மலை போல் குவியும் டேட்டாவைச் சுறுக்கி மடுவாக்கும் சென்னை இளைஞர்கள் குழு! 

0

295 பில்லியன் கிகாபைட்ஸ் அல்லது 295 எக்ஸாபைட்ஸ். 1986-லிருந்து இன்றுவரை நாம் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாவின் அளவு இது. மலைக்க வைக்கும் அளவு இதுவென்றாலும் இந்த டேட்டாவை கம்ப்ரஸ் செய்யும் தொழில்நுட்பங்களும் நம்மிடம் நிறையவே உள்ளன. இதனால் பைல்களை டிரான்ஸ்பர் செய்யும் வேகம் அதிகரிக்கிறது. ஹார்ட்வேர்களுக்கான செலவுகளும் குறைகிறது.

இதைத்தான் செய்கிறது 'Skcript' நிறுவனத்தின் SHRINK. ஒவ்வொரு பைலையும் ஆராய்ந்து, கம்ப்ரஸ் செய்யும் கம்ப்ரஸன் சர்வர் இது. 'சிறந்த, தகவல் இழப்பில்லாத முறையில் கம்ப்ரஸ் செய்ய எங்கள் கணினிகளுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்' என்கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக்.

SHRINK என்பது லினக்ஸ் மாதிரியான ஒரு மென்பொருளில் இயங்கும் ஒரு சர்வர். தொடக்கத்தில் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் மென்பொருள் மட்டும் தயாரிப்பதாய்தான் முடிவு செய்திருக்கிறார்கள்.

 'ஆனால் எங்கள் முடிவை மாற்றிக்கொண்டோம். எங்களுக்கான சொந்த சர்வரை வடிவமைக்கும் அளவிற்கு வளர்ந்தோம். கிட்டத்தட்ட ஐபோனும் ஐஓஎஸ்ஸும் இணைந்து செயல்படுவதைப் போல இப்போது எங்கள் தயாரிப்பும் செயல்படுகிறது' என்கிறார் கார்த்திக்.

முதல் ப்ரொட்டோடைப்பை உருவாக்க இவர்களுக்கு 60 நாட்கள்தான் ஆனதாம். ஆனால் அடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சிரமமாகத்தான் இருந்திருக்கிறது.

SHRINK உருவான விதம்

தங்களுக்குத் தேவையான ப்ரோட்டோடைப்களை ஆராய்ந்து பார்ப்பதுதான் இவர்களின் முதல் வேலையாக இருந்திருக்கிறது. இந்த பெரிய செயல்முறைக்கு மெஷின் லேர்னிங் முறை உபயோகமாய் இருந்திருக்கிறது. 'நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சிஸ்டமை பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மெஷின் அதிலிருந்து கற்றுக்கொள்ளும்' என்கிறார் கார்த்திக்.

SHRINK எலிமென்ட்டரி டேட்டாக்களை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் உறுதியான கட்டமைப்பை கொண்டிருக்கிறது. 'கிட்டத்தட்ட மூளை உள்ள ஒரு அமைப்புதான் SHRINK'என்கிறார் கார்த்திக். 

டேட்டா SHRINK-ஐ அடைந்ததும் மெஷின் லேர்னிங் அல்காரிதம் அதை ஆராய்ந்து 1000 டேட்டா பாயிண்ட்களோடு ஒப்பிடுகிறது. ஆராய்ந்த பின் ஒவ்வொரு பைலயும் கம்ப்ரஸ் செய்யத் தொடங்குகிறது.

16 வெவ்வேறான அல்காரிதம்கள், 6000 பைல் வகைகளைக் கொண்டிருக்கிறது SHRINK. அதனால் எந்த பைலையும் கம்ப்ரஸ் செய்துவிடலாம். கம்ப்ரஸ் செய்து முடித்ததும் ஒரு ரிப்போர்ட் அனுப்பப்படுகிறது. பின் அந்த பைல் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்டோரேஜில் போய் சேர்கிறது.

திரும்பப் பெறும்போது பைல் ஸ்டோரேஜிலிருந்து எடுக்கப்பட்டு பழைய அளவிற்கு டிகம்ப்ரஸ் செய்யப்படுகிறது. இதுவரை 1.5 பெடாபைட் டேட்டா அளவிற்கு இந்த சிஸ்டம் பிராசஸ் செய்துள்ளது. 24x7 இந்த சிஸ்டம் கண்காணிக்கப்படுகிறது.

'இந்த தொழில்நுட்பத்தின் சாதனையே பிராசஸ் செய்யப்படும் வேகம்தான். இந்த வேகம் இதற்கு முன் நாங்கள் கண்டிராதது. இதை இன்னும் அதிகப்படுத்தும் முயற்சியில் உள்ளோம்' என்கிறார் கார்த்திக்.

கார்த்திக்கும், ஸ்வாதி ககார்லாவும் இணைந்து தொடங்கிய இந்த நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் சென்னை கூகுள் டெவலப்பர்ஸ் குழு என்ற கம்யூனிட்டி வழி பழக்கமானவர்கள்தான். ஒத்த ரசனை காரணமாக ஒன்றிணைந்த கூட்டம் இது.

இவர்களின் தயாரிப்பை நிறுவனங்கள் பணம் கொடுத்து வாங்குகின்றன. சிறப்பான யூஸர் இன்டர்பேஸ் மூலம் பைல்கள் அக்ஸஸ் செய்யப்படுகின்றன. பல ஆண்டுகள் அக்ஸஸ் செய்யமுடியாமல் முடங்கிக் கிடந்த பைல்களை எல்லாம் இந்த சிஸ்டம் உதவியோடு செய்யலாம் என்பதுதான் இதன் பலம்.

யூஸருக்கும் ஸ்டோரேஜுக்கும் பாலமாக செயல்படுகிறது இந்த சிஸ்டம். யூஸர் டேட்டாவை அப்லோட் செய்ய, அது SHRINK வழி பிராசஸ் செய்யப்பட்டு ஸ்டோரெஜிற்கு செல்கிறது.

எப்படி தோன்றியது இந்த ஐடியா? 

இந்த ஐடியா நீண்ட நாட்களாக அவர்களுக்குள் இருந்தாலும் அதை சீரியஸாக முயற்சி செய்து பார்க்க அவர்களுக்கு தோன்றவில்லை. அப்போது அளவிற்கு மீறிய டேட்டாவால் துன்பப்படும் ஒரு நிறுவனம் பற்றி இவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

'எங்களுக்கு அது நல்ல ஒரு வாய்ப்பாக தெரிந்தது. இதுவரை இந்தப் பிரச்னைக்கு யாரும் தீர்வு கண்டதில்லை. எனவே நாம் முயற்சித்துப் பார்க்கலாம் என தொடங்கினோம். இப்போது இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறோம்' என்கிறார் கார்த்திக்.

ஆனால் சுயமாய் தொடங்கப்பட்ட நிறுவனம் என்பதால் நிறையவே சிரமப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மேற்கொண்டு தொடர முடியாமல் முடங்கி இருக்கிறார்கள். விடாமுயற்சிதான் அவர்களை மீட்டுக் கொண்டுவந்தது.

எதிர்கால திட்டங்கள்

ஏற்கெனவே கல்லூரி நாட்களில் ஒரு நிறுவனம் தொடங்கி சூடுபட்ட அனுபவம் இருக்கிறது கார்த்திக்கிற்கு. அதனால் இந்த நிறுவனத்தை கண்ணும் கருத்துமாய் நடத்துகிறார். சிறந்த தயாரிப்புகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிள், விப்ரோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றி பயிற்சி எடுத்திருக்கிறார்.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் பத்து நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்கள். ஆறு இலக்க டாலர் வருவாய் இவர்களுடையது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வருவாய் இரட்டிப்பாகும் என்கிறார் கார்த்திக்.

தொடக்கத்தில் துபாயின் GNE நிறுவன அதிகாரி இவர்களால் இதை சாதிக்கமுடியுமா என்ற சந்தேகம் எழுப்பினாராம். ஆனால் துணிந்து களமிறங்கி இன்று 350 வாடிக்கையாளர்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக 40 சதவீதம் வரை விலைக் குறைப்பும் செய்திருக்கிறார்கள். 

சந்த நிலவரமும் போட்டியும்

டேட்டா கம்ப்ரஸன் இந்த காலகட்டத்தில் அத்தியாவசியம். ஸ்டோரேஜ் கட்டணங்களை குறைக்கிறது. DiskDoubler, SuperStor Pro போன்ற பல கம்ப்ரசன் டூல்கள் இருக்கின்றன. சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்ற ஜாம்பவான்களும் இந்த களத்தில் இருக்கிறார்கள். இன்னும் இந்த ஏரியாவில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள் நிறையவே இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களைப் போன்ற நிறுவனங்கள் அந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆக்கம் : சிந்து காஷ்யப் | தமிழில் : சமரன் சேரமான்  

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

‘தொழில்நுட்பத்தில் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் என்பதை நான் நம்பவில்லை’- பிரதிக்‌ஷா நாயர்

படிப்பை பாதியில் விட்ட விவசாயி மகன், ஒரு டெக் மில்லினியரான வெற்றி கதை!