ஜாதகத்தை வைத்து தன் நிறுவனம் மூலம் ஜாலங்கள் காட்டும் தினுப்!

0

இன்னும் 30 நாட்களே இருந்தன. பணப்பதிவேடு அமைதியாக இருந்தது. துணை நிறுவனவர் குழப்பம் காரணமாக விலகியிருந்தார். அலுவலகத்தை காலி செய்தாக வேண்டிய நிலை. ஏன் என்றால், வாடகை கொடுக்க இயலாது. இது தான் தொழில்முனைதலா?? தினுப், கல்லேரில் தனது இல்லத்தை விட்டு மிகப்பெரிய கனவுகளோடு வெளியே வந்தபோது அவரது மனதில் இருந்ததே வேறு.

2013 துவக்கத்தில் அனைத்தும் தோல்வியாகவே தினுப்பிற்கு நிகழ்ந்தது. அவரது எண்ணமும் எதிர்மறையாகவே இருந்தது. அவரது பெற்றோர்கள் கூறியது சரியாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. பொறியியல் பட்டம் பெற்று ஒரு வேலைக்கு சென்றிருக்க வேண்டும். மின் வணிகம் மூலம் டி- ஷர்ட் விற்பனை செய்யும் நிறுவனம் துவங்கியது சரியல்ல. அதற்கு முதலீடு செய்த 25000, முழுவதும் வீணானது.

நம் குடும்பத்தில் பட்டப்படிப்பு முடிக்கும் முதல் ஆளாக நம் மகன் இருப்பான், வெளிநாட்டில் வேலைகிடைத்து, அங்கேயே குடியேருவான் என்ற கனவோடு அவன் பெற்றோர் இருந்தனர். ஆனால் அவருக்கோ வேறு எண்ணங்கள் மனதில் இருந்தது.

தொழில்முனைவை அவர் தேர்வு செய்தார். அப்பாதை அதற்கான சவால்களை பெற்றிருந்தது. முதல் தொழில் நிறுவனத்தை மூடியபிறகு, அடுத்த நிறுவனத்தோடு களத்தில் குதித்தார் தினுப். ஆன்-லைன் மூலம், ஜோதிடம் பார்க்கும் வசதி தரும் தளம் : "மான்க் வ்யாசா" (Monk Vyasa) இவ்வருடத்தின் துவக்கத்தில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், நாள் ஒன்றிற்கு, 75,000 முதல் 1,00,000 ரூபாய் வரை ஈட்டுவதாக, அவர் கூறுகிறார்.

ஆனால், 2013 துவக்கத்தில் விநியோக பணியாளராக தனது பணியை துவக்கி, அங்கிருந்து முன்னேற, வேண்டி இருந்தது.

முதல் நிறுவனத்தின் தோல்வி :

"ச்சின் எனது நாயகன், எனவே பள்ளி விடுமுறைகள், கிரிக்கெட் விளையாடுவதிலோ, அல்லது பக்கத்தில் இருந்த குளத்தில் நீச்சல் அடிப்பதிலோ கழிந்தன. எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை ஆனால் 9 - 5 வரை பணிபுரியும் வாழ்க்கை என்னை ஈர்க்கவில்லை" என்கிறார் 27 வயதான தினுப். ஆனால் அவருடைய நண்பர்கள் பலர் போல் அவரும், ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் விரைவிலேயே, அது மிகவும் தவறான ஒரு முடிவு என்பதை உணர்ந்தார்.

எனது கல்லூரி இரண்டாம் ஆண்டில் ஒரு தொழில்முனைய முடிவெடுத்தேன். நிறைய யோசனைகள் இருந்தன, அவற்றை பற்றி நண்பர்களோடு விவாதித்தேன். மேலும் பழைய பொருட்களை விற்பது, வாடிக்கையாளர் தகவல் அட்டை (சிம் கார்டு) விற்பது, மற்றும் அங்கிருந்த மற்ற நிறுவனங்களுக்கு ஊர் சுற்றி காண்பிப்பது என, பல வேலைகள் செய்தேன். அப்படி விற்று சேர்த்த பணத்தில் நான் ஒரு கணினி பெற்றேன்" என்கிறார் தினுப்.

இணையம் மற்றும் கணினிகள், தினுப்பை மிகவும் ஈர்த்தன, எனவே, அவற்றில் தொழில் துவங்க முடிவுசெய்து, தனது படிப்பை விட்டு தொழில்முனைய எத்தனித்தார். ஆனால் அந்த முடிவிற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது தந்தை, தினுப் மனது மாறும் வரை அவரோடு பேசுவது இல்லை என முடிவெடுத்தார். அங்கு இருப்பது சிரமமாக படவே, தினுப் கொச்சியிலிருந்து, சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்த பிறகு தன்னுடைய தேவைகளுக்காக, ஒரு விற்பனை பிரதிநிதியாக வேலைபார்த்தார். "சென்னையில் இருந்து திரும்பி வருகையில், மின் வணிகம் மூலம் டி-ஷர்ட் விற்பனை செய்யும் நிறுவனம் துவங்கும் எண்ணத்தோடு வந்தேன். 2012ல், மின் வணிகம் கேரளாவில் அவ்வளவு பிரபலம் இல்லை, என்கிறார் தினுப்.

ஆனால் எதிர்பார்த்தது போல, எதுவும் நிகழவில்லை. மேலும் செலவுகளை சமாளிப்பது சவாலாக இருந்தது. அவர்கள் நிகழ்த்திய வியாபாரத்தில் பல பரிவர்த்தனைகள், பொருள் பெற்று ரொக்கம் கொடுக்கும் முறையிலேயே அமைந்தன. ஆனால், அந்த பணம் அவர்கள் கைகளுக்கு வந்து சேர ஒரு மாத காலம் பிடித்தது. எனவே, தனது நிறுவனத்திற்கும், மற்ற நிறுவனங்களுக்கும் விநியோக பிரதிநிதியாக தினுப் மாறி, தானே வீடு வீடாக சென்று விற்பனையை தொடங்கினார்.

"6 மாத காலம், நான் கொச்சியில் விநியோக பிரதிநிதியாக பணிபுரிந்தேன். அங்கு பலருக்கு, என்னை விநியோக பிரதிநிதியாக நன்கு பரிச்சையம்" என்கிறார் தினுப்.

தினுப்பிற்கு சவால்கள் புதிதல்ல. கொச்சியில் இருந்து 25 km தள்ளியுள்ள பட்டிமட்டோம் என்ற ஊரில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தார். மேலும் மலையாளம் வழி கல்வி பயின்றதால், கல்லூரி செல்கையில், ஆங்கிலம் கற்கவேண்டி இருந்தது. மேலும் அவ்வப்போது கிடைத்த வேலைகளை தனது செலவுகளுக்காக பணம் ஈட்ட செய்து வந்தார்.

இறுதியில், தனது முதல் தொழில்முனைவை கொச்சியில் ஒருவருக்கு விற்றார். ஆயினும் தனது தொழில்முனையும் ஆசையை கைவிடாது, நிடித்து நிற்கும் ஒரு தொழில் துவங்க, முயற்சித்து வந்தார். அதன் மூலம் ஆன்-லைன் தொடர்பாக என்ன சேவைகள் வேண்டும் என்றாலும் தினுப்பை தொடர்பு கொள்ளலாம் என்ற நிலை உருவாகியது.

மான்க் வ்யாசா மூலம் ஒரு புதிய துவக்கம் :

தற்செயலான ஒரு நிகழ்வே, தினுப்பை அவரது புதிய நிறுவனத்தை துவங்க வைத்தது. 2013 டிசம்பர் மாதம் நண்பனின் வீட்டில் இருந்த போது அவனது தந்தை, ஜோதிடரிடம் செல்வதை தினுப் பார்த்தார். உடனடியாக, அவரிடம் ஏன் இணையத்தில் ஒரு ஜோதிடரை அணுகக்கூடாது என்று கேட்டார்.

"நான் எனது நண்பனின் மடிக்கணினியை வைத்து இணையத்தில், ஜோதிட ஆலோசனைகள் வழங்கும், வலைத்தளங்களை தேடினேன் ஆனால், என்னால் அவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை" என்கிறார் தினுப். மேலும் சில வலைத்தளங்களை பார்த்த பின், தானாக ஜாதகம் உருவாக்கும் தொழில்நுட்பத்தை பற்றி அறிந்தார் அவர். அவை தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் போன்றவற்றை வைத்து கணிக்கப்படுபவை.

அந்த நொடி என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நொடி. ஜாதகத்தை ஜோதிடத்தை, முக்கிய முடிவுகள் எடுக்க இந்தியர்கள் பலர் நம்புகின்றனர். ஆனால் மற்ற வசதிகள் போன்று இந்த வசதி இணையத்தில் கிடைப்பதில்லை என்கிறார் அவர்.

துணை நிறுவனரை கண்டறிதல் :

தனக்கு ஒரு வலுவான தொழில்நுட்பக் குழு வேண்டும் என்று உணர்ந்திருந்தார் தினுப். மாலை நான்கு மணிக்கு ஒரு தேனீர் அங்காடியில் அமர்ந்திருக்கையில், தனது கல்லூரி நண்பன் சரத் கேஎஸ்சை, அவர் சந்திக்க நேர்ந்தது. அப்போது சரத் ஒரு மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

நான் எனது யோசனையைப் பற்றி கூறியபோது, அது அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே அதே இடத்தில் பல முறை சந்தித்து, பல யோசனைகள் மற்றும் திட்டங்களை வகுத்தோம். அதை தொடர்ந்து, அவனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, மான்க் வ்யாசாவின் துணை நிறுவனராக இணைந்தான்.

கரடு முரடான பாதை :

அடுத்த இரண்டு மாதங்கள் இருவரும் பாய்வு படம் மற்றும் பயனர் இடைமுகம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினர். அதன் பின் மென்பொருள் கட்டமைப்பிற்கு வந்தனர். அடுத்த கட்டமாக ஜோதிட வல்லுனர்களை நிறுவனத்தில் கொணர்வது சவாலாக இருந்தது. அவர்களுக்கு இணையத்தை பற்றி அவ்வளவாக தெரியவில்லை. அவர்களை சமாளித்து அவர்களுக்கு இணையம் மூலம் ஜோதிட ஆலோசனைகள் வழங்கும் பயிற்சி அளிக்க சில காலம் பிடித்தது.

ஆனால் தொழில்நுட்பக் கோளாறு அவர்களை மீண்டும் முதல் படிக்கே கொண்டு சென்றது. சோதனையின் போது நன்றாக இயங்கிய வலைத்தளம், கட்டணமுறை சேர்த்தபோது இயங்க மறுத்தது.

எனவே அவர்கள் வலைதள சேவையை நிறுத்திவைத்து அதை மேலும் செழுமைப்படுத்தி பின் ஏப்ரல் 2015இல் மீண்டும் துவக்கினர். அதற்குள் தினுப், கேரளா TIE யின் உறுப்பினராக மாற, அவருக்கு வழிகாட்டலும் நிதியுதவியும், கொச்சியை மையமாக வைத்து இயங்கும் ஸ்டார்ட்அப் வில்லேஜின் நிறுவனர் சஞ்சய் விஜயகுமாரிடம் இருந்து கிடைத்தது.

வணிக மாதிரி :

ஏப்ரல் 2015 இல், மான்க் வ்யாசாவில், 15 ஜோதிடர்கள் இருந்தனர். ஒரு மாதத்திற்கு 22 ஜோதிட ஆலோசனைகள் வழங்கினர். தற்போது 25 ஜோதிடர்கள் உள்ளனர் மேலும் நாள் ஒன்றிற்கு 22 ஆலோசனைகள் வழங்குகின்றனர். ஒரு ஜோதிடரை நியமிக்கும் முன்பு, அவரை பற்றி நன்கு விசாரித்து அதன் பின்னரே நிறுவனத்தில் சேர்க்கின்றனர்.

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 சதவீத கமிஷனை கட்டணமாக இவர்கள் ஜோதிடர்களிடம் வசூலிக்கின்றனர். மேலும் பயனீட்டாளர்கள், காணொளி மூலமாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ ஜோதிடர்களோடு தொடர்பு கொள்ளலாம். கட்டணங்கள் இணையம் மூலம் ஏற்கப்படுகின்றது. தற்போது எங்கள் குறிக்கோள், இந்தியாவில் உள்ள ஜோதிடர்களை ஒரே தளத்தின் மூலம் இணைப்பதே.

மூன்று வருட காலத்தில் 2000 ஜோதிடர்களை தளத்தில் சேர்த்து, 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை ஈட்டுவதே நோக்கமாக வைத்துள்ளனர்.

வலைத்தள முகவரி

ஆக்கம் : சிந்து காஷ்யப் | தமிழில் : கெளதம் s/o தவமணி