கொல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதி பெண்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதும் மகுவா!

0

வழி தவறி கொடுமையான சூழலுக்குள் தள்ளப்பட்டவர்களுக்குக் கல்வியும் வேலைப் பயிற்சியும் அளித்து புதியதோர் வாழ்க்கைச் சூழலுக்குள் கொண்டு வருகிறது டிவைன் ஸ்கிரிப்ட்.

வெளிச்சத்தை நோக்கி

32 வயது நிரம்பிய ஜெயீதா (உண்மைப் பெயரல்ல) கொல்கத்தா முன்ஷிகுஞ்ச் பகுதியில் ஏழாண்டுகளாகப் பாலியல் தொழில் புரிந்து வருகிறார். தனது தொழிலைக் கைவிடத் துணிந்து 2012 செப்டம்பரில் தன்னை டிவைன் ஸ்கிரிப்டில் இணைத்துக் கொண்டார். தனது தொழில் மிகுந்த கவனம் மேற்கொண்டு வெகு விரைவாகவே அதன் நுட்பங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டார். ஒன்றரையாண்டு பயிற்சிக்குப் பின்னர் ஒரு தோல் கம்பெனியில் முழுநேர ஊழியராக வேலைக்குச் சேர்ந்து உயர்வான சம்பளம் பெற்று வருகிறார். தற்போது பாலியல் தொழிலை விட்டு கண்ணியமான வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ஜெயீதா போலவே 28 வயது நிரம்பிய ஃபர்ஜானா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 12 ஆண்டுகளாக பாலியல் தொழில் புரிந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் பித்தனால் முன்ஷிகஞ்ச் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் மீது நல்லெண்ணம் கொண்ட ஒருவரால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஃபர்ஜானா, டிவைன் ஸ்கிரிப்டில் சேர்க்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் உதவியாளினி வேலை அவருக்கு வழங்கப்பட்டது. இந்த முழுநேர வேலையில் முன்பைக் காட்டிலும் கூடுதலான சம்பளம் பெற்று வருகிறார். தனது கடந்த கால அடையாளங்களை மறந்து புதிய அடையாளத்துடன் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்

மாற்றத்தைக் கொண்டு வருதல்

கொல்கத்தாவின் ஹித்திர்பூர் சிவப்பு விளக்குப் பகுதியில் ஜெயீதா ஃபர்ஜானா போலவே பலரும் Divine script இல் இணைந்து புதிய வாழ்க்கையைப் பெற்று வருகின்றனர். மகுவா சுர் ரே உருவாக்கிய டிவைன் ஸ்கிரிப்ட் சொஸைட்டி ஆதரவற்றப் பெண்களுக்காகத் தன்னார்வ தொண்டு புரியும் பலரும் இன்னமும் பாலியல் தொழிலைத் செய்து வருகின்றனர்.

சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் மகுவா, தன் காலம் முழுதும் பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு நிரந்தரத் தீர்வுகாண முயன்று வருகிறார். "சமூக மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்கள் எதுவானாலும் அதில் ஆற்றல் மிக்க தன்மை, நிலைத்தன்மை ஆகிய இரண்டு மூலப் பண்புகளை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்ற கருத்து டிவைன் ஸ்கிரிப்ட் சொசைட்டியை உருவாக்குவதற்கு முன்பிருந்தே எனக்குள் ஆழமாக இருந்து வந்தது. ஒரு பிரபலமான அரசு சாரா நிறுவனத்தில் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட ஆதரவற்ற பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மீள்வதற்கு அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் குறைவானதே. அது மட்டும் கிடைத்து விட்டால் போதும் கடினமான உழைப்பிற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள் என்ற எண்ணம் நான் துணை இயக்குனராக சேவை புரிந்த காலத்திலேயே எனக்குள் இருந்தது. அந்த எண்ணம்தான் கித்திர்பூர் பகுதியில் உள்ள பெண்களின், மாதர்களின் உடலியல் ரீதியான, பொருளியல் ரீதியான வலிகளை நிரந்தரமாகக் குறைப்பதற்கான சிந்தனையை உருவாக்கித் தந்தது’’ என்கிறார் மகுவா.

பாலியல் தொழிலுக்குள் உழன்று கொண்டிருக்கும் பெண்களை அதனின்று மீட்டுக் கொண்டு வந்தால் மட்டும் போதுமானதல்ல. அவர்கள் பொருளாதார அளவில் சொந்தக் காலில் நிற்கவும், கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும் அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் தேவைப்படுகிறது என்று முடிவு செய்தார் மகுவா. "2011 ஆம் ஆண்டு குழந்தைகள் நல்வாழ்விற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்த போது அக்குழந்தைகளின் தாய்மார்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது தெரிய வந்தது. ஏனென்றால் அச்சிறுமியர் தங்கள் தாயுடன் நெருக்கடி மிக்க குறுகலான அந்த விடுதி அறைகளில் தான் வசித்து வந்தனர். சிறுமியர் மீட்பை மேற்கொண்ட அதே வேகத்தில் காலாவதியான டையர், டியூப்கள் கொண்டு கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் உற்பத்திக் கூடங்களை அதே பகுதியில் உருவாக்கினோம். மேற்படி பொருட்களை ஏற்றமதி செய்யத் துவங்கிய பின்னர் விளிம்பு நிலையில் இருந்த அப்பெண்களுக்கு எங்களால் நிலையான மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர முடிந்தது’’ என்கிறார் மகுவா.

பாதுகாப்பே முதன்மை

பொருளாதாரக் கல்வியில் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றிருப்பதோடு இருபதாண்டுகளாக பல்வேறு துறைகளில் பணிபுரிந்த அனுபவமும் பெற்றவர். திட்ட நிர்வாக மேலாண்மை, பாலியல் ஆரோக்கியம் மற்றும் குழந்தை ஆரோக்கியம் போன்ற துறைகளிலும் பணி புரிந்த மகுவா, ஒரு பெண் 18 வயதைக் கடந்த பின்னரும் அவளது தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இருந்து மீட்டு அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். "இப்பெண்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தங்கள் தாயுடனே தங்கியிருப்பவர்கள் என்பதால் கடத்தலுக்கு உள்ளாகும் நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். பாலியல் தொழில் புரிவோரின் பிள்ளைகள் முறையான கல்வி பெறும் விதமாக அவர்களை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்து 18 வயது அடையும் வரை ஆரோக்கியமான உணவும், சூழலும் பெற்று வளர்வதற்கான ஸ்பான்சர் திட்டங்களையும் எங்களது டிவைன் ஸ்கிரிப்ட் மேற்கொள்கிறது. தங்கள் கல்வியை முடித்த பாலியல் தொழிலாளியின் மகளோ, மகனோ பொது நீரோட்டத்தில் இணைந்து வேலைபெற்று, தமது தாயை பாலியல் தொழில் இருந்து மீட்டு கண்ணியமான வாழ்க்கையை நடத்தி வருவார்கள். இது போக விளிம்பு நிலை மக்கள் மற்றும் பாலியல் தொழில் புரிவோர் போன்றவர்கள் தங்களை இரண்டு ஷிப்ட்களில் வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதற்குரிய உற்பத்திக் கூடம் ஒன்றையும் இயக்கி வருகிறது எங்கள் அமைப்பு’’ என்று தெரிவிக்கிறார் மகுவா.

கண்ணியமான வாழ்க்கை

சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்பாடு செய்வதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் மகுவா. தனது சொந்த முயற்சியால் அதனைச் சாதித்தும் காட்டியிருக்கிறார். "பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒரே நாளில் தங்களது தொழிலை விட்டு விட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு ஏற்பாடு செய்து தருகிற உற்பத்தித் தொழில் அவர்களை கண்ணியமான மைய நீரோட்ட வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் என்று நம்புகிறோம். மற்ற பெண்களுடன் இணைந்து பழகும் போது பிற இடங்களில் அவர்கள் வேலை பெறுவது எளிதாகிறது. சுய நம்பிக்கையையும் அவர்களால் வளர்த்துக் கொள்ள முடிகிறது. நாங்கள் தயாரிக்கும் உற்பத்திப் பொருட்கள் பெரும்பாலும் ஏற்றுமதி ஆகிறது என்பதோடு அமேசான் மற்றும் பேடிம் ஆகியவற்றின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன. இச்சமூகம் அப்பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்து சொந்தக் காலில் நிற்பதற்கான தைரியத்தையும் அளிக்கிறது. எங்களது உற்பத்திப் பொருட்களுக்கு வெளி நாட்டுத் தேவையை அதிகரிப்பதன் மூலம் இன்னும் கூடுதலான பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை உருவாக்குவதே எங்களது முதன்மையான இலக்கு. அதிகதிகமான பெண்கள் கண்ணியமான வாழ்க்கை மேற்கொள்ள எங்கள் உற்பத்திக் கூடத்தில் இணைந்து பணியாற்றுவது தான் சிறந்த வழி’’ என்கிறார் இப்புரவலர்.

டிவைன் ஸ்கிரிப்டின் நல்லம்சம் என்னவென்றால் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள பெண்களையும் மாதர்களையும் கேவலமானவர்களாக நடத்துவதில்லை என்பது தான். பலருடன் கலந்து பழகும் வாய்ப்பு கிடைப்பதால் பொது நீரோட்ட வேலைகளைப் பெறுகிற வாய்ப்பும் அதிகமாகக் கிடைக்கிறது. கச்சிதமான சூழல், அலுவலக ஒழுங்கு, இலக்கை நோக்கிய வேலைப் பண்பு, நேர்த்தி போன்ற அம்சங்கள் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவி புரிகிறது.

தற்சார்பிற்கான பாதை

கிதிர்பூர் பகுதிப் பெண்கள் டிவைன் ஸ்கிரிப்டில் இணைந்து விட்டால் போதும் அவர்களை 360 கோணங்களிலும் வரவேற்கக் காத்திருக்கிறது வாழ்க்கை. இருண்ட தாழ்வாரங்களிலும், குறுகலான சந்துகளிலும் அடைந்து கிடந்த பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்க அயராது பாடுபட்டு வருகிறார் மகுவா. "கடந்த நான்கு ஆண்டுகளில் 14 பெண்களுக்கு வெவ்வேறு மையங்களில் புகலிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். பொது நீரோட்டத்தில் பங்கு பெற அனைத்து விதமான ஆதரவினையும் அளித்து வருகிறோம். மாணவர்கள் 11 பேர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் பெற்று அவர்களது வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம். எங்களது உற்பத்திக் கூடத்தில் 30 லிருந்து 35 பெண்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது அணுகுமுறையும் மேலோங்கி வருகிறது. மன நல ஆலோசனை, பிறருடன் கலந்துறவாடல் ஆகியவற்றுடன் உற்பத்தித் திறன் வளர்ப்பு போன்ற பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளனர். எங்களது உற்பத்திக் கூடத்தில் பணிபுரிந்த 4 பெண்கள் எங்களது முயற்சியால் கடந்த 4 வருடங்களில் பொது நீரோட்டத்தில் பங்குபெற முடிந்துள்ளது’’ என்கிறார் உள்ளாற்றல் மிகுந்த வள்ளல் மகுவா.

ஆங்கிலத்தில்: பைசாலி முகர்ஜி | தமிழாக்கம் போப்பு