தீபிகா-ரன்வீர் திருமணத்தில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ’மைசூர்பா’

0

கோவையை தலைமையகமாகக் கொண்ட 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' மைசூர்பாவிற்கு அறிமுகமமே தேவையில்லை. தனித்துவமான சுவையால் உலகெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்கும் இனிப்புப் பலகாரமாக இது பல வருடங்களாக திகழ்கிறது. 

இந்நிலையில் அதன் தனித்தன்மைக்கு மகுடம் சூட்டும் விதமாக தற்போது பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடி தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தங்களின் திருமணம் முடிந்த உடன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பா பேக்கை விருந்தாளிகளுக்கு அனுப்பி வைத்து தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.  இது பற்றி தீப்-வீர் நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இதை கொண்டாடி வருகின்றனர்.

சினிமா உலகமே காத்துக்கொண்டிருந்த பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் மிகப் பிரமாண்டமான முறையில் இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது.

முதல்நாள் கொங்கினி கலாச்சார முறைப்படியும் அடுத்த நாள் சிந்தி கலாச்சாரப்படியும் நடைப்பெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா படுகோன் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். சில நாட்களுக்கு முன் தங்களது திருமண செய்தியை ரன்வீர் சிங்கும், தீபிகாவும் டிவிட்டரில் ஒரு சேர அறிவித்தபின் இந்தியாவே பேசும் ராயல் வெட்டிங்காக அவர்களது திருமண ஏற்பாடு செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டன.

இந்நிலையில், சக திரையுலக நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு புதுமண தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டது.

மிக அழகிய வடிவமைப்பிலான கடிதத்துடன் இன்ப ஆச்சர்யமாக மைசூர்பா பெட்டகமும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியை பல பிரபலங்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா தங்களது நாவில் புரிந்த சுவை நடனத்தையும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

அவ்வாறு பதிவிடப்பட்ட ட்வீட்களுள், 

“ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவிற்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும் தீபிகா ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி” என்றும் “அவர்களது திருமணப் புகைப்படங்களை விட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போதே வேண்டும்" என்றும் "மைசூர்பாவில் காணாமல் போன *க்* பற்றிய எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்து விட்டது" என்று  ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்கள்.

பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் கூட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா உடனான தங்களது பிரியத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அன்பைச் சொல்ல அழகான வழி என்னும் பதாகைகளைக் கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சுவை இந்தியாவின் பிரியமான காதல் ஜோடிகளால் தங்கள் அன்பைச் சொல்லியே பரிமாறப்பட்டது என இணையதளவாசிகள் பதிவிட்டும், பகிர்ந்தும் தமிழகத்தின் பெருமிதத்தை கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணன் பேசும்போது,

ஒரு முக்கியமான பிரபலத்திற்காக மைசூர்பா மொத்தமாக தேவை என எங்களது பெங்களூரூ கிளையினைத் தொடர்பு கொண்டு வாங்கினார்கள். அப்போது அந்த ஆர்டர் தீபிகா-ரன்வீர் தம்பதிகளின் திருமண கொண்டாட்டத்திற்குத்தான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. திரைநட்சத்திரங்களும், முக்கியஸ்தர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும் கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான் தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத்தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். எங்கள் மைசூர்பாவுடனான இனிய தருணங்களைப் பகிர்ந்து கொண்ட எங்கள் பிரியமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் அன்பும்,’ என தெரிவித்தார். 

ஸ்வீட் எடு கொண்டாடு என்று சொல்வதற்கேற்ப தீப்-வீர் வெட்டிங்கில் நம்ம ஊர் மைசூர்பா பங்குபெற்றதில் நமக்கும் மகிழ்ச்சியே...

Related Stories

Stories by YS TEAM TAMIL