இளம் வயதில் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கி, ஆப்’கள் உருவாக்கிக் கலக்கும் சென்னை குமரன் சகோதரர்கள்!

2

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தெரியும் ஆப்’களின் முக்கியத்துவம். பொதுவாக எல்லாரிடமும் உள்ள போனில், விளையாட்டு, சமூக ஊடக ஆப்கள் இல்லாமல் இருப்பதில்லை. கேம்ஸ் ஆப்களை பொறுத்தவரை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விரும்பும் ஒன்றாக எப்போதும் இருக்கிறது. விளையாட மட்டுமே எண்ணும் இவர்கள் ஒரு போதும் அந்த கேம்ஸ் வடிவமைப்பின் பின்னுள்ள தயாரிப்பு பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் சிறுவயதிலேயே கேம்ஸ் ஆப்களின் பேக்-எண்ட் பற்றி யோசித்த குமரன் சகோதரர்கள் இதுவரை 11 ஆப்களை உருவாக்கியுள்ளனர். 

சென்னையைச் சேர்ந்த 15 வயது ஷ்ரவன் குமரன் மற்றும் அவரின் தம்பி 13 வயது சஞ்சய் குமரன் இருவரும் ஆப் உருவாக்கலில் சாதனைப் படைத்து வருகின்றனர். இவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் இளம் மொபைல் ஆப் ப்ரோக்ராமர்கள் என்ற பட்டத்தையும் இதன்மூலம் பெற்றுள்ளனர். சகோதரர்கள் தங்களின் சொந்த நிறுவனமான ‘GoDimensions’  மூலம் ஆப் உருவாக்கம் செய்கின்றனர். 2012-ல் தொடங்கி, ஷ்ரவன் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் சஞ்சய் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ ஆக உள்ளனர். 

குமரன் சகோதரர்கள் முதலில் நான்கு ஆப்களை உருவாக்கினர். Colour Palette, Prayer Planet, Alphabet board, Catch Me Cop ஆகிய செயலிகளை ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் ஆண்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த ஆப் ‘‘Emergency Boat’ தங்கள் சுய அனுபவம் காரணமாக உருவான ஐடியா என்கின்றனர் சகோதரர்கள். 

ஒரு முறை சஞ்சய் ஸ்கேட் போர்டில் இருந்து தவறி விழுந்தபோது தன் அப்பாவை தொடர்பு கொள்ளமுடியாமல் 30 நிமிடங்கள் தவித்த தவிப்பின் காரணமாக உண்டான செயலி ஆகும். இந்த ஆப் மூலம் அவசரக் காலத்தில் ஒரு ஆப் மூலம் தங்களுக்கு நெருங்கிய 9 முக்கிய உறவுகள் மற்றும் அவசரகால கால் செண்டர் காண்டாக்ட் எண்ணை சேமித்து தொடர்பு கொள்ள முடியும். அவசர எண்களான தீயணைப்பு, காவல்துறை என்று அனைத்தும் இதில் அடங்கும். இவர்கள் தயாரித்துள்ள இந்த ஆப் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளில் பிரபலமாகி இதுவரை 24000 பதிவிறக்கங்களை பெற்றுள்ளது. ஆப் குறித்த விளம்பரத்தை குமரன் சகோதரர்கள் வாய்வழி மட்டுமே செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோடிங் கற்றுள்ள இச்சிறுவர்கள் அனிமேஷன், புத்தகம் படித்தல், வரைதல், கார்டூன் வரைதல் என்று பல திறமைகள் கொண்டவர்கள். பள்ளிப்படிப்போடு கணினி மீது கொண்ட ஆர்வத்தால் இவர்கள் அதில் பல புதிய விஷயங்களை கற்றும் முயற்சித்தும் உள்ளனர். ஷ்ரவன் மற்றும் சஞ்சய் ஒரு அட்டவணையை பின்பற்றுகிறார்கள். அதன்படி மாலை 6 முதல் 7.30 வரை மட்டுமே ப்ரோக்ராமிங் செய்கின்றனர். நடு இரவு வரை படிப்பு மற்றும் இதர வேலைகளை செய்துவிட்டு காலை 8.20-க்கு பள்ளிக்கு சரியான நேரத்துக்கு சென்றுவிடுவார்கள். அதேபோல் மதியம் 3 மணிக்கு வீடு திரும்பி தங்கள் வேலைகளை கவனிப்பார்கள். ஷ்ரவனுக்கு ஆப்பிளும் சஞ்சய்க்கு ஆண்ட்ராய்டிலும் ஆர்வம் உள்ளது. 

இவர்களுக்கு முக்கிய ஊக்கமாக இருப்பவர் அவர்களின் அப்பா குமரன் சுரேந்திரன். இவர் சிடிஎஸ்-ன் துணை தலைவராக இருக்கிறார். மகன்களின் முயற்சிகள் அத்தனைக்கும் துணையாய் நிற்பவர். ஷ்ரவன் மற்றும் சஞ்சய் ‘GoSheet’ என்ற டேப்லட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இது உலகிலேயே மெல்லிய, எடைக்குறைவான டேபாக இருக்கும் வகையில் வடிவமைக்க உள்ளனர். இதைப்பற்றி பகிர்கையில் உற்சாகம் அடையும் சிறுவர்கள், 

“அந்த டேப் ஒரு 7 வயது சிறுவன் கூட பயன்படுத்தும் வகையில் மெல்லியதாக அவனுக்கு ஏற்றவாரு வடிவமைக்கப்பட்டு அதில் அட்வென்ச்சர் கேம்ஸ்களை விளையாடும் விதம் இருக்கும். அதேபோல் 25 வயதுடையோர் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் விதத்தில் அவர்களுக்குத் தேவையான அம்சங்களோடு இருக்கும்,” என்கின்றனர். 

ஒரே டேபை பல பயனர் பயன்படுத்தும் விதம், வித்தியாசமான லாக் இன் உடன் தயாரிக்கப்படும் என்கின்றனர் சகோதரர்கள். ஷ்ரவன் மற்றும் சஞ்சய் சென்னையில் தொடங்கியுள்ள நிறுவனத்தின் விற்றுமுதல் 120 கோடியாக உள்ளது. இவர்களைப் பற்றி நாடு முழுவதிலும் பல தொழில்நுட்ப நிகழ்வுகளில் பேசப்படுகிறது. பல அங்கீகாரங்களும், விருதுகளும் சகோதரர்களை தேடிவந்த வண்ணம் உள்ளது. 

TEDx, IIMB flagship event Eximus மற்றும் CII மற்றும் பல அமைப்புகள் குமரன் சகோதரர்களை கெளரவித்துள்ளனர். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களாலும் பாராட்டப்பட்டவர்கள். தங்கள் நிறுவனத்தின் வெற்றி மற்றும் லாபத்தை தாண்டி இவர்களுக்குள் நல்லெண்ணமும் உள்ளது. தங்கள் நிறுவன பங்குகளில் 15 சதவீத லாபத்தை ஏழை மற்றும் தேவைப்படுவோருக்கு அளித்து வருகின்றனர். 

இத்தனை வெற்றிகளுக்கும் எது காரணம் என்று கேட்டபோது,

“நீங்கள் ப்ரோக்ராமர்கள் ஆகவேண்டும் என்று நினைத்தால், Qbasic கற்று அதில் வல்லுனர் ஆகுங்கள்,” என்கிறார் ஷ்ரவன். 

மேலும் கணக்கு பாடத்தை நன்றாக படித்தால் ப்ரோக்ராமிங்கில் மிளிரலாம் என்கிறார். 

“நீங்கள் தொழில்முனைவர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டால் இளம் வயதில் தொடங்குங்கள். கணினியில் ஏதாவது சாதிக்க விரும்பின்னால், அல்காரிதம் பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியம். அதை கற்பது சுலபம் தான் ஆனால் பொறுமை அதிகம் வேண்டும்” என்று அறிவுரைக்கிறார் சஞ்சய். 

தந்தையின் உறுதுணை, முதலீடு செய்ய அவரின் உதவி என்று இவை அனைத்தும் இந்த சிறுவர்களுக்கு கிடைத்தாலும் அவர்களின் கனவு மற்றும் தொழில்நுட்பத்தின் மீதிருந்த அதீத ஆர்வமே இத்தகைய வளர்ச்சியை தந்துள்ளது. வருங்காலத்தில் தங்கள் நிறுவன ஆப்கள் உலகில் 50 சதவீத ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டும் என்பதையே கனவாகக் கொண்டு உழைத்து வருகின்றனர் குமரன் சகோதரர்கள். 

அவர்களின் எண்ணமும், கனவும் நிறைவேற நம் வாழ்த்துக்கள்!


Related Stories

Stories by YS TEAM TAMIL