் தெரியும் யுவராஜ் சிங், ஆறு சிக்சர்கள் அடித்ததால் மட்டுமல்ல, புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வென்றதாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் ஊட்டுபவராக இருக்கிறார். இப்போது அவர் யுவிகேன் வென்ச்சர்ஸ் என்ற முதலீடு தொடர்பான தொடக்கநிலை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் விதிவிலக்கான தொழில்முனைவோர்கள் மிகச் சிறந்த பிராண்டை, குழுவை, நிறுவனத்தை உருவாக்க உதவி செய்துவருகிறார்.

அவர்களுடைய இணையதளம் கூறுகிறது, “நாங்கள் தொடக்கநிலை நிறுவனத்துக்கு ஒரு தொடக்கம் தருகிறோம்” என்று.

விராத் கோலி

ஆடுகளத்தில் புயலாக வீசும் விராத் கோலி, கடந்த ஆண்டு மே மாதம் பிரபலமான சிஸல் தொடர் உடற்பயிற்சிக்கூடங்களை பிரான்சைஸ் இந்தியாவுடன் இணைந்து தொடங்கினார். இந்நிறுவனம் மூன்று ஆண்டுகளில் 75 மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதுவரையில் விராட் கோலி 90 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்.

2014ம் ஆண்டு, தன் முதல் பேஷன் தயாரிப்பான Wrogn ஐ வெளியிட்டார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அணியான எப்ஸி கோவா அணிக்கு அவர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட்டின் இதயதெய்வமான சச்சின் டெண்டுல்கரும் தொடக்கநிலை தொழில் உலகில் கால்பதித்திருக்கிறார். இந்த மிகச்சிறந்த விளையாட்டு வீரர், முகிழ்க்கும் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். அரபு அமீரகத்தில் செயல்படும் ஆன்லைன் பயண நிறுவனமான முஸாபிர், விளையாட்டு நிறுவனமான ஸ்மாஷ், கொச்சி பிரான்சைஸ், இந்தியன் சூப்பர்லீக், சுகாதாரம் மற்றும் விளையாட்டு உடலுறுதி தயாரிப்பு நிறுவனமான எஸ் ட்ரைவ் மற்றும் சாக், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ் மற்றும் சர்வதேச டென்னிஸ் பிரிமியர் லீக் போட்டிக்கு மும்பை உரிமை என பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

மகேஷ் பூபதி

மகேஷ்பூபதி விளையாட்டு தொடர்பான சந்தைப்படுத்தல் மற்றும் பிரபலங்களின் மேலாண்மை நிறுவனமான 'குளோபோஸ்போர்ட்'டை தொடங்கியுள்ளார். உலகின் தரவரிசையில் 2 ஆம் இடத்தில் உள்ள ஆண்டி முர்ரேயின் விளம்பரம் தொடர்பான பணிகளை குளோபோஸ்போர்ட் மேலாண்மை செய்கிறது.

கடந்த 2014ல் மகேஷ் பூபதி, ஆன்லைன் மூலம் விளையாட்டுக் கருவிகள் மற்றும் பிட்னெஸ் உபகரணங்களை விற்ற 'ஸ்போர்ட்ஸ்365' நிறுவனத்தி்ல் முதலீடு செய்தார். அதில் யுவராஜ் சிங் பங்குதாரராகவும் இருந்தார். 2015 ஆம் ஆண்டில் ஸ்போர்ட்ஸ்365, டென்னிஸ்ஹப். இன் நிறுவனத்தை கையகப்படுத்திக்கொண்டது. இந்த புதிய நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து. சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் போட்டியை உருவாக்கினார் மகேஷ் பூபதி. அது தரமான டென்னிஸ் விளையாட்டை ஆசியாவுக்கு வழங்க முயற்சித்தது.

கபில்தேவ்

1983ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்குப் பிறகு, கபில்தேவ், தன்னுடைய ஆலோசனையை மீண்டும் புதுப்பித்தார். ஆனால் தற்போது தொடக்கநிலை நிறுவனங்களுக்கு ஏஞ்சல் முதலீட்டாளராக உருமாறினார். 2014ம் ஆண்டில் 'ஸ்லோபோ' நிறுவனத்தில் இணை நிறுவனராக, முதலீ்ட்டாளராக இருந்தார். அந்நிறுவனம் விளையாட்டுப் போட்டிகளுக்கான தளம், குவிஸ் போட்டிகளை நடத்தி பரிசு அளித்து வருகிறது.

சில தகவல்களின் அடிப்படையில், ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விற்கும் பீப்புள்ஈஸி. காம் இணையதளத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த ஆண்டில் லண்டனைச் சேர்ந்த பே கேபிட்டல் நிறுவனரான சித்தார் மேத்தா மற்றும் பலருடன் இணைந்து சாம்கோ வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் 3 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார். அவருடைய முதலீடு 2005 இல் இருந்தே உள்ளது. அதாவது ஜிகாம் எலக்ட்ரானிக்ஸில் அவருக்கு 5 சதவீத பங்குகள் இருந்தது.

2009ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த என்விரோ லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சுற்றுச்சூழல் சார்ந்த தெரு விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டார். அவர் பெர்ஜெட் பில்டுகான் பிரைவேட் லிமிமெட் என்ற சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத தெரு விளக்குகளை விற்பனை செய்வதற்கான உரிமை பெற்ற தனி நிறுவனத்தைத் தொடங்கினார்.

சாய்னா நேவால்

கடந்த ஆண்டின் டிசம்பரில் இந்தியாவின் பேட்மிண்டன் இளவரசியான சாய்னா புதிய தொழில் முயற்சிகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டார். தன் தந்தையுடன்ச சேர்ந்து தன்னுடைய நிதியை மேலாண்மை செய்ய 'எட்வைஸ்' நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். நவம்பர் மாதத்தில், 'பரி சானிட்டரிபேட்ஸ்' நிறுவனத்தில் முதலீடு செய்தார். 

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே ஆடுகளத்தில் மட்டும் அசகாய சூரர் அல்ல, தொழில்முனைதல் விளையாட்டிலும் கெட்டிக்காரராக இருக்கிறார். விளையாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனமான 'டென்விக் ஸ்போர்ட்ஸை' 2010ம் ஆண்டு தொடங்கினார். இது பள்ளிகளில் முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சியை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்குகிறது. பெங்களூரு மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள 30 பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். எட்டு கோடி அளவுக்கு வருமானம் பார்த்துள்ளார்கள்.

உமேஷ் யாதவ்

வலதுகர அதிவேக பந்துவீச்சாளரானா உமேஷ் யாதவ், முதல்கட்டமாக கொல்கத்தாவைச் சேர்ந்த பேஷனோவ் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். பேஷனோவ் நிறுவனம், ஒரு பகுதி சார்ந்த பேஷன் தேடல் மற்றும் விமர்சனை இணையதளம். இது கடைக்காரர்களையும், உள்ளூர் பேஷன் ஸ்டோர் மற்றும் பொட்டிக்குகளையும் இணைக்கிறது.

ராபின் உத்தப்பா

பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் வழியாக டிபன் விநியோகம் செய்யும் 'ஐ டிபன்' நிறுவனத்தில் 1.5 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். முரணாக, ஏற்கெனவே அவர் முதலீடு செய்த உணவுவிடுதி மற்றும் விருந்தோம்பல் சந்தை அத்தனை லாபகரமாக இல்லை.

மகேந்திர சிங் தோனி

இந்திய அணியின் சிறந்த அணித் தலைவராக கருதப்படும் தோனி, தொழில்முனையும் விளையாட்டில் ரொம்பவும் தூரத்தில் இல்லை. 2012ம் ஆண்டு கேப்டன் கூல் தன்னுடைய சொந்தமான 'ஸ்போர்ட்ஸ்பிட் ஜிம்'மைத் தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள உடற்பயிற்சிக்கூடங்களை மேம்படுத்தவும் உற்சாகப்படுத்தும் நோக்கில் அதனை விரிவாக்க நினைத்தார். ரிட்டி விளையாட்டு மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து ஸ்போர்ட்ஸ்பிட் ஜிம்கள் நியுடெல்லி மற்றும் குர்கோவன் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டன. இத்துடன் தன்னுடைய முதலீட்டை முடித்துக்கொள்ளவில்லை. சென்னையைச் சேர்ந்த கால்பந்து கிளப்பான சென்னையின்எப்சி என்ற அணியிலும் முதலீடு செய்துள்ளார். மேலும், அவர், ஹாக்கி இந்தியா லீக்கின் ராஞ்சிரேஸ் என்ற ராஞ்சியின் ஹாக்கி அணியில் இணை முதலீட்டாளராக உள்ளார்.

சரத் கெய்க்வாட்

சரத் கெய்க்வாட், தண்ணீரில் மட்டுமல்ல, எதார்த்த வாழ்விலும்கூட உத்வேகம் பெறுகிறார். எப்போதும் எடுத்த முயற்சியில் இருந்து பின்வாங்காத உறுதியான சரத், 'காமாட்டிக்ஸ்' என்ற புதிய முயற்சியைத் தொடங்கினார். இந்த அர்ஜூனா விருதுபெற்ற நீச்சல் வீரர், நீச்சல் வீரர்களுக்கு அடிப்படைத் தேவையான உபகரணங்களை வழங்கும் சந்தையை அளிப்பது அவருடைய நிறுவனத்தின் பணியாக இருக்கிறது. நியூட்ரிஷியனிஸ்ட் மற்றும் பிஸியோதெரபிஸ்டுகளின் ஆலோசனைகளையும் ஒருங்கிணைத்து சிறந்த வீரர்களை உருவாக்குவதுதான் அதன் இலக்கு.

ஆக்கம்: TARUSH BHALLA தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


விளையாட்டு தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:

விளையாட்டு செயலி தயாரித்து கலக்கும் 'தமிழ்மகன்'

விளையாடுவதற்கான களம் அமைத்து தரும் 'வொலானோ'

Stories by YS TEAM TAMIL