சபரிமலை கலவரத்தை கவர் செய்த பெண் ஊடகவியலாளர் ராதிகா ராமசுவாமி! 

0

சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்ததும், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களும் நாம் அறிந்ததே. கலவரங்களுக்கு தலைமை பொறுப்பேற்று நடத்தியிருந்த ‘சபரிமலை கர்மா சமிதி’ அமைப்பு, சமீபத்தில் ஊடக நிறுவனங்களுக்கு எல்லாம் கடிதம் எழுதியிருந்தது. 

பெண் ஊடகவியலாளர்களை சபரிமலை கோவிலுக்குள் அனுப்ப வேண்டாம் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் சி.என்.என்-18 சேனலுக்காக சபரிமலையில் இருந்து ரிப்போர்ட்டிங் செய்த ஊடகவியலாளர் ராதிகா ராமசுவாமியிடம் பேசினோம். 

“நூற்றுக்கணக்கான பேர் கலவரமாய் எங்கள் காரை சுற்றி நின்ற போது நாங்கள் முடிந்தோம் என்று தான் நினைத்தோம்,” என்கிறார். 

கேரளாவைச் சேர்ந்த ராதிகா ராமசுவாமி, மும்பையின் லோவர் பரேலில் இருக்கும் சி.என்.என்-18 சேனல் அலுவலகத்தில் முதன்மை ஊடகவியலாளர். கேரளாவில் வெள்ளப்பெருக்கு வந்த சமயத்தில் அவர் கேரளாவில் இருந்து ரிப்போர்ட்டிங் செய்ததை பார்த்திருப்பீர்கள்; தமிழ்நாட்டில் இருந்து ரிப்போர்ட்டிங் செய்வதையும் பார்த்திரூப்பீர்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, அவருடைய சேனலில் இருந்து யார் சபரிமலை செய்தியை கவர் செய்வது என்று ஆலோசித்த போது, முதன்மை தேர்வாக இருந்தது ராதிகா ராமசுவாமி தான். பெரும்பாலான ஊடகவியலாளர்களை போலவே, அவருக்கும் கோவிலுக்குள் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. 

“நிலக்கல்லில் இருந்து பம்பா சென்று கொண்டிருந்தோம். காரில் மூன்று பேர் இருந்தோம். நான், கேமராமேன் மற்றும் ட்ரைவர். போராட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் எங்களை நிறுத்தி எங்கே போகிறோம் என்றுக் கேட்டார்கள். நாங்கள் செய்தி சேனலில் இருந்து வருவதாக சொன்னதும், பெண் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னார்கள். அப்போது நான் பொறுமையாக, மலையாளத்தில், கோர்ட் எங்களை அனுமதித்திருக்கிறது என்று சொன்னேன். உடனே அவர்கள் கடுமையாக எங்களை தாக்கத் தொடங்கினார்கள். அதொரு கொடூரமான அனுபவமாக இருந்தது,” என்கிறார். 

நூற்றுக்கணக்கான ஆட்கள் காரைச் சுற்றி நின்று கொண்டு அவர்களை வசைபாடவும், தாக்கவும் தொடங்கினார்கள். கார் கதவுகளையும், இருபக்கம் இருந்த கண்ணாடிகளையும் உடைத்தார்கள். கார் வைப்பரை எடுத்து ட்ரைவரை அடிக்க வந்தார்கள். ராதிகாவை காரில் இருந்து வெளியே இறங்க சொன்னார்கள். 

“இறங்கினால் நான் முடிந்தேன் எனத் தெரியும். அதனால் இறங்காமல் காருக்குள்ளேயே இருந்தேன். என் நெஞ்சு மீது தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தார்கள். வலி தாங்க முடியாததாக இருந்தது,” என்கிறார். 

”எங்கள் கேமராமேன் எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அங்கு நடந்த வன்முறையில் வெறும் இருபது சதவிகிதம் தான் அந்த வீடியோவில் இருந்தது. போராட்டத்தின் போது திடீரென ஐயப்ப கோஷங்கள் எல்லாம் சொல்லத் தொடங்கி விட்டார்கள். 

”இரண்டு போலீஸ் அதிகாரிகள் எங்களை கிளம்பச் சொன்னார்கள். நாங்கள் ரிவர்ஸ் எடுத்த போது, நாங்கள் அந்த இடத்தைவிட்டு நகரும் வரை எங்களை பின் தொடர்ந்து வந்து எங்களை தாக்கினார்கள். நிச்சயமாக அவர்கள் வெறும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே கிடையாது. இதற்கு பின்னால் நிச்சயமாக அரசியல் காரணங்கள் இருக்கும். வலது சாரி அமைப்புகள் தான் இதற்குக் காரணமாக இருக்கும்,” என்கிறார். 
ராதிகாவின் கார் தாக்கப்பட்டபோது எடுத்த படம்
ராதிகாவின் கார் தாக்கப்பட்டபோது எடுத்த படம்

இந்த வன்முறை அதோடு முடிந்துவிடவும் இல்லை. 

“நாங்கள் எங்கு சென்றாலும், போராட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் எங்கள் காரை அடையாளம் கண்டு கொண்டு எங்களை அசிங்கமாக பேசினார்கள். நிலக்கல்லில் இருந்து கிளம்பும் வரை எங்களை பார்த்து கத்திக் கொண்டே தான் இருந்தார்கள்” என்கிறார் ராதிகா. 

ராதிகாவும், அவர் குழுவும் அவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சென்ற போது காவல் துறையினர் அதை தாமதிக்காமல் செய்திருக்கின்றனர். ஆனால், போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை பார்த்து காவல்துறையும் கூட ஸ்தம்பித்திருக்கிறது. 

“இவ்வளவு வன்முறை நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. போராட்டங்கள் நடக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான், ஆனால் அந்த வன்மமும் கோபமும் எதிர்பாராதது,” என்கிறார். 

சமீபத்தில், மறுபடியும் சபரிமலை கோவில் பெண்களுக்காக திறக்கப்பட்டது. கோவிலுக்கு வழிபட வந்த பெண்ணை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் எனவும் 52 வயது பெண் கலவரங்களுக்கு மத்தியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார் எனவும் காவல்துறை அதிகாரிகள் அதிகளவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஒருசேர செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. 

இனி சில மாதங்களில், ஐயப்ப கோவிலுக்குள் பெண்கள் செல்வது சாதாரண விஷயமாக கருதப்படும். அப்போது, இப்படி ஒரு முன்னேற்றத்தை ஊக்குவித்து, முன்னோடியாக இருக்கும் ஊடகவியலாளர்கள், குறிப்பாக கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்டவர்கள் எல்லாரையும் வரலாறு மறக்காமல் இருக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் : தேவிகா சிட்னிஸ் | தமிழில் : ஸ்னேஹா

Related Stories

Stories by YS TEAM TAMIL