காலத்தால் அழியா உதவி 'கல்வி உதவி'

0

மீனைக் கொடுப்பதை விட மீன்பிடிக்கக் கற்றுக்கொடு என்பது சீனப் பழமொழி !

காசுக் கொடுப்பதாக இருந்தாலும் கல்விக்காகக் கொடு என்பது "எடு-தர்மா" (EduDharma) வின் செயல் மொழி.

நோக்கம்

இந்தியாவின் முதல் கல்விக்கான அரசு சாரா நிதி உதவி அமைப்பான "EduDharma.com" ஆன் லைன் தளம், இணைய வழியாக கல்விக்கான நிதியை தேவையானோருக்கு கிடைத்திட வழிவகுக்கும். உதவ நினைப்பவர்கள் ஒரு புறமும், உதவி தேவைப்படுவோர் மற்றோரு புறமும் தொடர்பின்றி இருக்கும் நிலையை அறிந்து, இரு தரப்புக்குமான பாலமாக இருக்க ஒரு தளம் தேவை என உணர்ந்த பத்மனாபன் கோபாலன் இதைத் துவக்க முடிவு செய்தார்.

ஏழ்மை, திறமைக்குத் தடையாக அமையக்கூடாது என்ற சமூக நோக்கில், நிதியின் காரணமாகக் கல்வி தடைப்படக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இது துவக்கப்பட்டுள்ளது. 'உணவை வீணாக்குதல் கூடாது' என்பதை வலியுறுத்தும் 'No Food Waste' அமைப்பின் நிறுவனரான கோவையைச் சேர்ந்த பத்மனாபன் பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். தனது அடுத்து முயற்சியாக கல்விச் சேவையை புரிய, இந்தியாவின் முதல் க்ரொவ்டு ஃபண்டிங் முறையில் ஏற்படுத்தப்பட்ட 'EduDharma' என்னும் கல்வி நிதியுதவித் தளத்தை அண்மையில் நிறுவியுள்ளார்.

செயல்பாடு

கல்விக்கான நிதியுதவி தேவைப்படுவோர் தங்களின் விவரங்களை 'EduDharma.com' இணையத்தளத்தில் பதிவிடுவதன் மூலமாக தங்களுக்கான உதவியை தெரிவிக்க முடியும். தனது படிப்பு, கல்வி நிறுவனம், முகவரி, தனது கல்வித் தேர்ச்சி, தேவைப்படும் நிதியுதவியின் அளவு, ஆகிய விவரங்களை இந்த இணையதளத்தில் ஒருவர் பதிவேற்றம் செய்ய முடியும். இதன் வழியாக மிக எளிதாக தங்களின் கல்விக்கான நிதித் தேவை குறித்து பலருக்கும் அறிவித்து விடலாம்.

ஒருவரின் கல்வி நிதித் தேவையை இந்தத் தளத்தில் பதிவேற்றுவது போலவே, கல்விக்கான நிதியுதவி செய்ய விரும்புவோரும் தங்களின் விவரம் மற்றும் உதவி அளிக்கக் கூடிய தொகை என்ன என்பதை இதில் பதிவிட முடியும்.

EduDharma இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள மாணவர்களின் நிதித் தேவை குறித்த வேண்டுகோள்களை அலசி ஆராய்ந்து, தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட ஒருவருக்குக் கூட நிதியுதவி செய்ய விரும்புவோர் உதவியளிக்க முடியும்.

முதல் மாதம் ஒருவருக்கு நிதியளித்து விட்டு மற்றொரு மாதம் வேறொருவருக்கு நிதியளிக்க விரும்பினாலும், அதற்கும் இதில் வாய்ப்புண்டு.

உயர்ந்த நோக்கோடு தொடங்கப்பட்ட இது, ஒருவர் செய்யும் கல்வி நிதி உதவி அதற்காக மட்டுமே பயன்படவேண்டும் என்பதில் இக்குழு மிக உறுதியோடு இருக்கிறது.

அதனால்தான், மாணவர்களுக்கான கல்வி நிதியுதவியை நேரடியாக அளிக்காமல், பயிற்சி கட்டணம், தேர்வுக் கட்டணம் என எந்த தேவைக்காக நிதி கோருகிறார்களோ, அதற்காக அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் கணக்கிலேயே நிதி செலுத்தப்படும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலத்தால் அழியாத் தொண்டு

தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றும் பத்மனாபனின் உள்ளத்தில் உதித்த இந்த சிந்தனைக்கு அவருடைய நண்பர்கள் பலரும் இதை வரவேற்று இவருடன் இணைந்துள்ளனர்.  

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் இந்த இணையத்தைத் தொடங்கிய அவர், "100 இளைஞர்களைக் கொடுங்கள் இந்தியாவை மாற்றுகிறேன் என்று கூறிய விவேகானந்தரின் பொன்மொழியின் வழியில், 10 இளைஞர்கள் ஒன்று கூடி நம்மால் இது போன்ற நற்காரியங்களைச் செய்யமுடியும் என உலகிற்கு காட்டுவோம்" எனக் குறிப்பிட்டார். 

பத்மனாபனின் இந்த முயற்சியில் ஆர்வம் கொண்ட நல்லுள்ளங்கள் சிலர் இதில் இணைந்துள்ளனர். இதில் பலர் ஐடி துறையில் பணியாற்றுபவர்கள். கல்விச் சேவையின் முதல் படியாக அமையக்கூடிய EduDharma இணையதளத்தை, சமூகத்துக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட கொடை வள்ளல், "மேன் ஆஃப் தி மில்லெனியம்' என்ற பெறுமையைக் கொண்ட 'பாலம் கல்யாண சுந்தரம்' அவர்கள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.  

தான் தானம் செய்த 30 கோடி ரூபாயைப் பலரும் பெருமையாக பேசினாலும், இன்றைய இளைஞர்களிடம் 300 கோடி ரூபாயைக் கொடுத்தாலும் அதனால் அளப்பறிய நற்காரியங்கள் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாலம் கல்யாண சுந்தரம், தெரிவித்தார்.

மாணவர்கள் நிதியுதவிக்கோரி இணையத்தில் பதிவேற்றும் தகவல்களை சரிபார்க்கும், தன்னார்வத் தொண்டர்கள் உண்மையாகவே உதவி தேவைப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். அத்தோடு, இணைய வழியிலாக நிதியுதவி செய்வோர் மட்டுமன்றி, மற்றவர்களையும் நேரடியாக அணுகி கல்வி நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட இருக்கின்றனர். மேலும், தங்களுடைய பங்காகவும் ஒரு தொகையை கல்வி நிதித்திட்டத்திற்கு அளித்து, இந்த அறப்பணியை தொடங்கியுள்ளனர்.

எவருடைய கல்வியும் நிதிப் பற்றாக்குறைக் காரணமாக தடைப்பட்டு விடக்கூடாது. திறமையை, செயலூக்கத்தை, அறிவைத் தேடிக் கண்டுபிடித்து அதனை அழியாமல் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதன்றி வேறொன்றும் எங்களுடைய நோக்கமில்லை என்று ஒருமித்த குரல் கொடுக்கிறது EduDharma குழு.

கல்வித் தேவைக்கு நிதி அளித்து உதவ விரும்புவோர் EduDharma என்ற முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இவர்களை தொடர்பு கொள்ள: 9190877 66633, Facebook Page