தினமும் 600 நோயாளிகளுக்கு மருத்துவ நலச் சேவை வழங்கும் கரிமா திரிபாதி!

0

கரிமா திரிபாதி, நாள்தோறும் 600 பரிவர்த்தனைகளை நிகழ்த்தும் மருத்துவ நல ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வழிநடத்துகிறார். அவரது கல்வி மற்றும் கடந்த கால அனுபவங்கள் இதற்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது. பொறியில் பட்டதாரியான அவர், அமெரிக்காவின் ஹார்வர்டில் செராமிக்ஸ் ஆய்வு பயின்று பின்னர் ஸ்கூல் ஆப் மீயூசியம் ஆப் பைன் ஆர்ட்ஸ்-ல் வரலாற்றின் பொக்கிஷங்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டு இறுதியில் டெலோய்டே கன்சல்டிங் (Deloitte Consulting India Private Limited) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

கரிமா உத்தர பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர் பின்னர் ஐஐடி கான்பூரில் பொறியியல் படித்தார். வர்த்தக உலக அனுபவம் தேவை என நினைத்த போது அவர் டெலோய்ட்டே நிறுவனத்தில் பிஸ்னஸ் அனலிஸ்ட்டாக சேர்ந்தார். இந்நிறுவனத்தில் பணியாற்றியது உற்சாகமாகவே இருந்தது என்றாலும், அவரது பன்முகத்தன்மை தலைத்தூக்கியது. “எப்போதுமே நான் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு எனது மற்ற ஆர்வங்களில் ஈடுபட விரும்பினேன். செராமிக்ஸ் நமது வராலாறு பற்றி எவ்வளவு சொல்கின்றன தெரியுமா? அது பழமையான கலைகளில் ஒன்று. அதோடு எனக்கு கலைகளில் வரலாற்றிலும் ஆர்வம் இருந்தது. டெலோய்ட்டே பணிக்கு பிறகு எனது புரிதல் மற்றும் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதில் ஈடுபட விரும்பினேன். இப்படித் தான் பாஸ்டனில் உள்ள எஸ்.எம்.எப்.ஏ மற்றும் ஹார்வர்டு செராமிக்சில் சேர்ந்து இதன் வரலாறும் மற்றும் தன்மையை கற்றுக்கொண்டேன். பாஸ்டனில் மகத்தான கல்வியாளர்கள், தொழில்முனைவோர், வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்ததால் இந்த அனுபவம் செழுமையாக அமைந்தது. கேம்பிரிட்ஜ் மாசாசுட்சில் பயிற்றுவிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இந்த அனுபவம் பிடித்திருந்தாலும் இந்தியா, உணவு, பெற்றோர் மற்றும் ஆரோக்கியம் என்னை இங்கே அழைத்து வந்தது” என்கிறார் கரிமா.

இந்தியா அழைக்கிறது

வீட்டை விட்டு வெளியே இருந்த நாட்கள் அவருக்கு, வயதான பெற்றோர்களுக்கான மருத்துவ நலனின் அவசியத்தை உணர்த்தியது. குறிப்பாக வெள்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பெற்றோர்களுக்கு இந்தத் தேவை இருந்தும் கூட, டிஜிட்டல் வசதியை கொண்டு இது சரியாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. ”வெளிநாடுகளில் வசிக்கும் என் இணை நிறுவனர்கள், ஏதாவது ஒரு கட்டத்தில் தங்கள் வயதான பெற்றோரை கவனிக்க சரியான பராமரிப்பாளர்கள் கிடைக்காமல் தவிப்பதை பார்த்திருக்கிறேன். தற்போதைய நடைமுறை வெளிப்படையானதாக இல்லை. உங்கள் வீட்டிற்கு வந்து முதியவர்களை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் அல்லது பராமரிப்பாளர் பின்னணியை சரி பார்க்க முடிவதில்லை. அவர்கள் சேவையில் திருப்தி இல்லை என்றால் மாற்று பராமரிப்பாளர் கிடைப்பதும் சிக்கலாக இருக்கிறது. மேலும் கட்டணமும் தெளிவில்லாமல் இருக்கிறது” என்கிறார் கரிமா.

இந்த நிலையில் தான் இப்போது கேர் 24 நிறுவன சி.இ.ஓவாக இருக்கும் விபின் பதக் அவரிடம் மருத்துவ நலன் சேவைப் பற்றி கூறினார். “தனிநபர்கள் நம்பகமான மருத்துவ நல சேவைகளை பெற வழி செய்வதற்கான தொழில்முறையிலான சேவை தேவை என்பதை உணர்ந்து கேர் 24 நிறுவனத்தை துவக்கினோம். பெரும்பாலான நேரங்களில் வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது போன்ற சேவை தேவைப்படுகிறது” என்கிறார் அவர்.

"முதலில் ஸ்டார்ட் அப் உலகில் நான் நுழைவது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. எல்லோரும் நான் பார்த்துக்கொண்டிருக்கும் நல்ல வேலையில் தொடரவே ஆலோசனை கூறினர். ஆனால் நிறுவனத்தின் பின்ன இருந்த கருத்து மற்றும் நிறுவனர் குழுவால் கேர் 24 ல் இறங்குவது இயல்பான தேர்வாக இருந்தது” என்கிறார் அவர் மேலும்.

இந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு

ஐஐடி பட்டதாரிகளை கொண்ட நிறுவனர் குழு அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுனர்கள் மற்றும் பரமாரிப்பாளர்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ நல சேவையை இல்லங்களுக்கே கொண்டு வந்தது. 24 மணி நேர நர்ஸ் மற்றும் பரமரிப்பாளர் சேவையை வழங்கியது. சான்றிதழ் பெற்ற பிசியோதெரபிஸ்ட்கள் தேவையான ஆலோசனகளை வழங்கினர்.

முக்கிய உடல் நல அறிகுறிகளை கவனிப்பது, மருத்துகள் மற்றும் ஊசிகள் அளிப்பது, அறுவை சிகிச்சைக்கு பிந்தையை கவனத்தை அளிப்பது ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்களாக நர்ஸ்கள் இருப்பதுடன் நோயாளிகளுக்கு தேவையான ஆதரவை அளிக்ககூடியவர்களாகவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சேவையின் மையமாக நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர்கள் விளங்குகின்றனர். தகுந்த பயிற்சி பெற்ற இந்த பராமரிப்பாளர்கள் நோயாளிகளுக்கு தினசரி செயல்பாடுகளில் உறுதுணையாக இருக்கின்றனர். இது வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

”வாடிக்கையாளர்கள் நர்ஸ்கள், பராமரிப்பாளர்கள் அல்லது பிசியோதெரபிஸ்ட்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களின் வருகையயும் கண்காணிக்கலாம். ஆண்- பெண், சைவம்-அசைவம் போன்ற தேர்வுகளையும் மேற்கொள்ளலாம். வெளிப்படையான கருத்து தெரிவிக்கும் முறை மூலம் புகார்களையும் தெரிவிக்கலாம்” என்கிறார் கரிமா.

பதிவு செய்ய 30 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்படுகிறது. "நம்பகமான மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்களை பெறுவது ஆரம்பத்தில் சிக்கலாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இதற்கான் அனுபவத்தை பெற்று, பரமரிப்பாளர்களை நியமிக்க ஏழு அடுக்கு செயல்முறையை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் அவர்.

தொழில்நுட்பம் மூலம் உதவி

தொழில்நுட்ப பயன்பாடு பற்றி குறிப்பிடும் போது, ”எங்கள் செயல்பாடு மற்றும் சேவைகளுக்கு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திக்கொள்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை அளிக்க முடிவதுடன், லாபத்தையும் அதிகமாக்க முடிகிறது. தினமும் 500 நோயாளிகளுக்கு மேல் உதவுகிறோம். மாதந்தோறும் 600 பராமரிப்பாளர்களுக்கு வருவாய் அளிக்கிறோம்” என்கிறார் கரிமா மேலும்.

தொழில்முனைவு என்பது தொடர்ச்சியாக முயற்சி செய்வது என்பது அவரது கருத்தாக இருக்கிறது. ”தொழிலுமுனைவோராக விரும்புவதை விட, நம்பும் எண்ணங்களை செயல்படுத்துவது மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.

"பெண் தொழில்முனைவோர் குறித்து பலரும் தங்கள் மனதை திறந்துள்ளனர். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் முதலீட்டாளர்கள் ஆதரவு கிடைக்கிறது. மேலும் அதிகரிக்கும் தொழில்முனைவோர்கள் எண்ணிக்கை மொத்த அமைப்பு மற்றும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” என்றும் அவர் உற்சாகமாக குறிப்பிடுகிறார்.

ஆக்கம்: பிஞ்சால் ஷா | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரை:

'எம் தில்': எஸ்.எம்.எஸ். மூலம் மருத்துவ சந்தேகங்களுக்கு விடை!

நோயாளிகளையும், டாக்டர்களையும் இணைக்கும் ஹலோ டாக்டர் 24X7