ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி கிடைக்காமல் போவதற்கான 5 காரணங்கள்!

முதலீட்டாளர்கள் எப்போதும், சரியான அணி உள்ள, தங்களது சந்தையை உணர்ந்த, போட்டிகளுக்கு தயாராக உள்ள தொழில்முனைவுகளையே விரும்புகின்றனர்.

0

தற்போது உள்ள வணிக உலகில் தொழில்முனைவில் முதலீடு செய்பவர்கள் உண்மையாக தேவ தூதர்களாக பார்க்கப்படுகின்றனர். காரணம் ஆரம்ப கட்டங்களில் நிதியுதவி எங்கேயும் கிடைக்காத நிலையில் அவர்கள் அந்த தொழில், துவக்கம் பெற உதவுகின்றனர். நிதியுதவி இல்லாது முடங்கிக் கிடக்கும் பல புதிய நல்ல யோசனைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே முதலீட்டாளர்கள் தான். முதன் முதலாக ஒரு தொழில்முனைவிற்கு கிடைக்கும் அங்கீகாரமாக பார்க்கப்படும் இந்த முதலீடுகள் தான் பிற்காலத்தில் அந்த தொழில் முனைவின் முக்கிய அங்கமாக மாறுகின்றது.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், 

”தொழில்முனைவோரின் உலகில் தேவதை முதலீட்டளர்கள் பங்கு மிகவும் அவசியம்.”

சூழல் அவ்வாறு இருக்க, அனைத்து தொழில்முனைவோரும், நிதியுதவி பெறுவதில்லை. முக்கியமாக அவர்களுக்கு அவர்களிடம் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது தெரிவதில்லை. தொழில்முனையும் நபரா, அல்லது அவரது தொழிலா அல்லது, அவரது எதிர்கால யோசனையா? எது அவர்களுக்கு அவசியம் என்பதை உணர வேண்டும்.

அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மிகச்சிறந்த யோசனைகள் அவசியமா? அவர்களிடம் நாம் நமது தேவைகளை எடுத்துரைப்பது மிகச்சிறப்பாக இருக்க வேண்டுமா? அல்லது நமது அணியை அவர்களுக்கு பிடித்திருக்க வேண்டுமா? இப்படி பல கேள்விகள் இருப்பது போல பதிலும் பல விதமாக உள்ளது.

ஒரு முதலீட்டாளர், ஒரு தொழில்முனைவில் முதலீடு செய்ய 5 முக்கியக் காரணங்கள் கூற இயலும் :

1. அணி :

முதலீடு கிடைக்காமல் போவதற்கு முதல் முக்கியக் காரணம், அந்த தொழில்முனைவில் உள்ள அணி. சரியான குழு அமைந்துள்ள ஒரு தொழில்முனைவிற்கு நிதியுதவி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே தொழிலுக்குத் தேவையான திறமைகள் உடைய சரியான ஒரு அணி அமைவது அவசியம். இதன் காரணமாக வேறு எங்கும் உதவிக்காக நீங்கள் நிற்கும் அவசியம் உண்டாகாது. இதனால் உங்கள் செயலின் வேகம் தடைப்படாது.

2. சந்தை :

நீங்கள் கொடுக்கும் பொருளுக்கு அல்லது சேவைக்கு சந்தையின் அளவு என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். இதனை முதலில் பார்க்கையில் மிகவும் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் தொழில்முனைவில் சிறு சிறு சிக்கல்களை தீர்க்க முயன்று, அதில் நேரம் செலவழித்து, தொழிலை விரிவுப் படுத்த இயலுமா என்பதை கவனிக்காது போன தொழில்முனைவோர் உள்ளனர். உங்களது பொருள் அல்லது சேவை சரியானதாக இருந்தாலும், அதற்கான சந்தை இல்லாது இருந்தால், தொழில்முனைவில் வளர்ச்சி இராது. அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சந்தையில் முன்னதாகவே அதிகமான போட்டியாளர்கள் இருப்பின் அல்லது, தொழில்முனைவிற்கான சரியான சந்தையாக இல்லாது இருந்தாலும், உங்களுக்கு நிதியுதவி மறுக்கப்படலாம்.

3. உங்களின் அர்ப்பணிப்பு :

உங்களது நிறுவனத்தில் உங்களது முழு கவனமும் முழு அர்பணிப்பும் இருப்பது அவசியம். தொழில்முனைவில் வெற்றி காண விரும்பும் பலருக்கும் வசதியான பின்புலம் அமைவதில்லை. எனவே அவர்கள் தங்களது தேவைகளுக்காக ஒரு வாய்ப்பினை எப்போதும் வைத்திருப்பார்கள். அது ஒரு வேலையாகவோ அல்லது பகுதி நேர வேலையாகவோ இருக்கலாம். ஆனால், நிதியுதவி கிடைத்த உடன் நமது நிறுவனத்தில் முழுநேரமாக ஈடுபடுவோம் என நினைக்கும் எவருக்கும் நிதியுதவி கிடைப்பதில்லை. எனவே உங்களுக்கு தொழிலில் முழு அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். இதன் மூலம் முதலீட்டாளரும் உங்களையும் உங்களது நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்புகளையும் மதிப்பிடுவார்.

4. கவனத்தை குவித்தல்

ஆரம்பக் கட்டம் என்பது ஒரு தொழில் முனைவின் மிகவும் முக்கிய நேரமாகும். இந்த நேரத்தில் சில பரிசோதனைகளை செய்ய தொழில்முனைவோர் முற்படுவர். ஆனாலும் அவற்றிலும் உங்களது கவனம் குவிந்திருக்க வேண்டும்.

ஆனால் ஒரே நேர்த்தில் பலவற்றை செய்ய முற்பட்டு, தொழில் முனைவோர் சிக்கிக் கொள்கின்றனர். அதற்கு பதிலாக ஒரு நேரத்தில் சரியான ஒன்றில் கவனம் செலுத்தினால் போதுமானதாகும். பல விஷயங்களில் பரவலாக இருப்பதை போல் காட்டி, தொழில்முனைவின் மதிப்பீட்டை அதிகரிப்பது அல்லது அடுத்த 5 வருடத்திற்க்கான திட்டங்களை தீட்டுவது போன்றவை தொழில்முனைவிற்கு நிதி கிடைப்பதை நிச்சயம் தடுக்கும்.

5. வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்?

தங்களது தொழில்முனைவு கொடுக்கும் பொருள் அல்லது சேவை என்பது தேவையானது என்று பரிசோதித்து பார்க்காமலே பலர் நம்பிவிடுகின்றனர். குடும்பம், நண்பர்கள், உங்களது பொருளை வாங்குவது அல்லது உங்களுக்கு பாராட்டு விருதுகள் கிடைப்பது ஆகியவை சரியான அங்கீகாரம் ஆகாது.

“எனது பொருள் அல்லது சேவைக்கு பணம் கொடுக்க தயாராக இருக்கும் வாடிக்கையாளர் இருக்கிறாரா?,” என்பதை ஒவ்வொரு தொழில்முனைவோரும் அவசியம் யோசிக்க வேண்டும்.

மேலும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வாங்கியதற்கு சமம் அல்ல. எனவே இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள 5 கருத்துகள் மட்டும் தான் நிதியுதவி கிடைக்காமல் போவதற்கான காரணங்கள் என நாம் கூற இயலாது. ஆனால் நிதியுதவி கோரும் முன்பு இவற்றை சரிபார்ப்பது அவசியமாகும்.