யூகே-வின் இளம் மில்லினியர் ஆகியுள்ள இந்திய வம்சாவளி இளைஞர்!

1

103.4 கோடி ரூபாய் மதிப்புக்கு சொந்தக்காரரான அக்‌ஷய் ரூபரேலியா, யூகே-வின் இளம் மில்லினியர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் பெரும்பாலும் விளையாட்டு, நண்பர்கள் என்று பொழுதைப்போக்க, 19 வயதாகும் அக்‌ஷய் தன் பள்ளிப்போடு வீடு விற்பனை டீல்கள் முடிப்பதில் தீவிரமாக இருந்தார்.

காது கேளாத பெற்றோர்களுக்கு மகனாக பிறந்த அக்‌ஷய், இளம் வயதிலேயே சைகை பாஷையை கற்றுக்கொண்டார். அவரின் அப்பா சேவை பணியாளர் மற்றும் அம்மா காது கேளாத குழந்தைகள் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். 

பட உதவி: Business Standard
பட உதவி: Business Standard

அக்‌ஷய் ஒரு ஆன்லைன் ரியல் எஸ்டேட் ஏஜென்சி நடத்திவருகிறார். அதன் மதிப்பு 12 மில்லியன் பவுண்டாக தொடங்கிய முதல் ஆண்டிலேயே மதிப்பிடப்பட்டது. இவரின் நிறுவனம் வீடு விற்பனை செய்யும் இடைத்தரகர் வேலையை செய்கிறது. 

நிறுவனம் தொடங்கிய 16 மாதங்களில், ‘doorsteps.co.uk’ என்ற ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தி, யூகே-வின் 18-வது பெரிய ரியல் எஸ்டேட் ஏஜென்சி என்ற இடத்தை பிடித்தார். இதுவரை அக்‌ஷய் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வீடுகளை விற்பனை செய்துள்ளார்.

தான் பள்ளியில் இருந்த சமயத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பதிவு செய்ய, அக்‌ஷய் ஒரு கால் செண்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டார். பின் மாலையில் வீடு திரும்பியதும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ப்ராப்பர்டிகளை காட்டுவார். 

யூகே-வில் உள்ள வீட்டு இடைத்தரகர்கள் அதிக கமிஷன் பெறுவதால், தான் அதே பணியை குறைந்த விலையில் முடித்து தந்து நல்ல வருமானம் ஈட்டினார். இவர் 99 பவுண்டிற்கு வீடு முடித்து கொடுத்து வாடிக்கையாளர்கள் பலரை பெற்றார். பினான்சியல் எக்ஸ்பிரஸ் பேட்டியில் குறிப்பிட்ட அக்‌ஷய்,

“நான் என் இணையதளத்தை ரெடி செய்து ஆன்லைனில் இயங்கத் தொடங்கிய சில வாரங்களில் சசெக்ஸை சேர்ந்த ஒருவர் தன் வீடு மற்றும் ஒரு நிலத்தை விற்றுத்தர கேட்டார். வீட்டின் போட்டோவை வைத்து விளம்பரப்படுத்தியதில், 3 வாரங்களில் ஆன்லைன் மூலம் அந்த வீடு மற்றும் நிலம் விற்றுப்போனது,” என்கிறார். 

தொடக்கத்தில் தன் சொந்தக்காரரிடம் 7 ஆயிரம் பவுண்டுகள் கடன் வாங்கி தொழிலை தொடங்கினார். இப்போது அவர் 12 ஊழியர்களை கொண்டுள்ளார், மேலும் தன் தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

அக்‌ஷய், யூகே-வில் வசிக்கும் தாய்மார்கள் பலரை தன் தொழிலில் ஈடுபடுத்தி, வாடிக்கையாளர்களுக்கு வீட்டை காண்பிக்கும் பணியை செய்ய திட்டமிட்டுள்ளார். மிரர் பேட்டியில் பேசிய அக்‌ஷய்,

“வீடு விற்பனை என்பது ஒரு பெரிய விஷயம். அதில் உண்மையான, நேர்மையான தாய்மார்களை பணியில் அமர்த்தினால் மக்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீது நன்மதிப்பு கூடும் என்று நம்புகிறேன்,” என்கிறார். 

இளம் வயதில் அக்‌ஷயிடம் காணப்படும் கடும் உழைப்பு பலரையும் ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.