புதுக்கோட்டை பசுமை நாயகன்: சத்தமின்றி 14 குக்கிராமங்களில்  சாதிக்கும் தனி முயற்சி!

தனது கிராமத்தைப் பசுமையாக்கவும், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தவும் முனைப்புடன் செயல்பட்டு வெற்றியும் கண்டுள்ளார் பொறியியல் பட்டதாரி கணேஷ்பாபு.

2

படித்தது பொறியியல். கிடைத்தது நல்ல ஊதியத்தில் வேலை. பணம் வந்திடினும் மனம் நிறையாததால் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கிய கணேஷ்பாபு தன் வறண்ட கிராமத்தை பசுமையாக்கப் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். அத்துடன், 85 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி நிறுவ உறுதுணைபுரிந்துள்ளார்.

கணேஷ்பாபு
கணேஷ்பாபு

புதுக்கோட்டை மாவட்டம் -  அன்னவாசல் ஒன்றியத்தில் இருக்கிறது இருந்திரப்பட்டி எனும் கிராமம். அப்பகுதி 14 குக்கிராமங்களைக் கொண்டது. அதில், சின்னியம்பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு. இயற்கை வேளாண்மையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், தனது பகுதியில் குக்கிராமங்களுக்குச் செய்துவரும் சேவை மலைக்கத்தக்கது.

டாடா தேசிய இணைய கல்விக் கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விருது விழா சமீபத்தில் சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்தியாவின் 9 மாநிலங்களில் இருந்து 34 பெண்கள் உட்பட 74 கல்விக் கழகப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தப் பட்டமளிப்பு சான்றைப் பெற்றனர். இதில், தமிழகத்தில் இருந்து விருது பெற்றவர்களில் கணேஷ்பாபுவும் ஒருவர். சமுதாயத்தில் மிக எளிய மனிதராக பல்வேறு துறைகளில் ஆற்றியுள்ள பங்கினையும், மக்கள் நலனுக்கு ஆற்றிய மகத்தான சேவையைக் கெளரவிக்கும் வகையிலும் இவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கடந்து வந்த பாதை, செயல்திட்டங்கள் குறித்து யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிரும்போது, 

"பொறியியல் படிப்பு முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். 2011-ல் இருந்து ஐந்து ஆண்டுகளாகவே சமூகப் பணிகளையும் செய்து வருகிறேன். எங்களுடையது மிகவும் வறட்சியான பகுதி. ஏழு வருடங்களாக பூமி வறண்டு கிடக்கிறது. எங்கள் 14 குக்கிராமங்களையும் பசுமையாக்க வேண்டும் என்று முடிவு செய்து மரக்கன்று நடும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.

850 குடும்பங்கள் கொண்ட எங்கள் பகுதியின் மக்கள்தொகை சுமார் 3,500. பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்கள் பயன்படும் வகையிலும் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டேன். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த என் மனைவியும், தன்னார்வல நண்பர்கள் சிலரும் என் முயற்சிக்கு துணைபுரிந்தனர்.

எங்கள் குளங்களில் நீர்ப்பிடிக்காத காலி இடங்கள் நிறைய இருக்கும். அதில், கருவேல மரங்கள்தான் மண்டிக்கிடக்கும். முதலில் வனத்துறையை அணுகி மரக்கன்றுகளைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்தோம். 2013-ல் வெண்ணாடிக்குளத்தைத் தேர்ந்தெடுத்தோம். அங்கு 25,000 செடிகள் வைத்தோம். 

வேம்பு, ரோஸ்வுட், நாவல், இலுப்பை முதலான மரக்கன்றுகளை நட்டோம். இந்த முயற்சிக்காக அதே ஆண்டில் கலெக்டரிடம் இருந்து விருது கிடைத்தது. அந்த மரக்கன்றுகள் எல்லாம் இப்போது மரமாக வளர்ந்து பசுமையளிப்பதைப் பார்ப்பதற்கே மட்டற்ற மகிழ்ச்சி.
நர்சரி அமைக்கும் பணியில் அன்று...
நர்சரி அமைக்கும் பணியில் அன்று...

குளம் என்பது காலியான பொது இடம் என்பதால், அதையேத் தேர்ந்தெடுத்து மரக்கன்றுகள் நடுவதற்கு வித்திட்டிருக்கிறார் கணேஷ்பாபு. ஆடு, மாடுகள் மேயாத வகையில் குடியிருப்புகளை ஒட்டிய குளத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறார். மழை பெய்யாததால் தண்ணீருக்குத் தன் செலவிலேயே ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதன்படி, தனக்குச் சொந்தமான டேங்கரை குளத்தையொட்டி வைத்திருக்கிறார். கிணற்றில் இருந்து குழாய் மூலம் அங்கு தண்ணீர் நிரப்புவதற்கு ஏற்பாடு செய்தார். அந்த கிணற்றில் இருந்து பக்கெட், குடங்கள் மூலம் ஊர்மக்களே தினமும் தண்ணீர்ப் பிடித்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி வளர்த்திருக்கின்றனர். தற்போது, அங்கு மரங்களால் பசுமை நிறைந்து காணப்படுகிறது. ஏழை, எளிய மக்களும் வேம்பு மர விதைகள் முதலானவற்றை திரட்டி சந்தையில் விற்று வாழ்வாதாரத்துக்கும் பயன்பெற்று வருகின்றனர்.

அதற்குப் பிந்தைய முயற்சிகள் குறித்தும், தான் செய்துவரும் இயற்கை விவசாயம் பற்றியும் கூறிய கணேஷ்பாபு, "வெண்ணாடிக்குளம் தந்த பசுமை வெற்றி தந்த உற்சாகத்தில் நாமே நர்சரி ஒன்றை அமைப்பது என்று முடிவு செய்தோம். ஒரு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைத்தது. விதைகளைத் திரட்டி நாங்களே உற்பத்தி செய்தோம். ஏழு குளங்களில் ப்ளான்டேஷன் பணிகளைத் தொடங்கினோம். இதுவரை 60,000 மரக்கன்றுகள் வைத்துவிட்டோம். இன்னும் 40,000-யும் வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். மழையைப் பார்த்துப் பார்த்து மரம் நடுதலில் ஈடுபட்டு வருகிறோம். 

எப்போதும் என் வீட்டில் நூறு மரக்கன்றுகள் சொந்தமாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கேட்டு வாங்கிச் சென்று நட்டு வைத்துக்கொள்ளலாம்.

இதனிடையே, வனத்துறை மூலம் தனியார் இடங்களிலும் மரக்கன்று நடுவதற்கான முயற்சியில் இறங்கினோம். தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் 15,000 மரக்கன்றுகள் வாங்கி 15 விவசாயிகளின் இடங்களில் நட்டிருக்கிறோம். எனது பசுமைத் திட்டத்தில் இதுவரை 6 குக்கிராமங்களை எட்டியிருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் தன்னார்வலரைத் தேடிவருகிறேன். அவர்களை வைத்து ஒரு குழுவாக செயல்பட்டு, அனைத்துக் குக்கிராமங்களிலும் பசுமை பரவுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறேன்" என்றார் உத்வேகத்துடன்.

பசுமைப் பின்னணியில் இன்று...
பசுமைப் பின்னணியில் இன்று...
கிராமங்களைப் பசுமையாக்குவது மட்டுமல்ல; மக்களின் சுகாதார நலனுக்காகவும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கணேஷ்பாபு. அதன் முக்கிய அம்சமாக, திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த கிராமத்தில் 85% வீடுகளில் கழிப்பறை வசதிகள் நிறுவுவதற்கு இவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. இதற்கான விழிப்புணர்வு பிரச்சார செயல்பாட்டை, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை அமைப்பினருடன் இணைந்து மேற்கொண்ட உத்திகள் மெச்சத்தக்கது.

"எங்கள் ஊரில் 324 வீடுகளுக்கு கழிவறை அமைப்பதற்கான உபகரணங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், மக்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தொடர்ந்து திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தார்கள். தன்னார்வலர்களுடன் சேர்ந்து 2 வாரத்துக்கு தினமும் ஒரு குக்கிராமத்துக்குச் சென்றோம். வீடு வீடாக பிரச்சாரம் செய்தோம். அதில், 45% பேர் கழிப்பறை கட்டினர். பின்னர், ஊர் தோறும் பொதுக்கூட்டப் பிரச்சாரம் செய்தோம். அதுவும் பலன் தந்தது. ஒரு கட்டத்தில், திறந்தவெளி கழிப்பிடப் பகுதிக்கே சென்று கூட்டம் கூட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். இது எதிர்பார்க்காத நற்பலனைத் தந்தது. இவற்றின் மூலம் 40% பேர் கழிப்பறை கட்டினர். 

இப்போது 85 சதவீத மக்கள் வீடுகளில் கழிப்பறை வசதி பெற்றுவிட்டனர். இதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து விருது கிடைத்தது. இந்தத் தொடர் முயற்சியில் தன்னார்வலர்களின் பங்களிப்பும், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களைத் திரையிட்டது, நாடகங்கள் நடத்தியது முதலானவற்றில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை அமைப்பினரின் பங்களிப்பும் மகத்தானது" என்றார் கணேஷ்பாபு.

தற்போது இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரும் அவர் மேலும் கூறும்போது, "இயற்கை விவசாயம்தான் எனக்குத் தொழில். அத்துடன் நாட்டு மாடுகள் வளர்ப்பிலும் கவனம் செலுத்துகிறேன். இந்த இரண்டிலும் நாம் முன்மாதிரியாக இருந்தால் மற்றவர்களைப் பின்தொடர வைத்துவிடலாம் என்பது என் நம்பிக்கை. விவசாயத்தில் எனக்குப் போதுமான வருவாய் வருகிறது. சமீபத்தில் 20 சென்ட் நிலத்தில் இயற்கை வேளாண்முறையில் கத்தரிக்காய் பயிரிட்டேன். அதைச் சந்தையில் கொடுக்கும்போது நல்ல வரவேற்பு இருந்தது. இதைப் பார்த்துப் பலரும் இதே முறையைப் பின்பற்ற யோசனை கேட்டனர்.

நான் வாழும் பகுதி முழுவதிலும் மரக்கன்று நடவேண்டும். குறிப்பாக, மருத்துவப் பயன் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். என் பசுமை கிராமத்தை முன்மாதியாகக் கொண்டு, மற்ற கிராமங்கள் பின்பற்ற வேண்டும். அதுவே மாவட்டம், மாநிலம் என விரிவாகவேண்டும் என்பதே நோக்கம்," என்றார் கணேஷ்பாபு.

இந்தச் செய்திக் கட்டுரை பதிவேற்றப்படும்போது, கணேஷ்பாபுவின் கிராமத்தில் பெய்துகொண்டிருந்தது மழை! 

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்