உலகின் இளம் செஸ் க்ராண்ட்மாஸ்டர் ஆக புறப்பட்டுள்ள 12 வயது சென்னை புயல்!

1

ஆர் பிரக்னாநந்தா ஐந்து வயது முதலே சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் இளம் வயதிலேயே சர்வதேச மாஸ்டரானார். எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப் பெற்ற இவர் தற்போது உலகின் இளம் க்ராண்ட்மாஸ்டராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இத்தனை இளம் வயதில் அபார சாதனை படைத்திருந்தபோதும் இவர் தற்செயலாகவே சதுரங்கம் விளையாடத் துவங்கினார்.

பிரக்னாநந்தாவின் அக்கா வைஷாலி 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் வென்றவர். இவர் விளையாடுவதை பார்த்தே பிரக்னாநந்தாவும் சதுரங்கம் விளையாட விரும்பினார். அவர் நன்றாக விளையாடியபோதும் நிதி பற்றாக்குறை காரணமாக அவரை ப்ரொஃபஷனல் பயிற்சிக்கு அனுப்ப அவரது பெற்றோர் தயங்கினர். எனினும் இந்த தயக்கம் அப்படியே நீடித்துவிடவில்லை.

பிரக்னாநந்தாவிடம் அவரது வயதுக்கு மீறிய அமைதியும், கட்டுப்பாடும், விவேகமும் காணப்பட்டது. சென்னையைச் சேர்ந்த குழந்தை மேதையான இவருக்கு விரைவில் ஊக்கத்தொகை வரத்துவங்கியது. இதனால் குடும்பத்தின் நிதிச்சுமை குறைந்தது. ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் அவரது பயிற்சியாளர் ஜிஎம் ஆர்பி ரமேஷ் கூறுகையில்,

”எனக்கு அறிமுகமில்லாத மாணவரான பிரக்னாநந்தா தனது கைகளை உயர்த்தி நான் கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் கற்க விரும்புவதாக தெரிவித்தார். சதுரங்கம் குறித்து எட்டு வயது சிறுவன் இவ்வாறு தனது விருப்பத்தை கூறி நான் இதுவரை கேட்டதில்லை.”

மேலும்,

அவரிடம் அபார ஞாபகசக்தி காணப்படுகிறது. முந்தைய விளையாட்டுகளை நன்றாக நினைவில் வைத்துள்ளார். இதனால் அடுத்தவர் அவரது தவறை திருத்துவதற்கு முன்பு அவரே தனது தவறுகளை திருத்திக்கொள்கிறார். விளையாட்டை அவர் ஆராயும் விதம் அவரது வயதிற்கு மீறிய செயலாகவே உள்ளது.

பிரக்னாநந்தாவின் தந்தை குழந்தைப்பருவத்திலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவரது கனவுகளை நனவாக்க முடியவில்லை. தனது குழந்தைகளுக்கு அவ்வாறு நடந்துவிடக்கூடாது என விரும்பினார். அதே சமயம் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் அவர் அழுத்தம் அளிக்கவில்லை. ’தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் தனது மகன் குறித்து அவர் கூறுகையில்,

”பிரக்னாநந்தா இன்றும் கார்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவார். அவர் 12 வயதே ஆன சிறுவன். அவர் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவதால் அவரது முயற்சியின் முடிவு குறித்து நான் கவலைப்படமாட்டேன். இத்தாலியின் இறுதி சுற்றில் ட்ராவில் முடிந்த பிறகும் அவர் வருத்தப்படவில்லை. அமைதியாக சிரித்தவாறே மற்ற குழந்தைகளுடன் விளையாடினார். அவரது அணுகுமுறைதான அவருக்குள் இருக்கும் சிறப்பான திறமையை வெளிக்கொண்டு வருகிறது. அவர் தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தனது வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.”

ஏற்கெனவே ஒரு ஜி எம் நார்ம் வென்றுள்ள நிலையில் இளம் க்ராண்ட்மாஸ்டராக சாதனை படைக்க 12 வயதான பிரக்னாநந்தா 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் இரண்டு வெற்றிகளை கைப்பற்றவேண்டும்.

கட்டுரை : Think change India