இந்தியாவின் ‘மழை மனிதன்’ சேகர் ராகவன் மழைநீர் சேமிப்பு திட்டத்தை சாத்தியமாக்கியது எப்படி?

0

சேகர் ராகவன். ரெயின்மேன் அதாவது மழை மனிதன் என்று அழைக்கப்படும் இவர், சென்னை பெசண்ட் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 22 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானியான இவரது வீட்டு குழாயில் வந்த தண்ணீர் உப்பு சுவையுடன் இருந்ததை கவனித்தார். 

தண்ணீரின் தரத்தின் மீது ஏற்பட்ட கவலை காரணமாக, அதில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள் முளைக்கும் நகரத்தில், மழை நீர் நிலத்தில் சென்றடைய வழியில்லை என்பதை புரிந்து கொண்டார். மழை நீருக்கு பதில், கடல் நீர் நிலத்தில் கலப்பதையும் கண்டறிந்தார் சேகர். 

தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் சுமார் 2000 கிராமங்களில் அவர் நடத்திய ஆய்வின்படி, ஒரு ஒற்றுமையை தெரிந்து கொண்டார். கிராமங்களில் நீர்; குளம், குட்டை என்று பல வடிவுகளில் சேமிக்கப்படுகிறது, ஆனால் நகரத்தில் அது ஏன் நடைப்பெறவில்லை என்று யோசித்தார். மக்கள் ஏன் தண்ணீரை சேமிப்பதில்லை? தி ஹிந்து பேட்டியில் பேசிய சேகர்,

“என் வாழ்நாள் முழுதும் எனக்கு சுத்தமான, நல்ல தண்ணீர் வேண்டும்,” என்றார்.

அதை உணர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீடு வீடாக சென்று கதவை தட்டி மக்களை சந்தித்து, மழைநீர் சேமிப்பு பற்றி பேசினார். பல அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரை, சேல்ஸ்மேன் என்று நினைத்து விரட்டியதும் உண்டு.

ஒரு முறை மழைநீர் சேமிப்பு பற்றி உள்ளூர் செய்தித்தாளில் பேசியிருந்தார். அவர் பகுதியில் இருந்த பள்ளியின் முதல்வர் அவரை அழைத்து, மழைநீர் சேமிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பேச்சு ஒன்றை ஏற்பாடு செய்தார். அப்போது முதல் பல வீடுகளில் இருந்து அவருக்கு அழைப்புகள் குவிந்தது. மழைநீர் சேமிப்பு செய்வது எப்படி, அதனால் உள்ள பலன் என்ன என்று பலருக்கு வழிகாட்டினார்.

2001-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, மழைநீர் சேமிப்பு குறித்து தீவிரமாக இருந்தார். அப்போது சேகரின் பங்கு வெகுவாக இருந்தது. சென்னையில் 90 சதவீத வீடுகளில், அலுவலகங்களில் மழைநீர் சேமிப்பு திட்டம் வர அவர் உதவியுள்ளார். 2002-ல் ‘ரெயின் செண்டர்’ என்ற மழை மையத்தை சென்னையில் தொடங்கி அங்கு பொது மக்களுக்கு மழைநீர் சேமிப்பு பற்றி புரிதலை ஏற்படுத்தினார். முதலமைச்சர் அந்த மையத்தை திறந்து வைக்க, அஷோகா விருதையும் 2003-ம் ஆண்டு பெற்றார் சேகர்.

தமிழ்நாட்டில் சேகரின் பணியை பற்றி கேள்விப்பட்டு, டெல்லி அரசாங்கம், மழைநீர் சேமிப்பு பாலிசி வடிவமைப்பில் அவரை முக்கிய அங்கத்தினராக சேர்த்தனர். 

“மழைநீர் சேகரிப்பில் தமிழகம் முன்னிலையில் இருக்கையில், பிற மாநிலங்களும் அதனிடம் இருந்து கற்று கொள்ளமுடியும். இத்தனை செய்தும் இன்று தமிழகத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வேறு பல காரணங்களும் உள்ளது,” என்கிறார் சேகர்.

கட்டுரை: Think Change India