வாழ்த்துக்கள்! உங்களிடம் இல்லாதது தான் வெற்றிக்கு வித்திடக்கூடியது!

1

பெங்களூருவில் நேற்று மணிக்கு பத்து கி.மீ வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த கார் நத்தையுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்க அந்த நேரத்தை செல்பேசி மூலம் சில அழைப்புகளை செய்ய முற்பட்டு கொண்டிருந்தேன், ஆனால் எப்போதும் போலவே எனது செல்போன் சேவையின் நெட்வொர்க் சரியாக இல்லை, நெட்வொர்க் அடிப்படையான நோ கால் டிராப் சேவையை கூட அளிக்கத்தவறியதால் அழைப்புகள் துண்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அதிவேகமான 3ஜி இணைய வசதியை கூட விட்டுவிடுங்கள், சாதாரண போன் அழைப்புக்கு கூட இணைப்பு இல்லை. இந்தியாவில் தொழில்நுட்ப தலைநகரில் இந்த நிலை.

இந்தியாவில் தொழில்முனைவோராக ஆவது என்பது இது போன்ற பரபரப்பான மற்றும் நாடகத்தனமான தருணங்களை கொண்டது. அடுத்ததாக நீங்கள் எவ்வித அரசு சார்ந்த சிக்கல் அல்லது பெரும் வலியின் சுவற்றை எதிர்கொள்வீர்கள் என்று தெரியாது. இத்தகைய கட்டுப்பாடுகளில் பெரிய சவால் எது என்றால் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது தான். இதற்கு காரணம் சீனாவை விட பரப்பளவில் மூன்றில் ஒரு மடங்கு கொண்ட, ஆனால் அதற்கு நிகரான மக்கள் தொகை கொண்டிருக்கும் நாட்டில் நாம் வசித்துக்கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலனோரைப்போலவே சில நேரங்களில் நானும் அதிருப்தி, கவலை மற்றும் ஏமாற்றம் அடைகிறேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதுவே தினமும் எனக்கு நிகழக்கூடிய மிகச்சிறந்த விஷயம் என நினைக்கிறேன்.

நான் சொல்வதை நம்ப முடியவில்லையா? இருங்கள் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ( நான் மிகவும் சிறப்பாக செய்யும் பணி இது) புகழ் பெற்ற செயிண்ட்.ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்வதற்காக பாட்னாவில் இருந்து புது தில்லி வந்த போது நான் விவாதத்திற்கான பேச்சு போட்டி கழகத்தில் சேர விண்ணப்பித்தேன். சொந்த ஊரான பாட்னாவில் நான் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் பலவற்றில் பரிசு வென்றிருக்கிறேன். எனவே நான் தேர்வு செய்யப்படுவேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் நான் தேர்வாகவில்லை. போட்டிக்காக பின்பற்றப்பட வேண்டிய விதிகளை நான் அறியாமல் இருந்ததே இதற்கு காரணம். கருத்துக்களை முன்வைத்து பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட முறை, மறுத்து பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட முறை போன்றவை இருந்தன. இவை பற்றி எதுவும் அறிந்திறாததால் நான் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் நான் நொறுங்கிப்போனேன்.

கோடை விடுமுறைக்காக நான் பாட்னா திரும்பிய போது எனது பள்ளி ஆசிரியை ரேகா ஸ்ரீவத்சவாவை சந்தித்து எனது அனுபவத்தை விளக்கி கூறி எனது ஏமாற்றத்தை தெரிவித்தேன். பாட்னாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்றான நோட்ரே டேம் , தனது மாணவர்களை சரியான வகையில் தயார் செய்ய முடியாமல் போனதற்காக , என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நாங்கள் அறியாமல் இருந்ததற்காக எனது வருத்தத்தை தெரிவித்தேன். விவாதக்கலையின் அடிப்படையை கூட நாங்கள் அறிந்திறாமல் இருந்துவிட்டோமே என்று குறைப்பட்டுக்கொண்டேன்.

ஆசிரியர் எல்லாவற்றையும் புன்சிரிப்புடன் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவர் பின்னர் , "உங்களிடம் இல்லாத ஒன்று தான் உங்களை ஓடச்செய்யும்” என்று கூறினார்.

"வெற்றி பெறுவதற்கான நெருப்பு, உங்களிடம் இல்லாத விஷயங்களில் இருந்து, நீங்கள் கற்றுக்கொள்ளாதவற்றில் இருந்து, நீங்கள் பெற்றிராதவற்றில் இருந்து தான் உண்டாகும்" என்றார்.

1999 கோடை முதல் இந்த பொன்மொழி என்னுள் இருக்கிறது. என்னிடம் இல்லாததும், நான் அறிந்திறாததும் ஒவ்வொரு நாளும் மேலும் சிறந்து விளங்க என்னை இயக்கி கொண்டே இருக்கிறது.

வலியை உணராவிட்டால் நாம் எப்படி மகிழ்ச்சியை அறிவோம். தோற்கவும் மோசமாகவும் தோற்கவும் கற்றுக்கொள்ளாவிட்டால் நாம் எப்படி வெற்றி பெற கற்றுக்கொள்வோம். இல்லாத தன்மையை அனுபவித்திருக்காவிட்டால் எப்படி நீங்கள் அளப்பறிய வளத்தை அறிவீர்கள்?

நம் எல்லோருக்கும் - தொழில்முனைவோர் மற்றும் வருங்கால தொழில்முனைவோர்- எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது , இந்தியாவில் நமக்கு எத்தனை மகத்தான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது தான். நம்மிடம் இல்லாதவை தான், நாட்டிற்கும், தொழில்முனைவோராக நமக்கும் பெரிய வாய்ப்புகளாக அமைகின்றன. நமக்குத்தேவையானவற்றை பெறுவதற்கான உத்வேகம் நம்மை மேலும் முன்னேற தூண்டுகிறது.

இந்த பொறி, இந்த உத்வேகம், நூறு கோடி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முயலும் போது என்ன எல்லாம் செய்ய முடியும் என யோசித்துப்பாருங்கள்? இந்தியாவில் நமக்கு பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. இதன் பொருள், மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறவர்களுக்கு இங்கேயே எத்தனை பெரிய சந்தை இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. எந்த ஒரு தீர்வுக்கும் நூறு கோடி பயனாளிகள் இருக்கின்றனர். மாற்றத்திற்கான வாய்ப்பு-மேம்பாட்டிற்கான மாற்றம்- உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கிறது...

உலகின் சிறந்த நாடான நம்முடைய இந்தியாவில் வாய்ப்புகள் அபிரிமிதமாக இருக்கின்றன. நம்மிடம் இல்லாதவை மற்றும் இருக்கும் வளங்களை அறிய இந்த ஆண்டு யுவர்ஸ்டோரி நடத்தும் "டெக் ஸ்பார்க்சில்" இணைந்து கொண்டாட வாருங்கள்! TechSparks2015

( யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)