பாம்பு சூப், பாம்பு வைன் டேஸ்ட் செய்ய காத்திருக்கும் ஃபுட்டீஸ்... 

0

ஃபயர் பீடா, ஐஸ்க்ரீம் பீட்சா, தந்தூரி சாய் என வித்தியாச வித்தியாசமான பதார்த்தங்களை எல்லாம் டிரெண்டிங் ஆக்கிக் கொண்டிருக்கிறார் இன்ஸ்டாகிராமின் ஃபுட்டி (foodie) சமூகத்தினர். நெருப்போடு விளையாடுவது எல்லாம் சாகசம் தான் என்றாலுமே, ஒரு ஃபுட்டியின் முழுமையான சாகச உணர்வை வெளிக்கொண்டுவர, பாம்புக்கறி சாப்பிட வைக்கலாம் தானே, கூடவே பாம்பு வைனும்.

இந்திய உணவு முறையில் பாம்பிற்கு பெரிய பங்கில்லை என்றாலுமே, சீனாவிலும், வியட்நாமிலும், அமெரிக்காவின் டெக்ஸாஸிலும் கூட மக்கள் பாம்புக்கறியை உண்ணும் வழக்கம் இருக்கிறது. சொல்லப் போனால், தென் கிழக்கு ஆசிய முழுவதுமேயே, நம் ஊரில் பானி பூரி கிடைப்பது போல, சாலைகளில் ஸ்டால்கள் அமைத்து ‘பாம்பு வைன்’ விற்றுக் கொண்டிருப்பார்களாம்.

பாம்பு வைன் என்பது, அடிப்படையில், எதாவது ஒரு மதுக்கலவையில் விஷம் இருக்கும் பாம்பை போட்டு, அதை அப்படியே சில மாதங்கள் ஊற விடுவது தான். மதுவில் அதிக காலம் ஊறிப் போகும் போது, பாம்பின் விஷம் உடைந்து போகிறதாம். 

பாம்பு வைன் சீனாவில் 770 BC - யில் இருந்தே புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொழுநோய், கண் பார்வை குறைபாடு, உடலில் ஆரோக்கியமின்மை என அத்தனையையும் பாம்பு வைன் வைத்து சரி செய்து விடலாம் என சீனாவில் நம்பப்படுகிறது. 

சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பாம்பு வைனை கொரியாவிலும், வியட்நாமிலும், சீனாவிலும் தான் வாங்க முடியுமாம். அதுவும், நம்பத்தகுந்த வணிகர்களிடம் வாங்க வேண்டும், வீட்டில் செய்யப்படும் பாம்பு வைனில் விஷத்தன்மை இருக்க வாய்ப்பிருக்கலாம் என வலியுறுத்தப்படுகிறது. 

பாரம்பரிய சீன மருத்துவ முறை, முடி கொட்டுவதை தவிர்க்கவும், முதுகு வலிக்கு மருந்தாகவும், ஆண்மையை அதிகரிக்கவும் பாம்புக்கறியும், பாம்பின் ரத்தமும், பாம்பின் விஷமும் உதவும் என நம்புகிறது. இதனால், இரண்டாயிரம் வருடம் பழைமையான பாம்பு சூப் உட்பட, பல பாம்புக்கறி உணவுகளை ஆசியா முழுவதுமே பார்க்க முடிகிறது.

சிக்கன், காளான், இஞ்சி, பாம்புக்கறி போன்ற பொருட்களை வைத்து செய்யப்படும் பாம்பு சூப் ஆசிய நாடுகளில் பரவலாகவே காணப்படுகிறது. மேற்கு ஆஃப்ரிக்காவிலும், நைஜீரியாவிலும் கூட உள்ளூர் உணவுமுறையில் பாம்பு பயன்படுகிறது. பாரம்பரிய தென் அமெரிக்க மருத்துவத்தில் காய வைத்து பொடிக்கப்பட்ட பாம்புக்கறி பயன்படுகிறது. 

ஆசிய நாடுகள் தான் பெருமளவு பாம்புகளை உட்கொள்கின்றன என்றாலும், சமீபத்தில், ஆசியாவில் இருந்து மேற்குலகு வரை சென்றிருக்கிறது இந்த பாம்புக்கறி உணவுமுறை. (பேர் க்ரில்ஸ் கையில் கிடைப்பதை பிடித்து சாப்பிடுவதற்கும் இதற்கும் தொடர்பில்லை).

2015 ஆம் ஆண்டு, ஒரு மது பாட்டிலில் பாம்பு அடைக்கப்படும் வீடியோ ஒன்று இதனால் வைரலானது. கூடவே, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காகவும் பாம்புக்கறியை பயன்படுத்திக் கொள்கிறார்கள் உள்ளூர் வணிகர்கள். டாய்பேயில் இருக்கும் பாம்பு பள்ளத்தாக்கில், பாம்பை சுற்றுலாப்பயணிகளின் கண் முன்னேயே கொன்று, அதன் ரத்தத்தை ரைஸ் வைனிலும், பிற மதுக்கலவைகளிலும் ஊற்றித் தரும் வணிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம். 

பாம்பு வைன் ( Image courtesy : Culture Trip) 
பாம்பு வைன் ( Image courtesy : Culture Trip) 

இப்போது பாம்புக்கறி, பாம்பு வைன் எல்லாம் இவ்வளவு ஈசியானவையா எனத் தோன்றும் போது தான் பாம்புக்கறியினாலும், பாம்பு வைனாலும் ஏற்பட்ட மரணங்களை எல்லாம் பார்க்க நேர்கிறது. 

2013 ஆம் ஆண்டு, சீனாவின் ஹெய்லோஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், மூன்று மாதங்கள் ஒரு பாம்பை ஊற வைத்த மதுப்பாட்டிலை திறந்த போது, பாம்பு கடித்து இறந்ததாக செய்திகள் வெளியாகின. தலை துண்டாக்கப்பட்டு இருபது நிமிடங்கள் ஆன பாம்பு ஒன்று கடித்ததால், சமையல்கலை நிபுணர் பெங்ஃபான் இறந்ததும் உலகறிந்ததே. இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், முறையாக வழிகாட்டுதலின் கீழ் பாம்புக்கறி எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானதாகவே கருதப்படுகிறது. 

எதாவது புதிதாக முயற்சிக்கும் போது தான், அதிலிருக்கும் ஆபத்துக்கள் எல்லாம் நமக்கு துருத்திக் கொண்டு தெரியும். உண்மையில், ஆபத்துக்கள் இல்லாத சாகசங்களே இல்லை - அதை எப்படி சமாளிப்பது என்பதை நாம் எப்படியோ கற்றுக் கொள்கிறோம். 

பாம்புக்கறியும், பாம்பு வைனும் அதே போல ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ வகை தான். ஆக, ஃபுட்டிக்கள் எல்லாரும் பாம்புக்கறி சேலஞ்சிற்கு தயாரா?!