ரூ.400 கோடி செலவில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் அமைக்கப்படும்!

0

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு இடங்களில் தலா 100 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தென்மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் மண்டல மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த மருத்துவமனைகளை அமைக்க மாநில அரசு, நிலம் வழங்கியிருப்பதாகவும், இந்த மருத்துவமனைகள் தலா ரூ 90 முதல் 95 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் அமைய உள்ள மருத்துவமனைக்கான பணி துவங்கியிருப்பதாகவும், இந்த மருத்துவமனைகள் இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டு செயல்படத் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

இதே போல் தாம்பரம், ராணிப்பேட்டை, ஆம்பூர், விருதுநகர், கோவில்பட்டி, திண்டுக்கல் மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள இ.எஸ்.ஐ.க்கு சொந்தமான 1500 சிகிச்சை மையங்களில் முதல் கட்டமாக 400 மையங்கள் கண்டறியப்பட்டு அவை 6 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என்றார். இந்த மருத்துவமனைகள் ஒவ்வொன்றின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தலா ரூ 4 கோடி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை வேலூர் மற்றும் கோயம்பத்தூரில் புதிதாக தேசிய வாழ்தொழில் வழிகாட்டிச் சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த மையங்களில் திறன் வளர்ச்சிக்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மையமாக அது செயல்படும் என்றும் அமைச்சர் கூறினார்.