செயற்கை கல்லீரல் திசுக்களை உருவாக்கிய பெங்களுரு விஞ்ஞானிகள்

0

பெங்களுருவைச் சேர்ந்த மூன்று மூத்த விஞ்ஞானிகளான அருண் சந்துரு, டாக்டர் அப்துல்லா சந்த் மற்றும் டாக்டர் டி.சிவராஜன் ஆகியோர் மனித கல்லீரலில் செயலாற்றக்கூடிய செயற்கைத் திசுக்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த முப்பரிமாண (3D) அச்சாக்கப்பட்ட வாழும் திசுக்கள் மனித செல்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆய்வுப் பரிசோதனைகளுக்காக விலங்குகளையும் மனிதர்களையும் பயன்படுத்துவது குறைவதோடு, மருத்துவ ஆய்வு மீதான செலவுகளும் சமாளிக்கக் கூடிய அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு உறுப்புகளை முழு அளவில் மாற்றக்கூடிய மருத்துவ வளர்ச்சியும் இந்தக் கண்டுபிடிப்பினால் நம்பிக்கை பெற்றுள்ளது.

இம்மூன்று விஞ்ஞானிகளும் பெங்களுருவில் உள்ள பயோ-டெக் நிறுவனமான பாண்டோரம் டெக்னாலஜிஸை சேர்ந்தவர்கள். பாண்டோரம் இணை நிறுவரான அருண் சந்துரு தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில்,

"இந்த செயற்கைத் திசுக்கள் பிற கல்லீரல் திசுக்கள் செயலாற்றுவது போலவே செயல்படும் தன்மை கொண்டது. மேலும் இதன் மீது பதில்வினையாற்றும் மருந்துகள் மற்றும் நச்சுகள் தற்போதைய ஆய்வுலக இருபரிமாண செல் வளர்ப்பு மற்றும் விலங்கு மாதிரிகளை விட நடைமுறை சாத்தியங்களை அதிகம் கொண்டது. பொதுவாக விலங்குகளை வைத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் துல்லியமான முடிவுகளை எப்போதும் வழங்கிவிடுவதில்லை.

நாங்கள் உருவாக்கி மேம்படுத்தியுள்ள இந்தத் திசு 10 மில்லியன் செல்களைக் கொண்டது. மேலும் நோய் மாதிரி உருவாக்கம் மற்றும் கதிர்வீச்சு விளைவுகள் குறித்த ஆய்வில் இவை பிரதானமாக பயன்படுத்தக் கூடியது" என்றார்.

தேவைக்கேற்ப தனிப்பயனுக்கான மனித உடல் உறுப்புகளான நுரையீரல்கள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கணையம் ஆகியவற்றை உருவாக்குவதே பாண்டோரத்தின் குறிக்கோளாகும். இந்த பாதைத் திறப்பு ஆய்வு அவர்கள் சரியான திசையை நோக்கி பயணிப்பதையே நிரூபிக்கிறது.

"நாங்கள் இந்தியாவிலேயே அனைத்தையும் உருவாக்கியுள்ளோம். இதுபோன்று ஆயிரக்கணக்கான திசுக்களை நாங்கள் பரிசோதனைக் கூடத்திலேயே மேம்படுத்த முடியும். அத்துடன், புற்றுநோய்க்கு எதிரான மருந்து உட்பட இந்தத் திசுக்கள் மீது செயலாற்றும் மருந்துகளின் திறனையும் நாங்கள் பரிசோதிக்க முடியும்" என்று தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் அருண் கூறியுள்ளார்.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்