சென்னைக்கு அனுப்பிய வெள்ள நிவாரணப் பொருட்கள் முடக்கம்: அமெரிக்காவாழ் இந்தியர் ராதிகா வருத்தம்

0

மாற்றத்தை உண்டாக்குவது எவ்வளவு கடினமானது? வெறும் ஒரேயொருவரின் மனம்போதும், மற்றவர்களது வாழ்க்கையில் மாற்றத்துக்கான ஒளியைக் கொண்டுசேர்க்க முடியும். ஆனால், ஏதோவொரு வெளிப்புற சக்தியால் இது எளிதாக தடுக்கப்படலாம் என்பதுதான் நிதர்சனம்.

அமெரிக்காவில் வசித்துவரும் ராதிகா கோவ்தா ராவ் இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்ட தனிமனிதர்களுள் ஒருவர். இந்தியாவிலிருந்து சரியாக பதிமூன்றாயிரத்து எண்ணூற்று எழுபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அவர், சென்னையை சீர்குலைத்த வெள்ளம் பற்றித் தெரிந்ததும் தனது வசிப்பிடத்திலுள்ளவர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்தார்.

சென்னையில் வளர்ந்த பெண்ணான ராதிகாவுக்கு, அமெரிக்காவில் கல்வி கற்க ஆசை. ஆனால் இந்த முயற்சியில் மூன்று முறை விசா நிராகரிக்கப்பட்டதால் இங்குள்ள சங்கர நேத்ராலயாவிலேயே ’ஆப்தோமெட்ரி’ பயின்றார். ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ப்ருசெல்ஸில் மூன்றாண்டுகளைக் கழித்தவர், அமெரிக்காவிற்கு தனது இரு குழந்தைகளுடன் கடந்த 1997-ம் ஆண்டு சென்று வாழத் தொடங்கினார்.

தனது வாழ்விலேயே சென்னைக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பியதுதான் பெரிய சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார். இது கடும் சவால்கள் நிறைந்த பணியாக இருந்தாலும் உதவ வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தனக்கு உந்துசக்தியாக இருந்ததாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாநிலத்தின் சானிட்லி பகுதியில் வசித்துவரும் ராதிகா, சமூக ஊடகங்கள் மூலமாக தனது பகுதியில் வசிக்கும் அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் சென்னை மக்களுக்கு அனுப்ப ஆடைகளை உதவியாக பெற்றார்.

நல்ல நிலையில் உள்ள உடைகளை, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் விதமாக புடவை, குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் உள்ளாடைகளை எட்டே நாட்களில் சேமித்தார்.

‘கண்டங்கள் தாண்டி வாழ்ந்தாலும், ஆபத்து நேரத்தில் நம் மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமே, நேரம் மற்றும் உழைப்பை செலவிட்டு அதிகம் உபயோகப்படுத்தாத ஆடைகளை கண்டெய்னர் முழுவதுமாக நிறைக்கத் தூண்டியது’ என்றார்.

எனது நோக்கம் பற்றித் தெரிந்ததும் தலைநகர் டி.சி. பகுதியிலிருந்தும் பலரும் உதவ முன்வந்தனர். நிறைய பேர் புத்தம் புதிய உடைகளை ராதிகாவின் வீட்டு முகவரிக்கு அனுப்பத் தொடாங்கினர்.

ராதிகாவுக்கு உதவ முன்வந்த பல வாலண்டியர்கள் இணைந்து இரண்டு நாட்கள் இந்த ஆடைகளை சரிபடுத்த உதவி செய்தனர்.

பத்து நாட்கள் தொடர்ந்து உழைத்த பின்னர், 700 பெட்டிகளில் ஆடைகளை அவர்கள் அடைத்தனர். மேலும், சில பெட்டிகளில் மற்ற நிவாரணப் பொருட்களை வைத்தனர். அத்துடன், நிவாரண உதவிக்காக பெறப்பட்ட சுமார் ஆறாயிரம் அமெரிக்க டாலரையும் சேர்த்தனர்.

ஒரு கண்டெய்னரில் முழுவதுமாக அடைக்கப்பட்ட அவசர உதவிக்கான நிவாரணப் பொருட்களை தனது சகோதரியின் சொடியூஸ் (SODEWS) அமைப்புக்கு அனுப்பினார். இவையனைத்தும், கடந்த ஜனவரி 27-ம் தேதிதான் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

ஆறாயிரம் அமெரிக்க டாலருடன் இந்தியா வந்து சேர்ந்த ராதிகா பத்து நாட்களின் கடும் உழைப்பு கண்டெய்னருக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தார். அந்த கண்டெய்னர் சுங்கவரித் துறையால் தடுத்து நிறுத்தப்படிருந்தது.

‘அவசர உதவிக்கு என அனுப்பப்பட்ட பொருட்கள், சரியான நேரத்தில் மக்களை அடையாதது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்பட்டுத்துகின்றது.’

பொன்னேரியில் உள்ள அந்த கண்டெயினரை மீட்கும் நடவடிக்கையில் ராதிகாவின் உதவிக் குழுவினர் தீவிரமாக இறங்கினர்.

மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பிவிட்ட ராதிகா, இந்தப் பிரச்சனைக்கான தீர்வுக்காக தொடர்ந்து பலரையும் அணுகி வருகின்றார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பலரும் இயல்பு வாழ்க்கைக்கு முயன்று வரும் இந்த வேளையில், மக்களுக்கு இவையணைத்தும் சென்று சேர வேண்டும் என்பதுதான் ராதிகா போன்ற நல்ல உள்ளங்களின் எதிர்பார்ப்பு.

ஆக்கம்: தன்வி துபே | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்