பூச்சிக்கொல்லி மருந்தில்லா உணவை நகரவாசிகள் தாங்களே வளர்த்து, அறுவடை செய்ய உதவும் ’My Harvest'

மூன்று பேர் தங்கள் பணியைத் துறந்து ’மைஹார்வெஸ்ட்’ என்கிற நிறுவனத்தின் மூலம், மக்கள் தாங்கள் உண்ணும் காய்கறிகளை தாமே உற்பத்தி செய்துகொள்வதை ஊக்குவிக்கின்றனர்... 

8

விவசாயம் அல்லது தோட்டம் போன்றவற்றின் எந்தவித பின்னணியில்லாமல் ’மை ஹார்வெஸ்ட்’ (My Harvest) குழு சுயமாக அத்துறைப் பற்றி கற்று, நிலத்தில் பணிபுரியும் மக்களை சந்தித்து, தாங்களே விவசாயப் பணிகளை பழகிக்கொண்டு அனுபவங்களைத் திரட்டிக் கொண்டுள்ளனர்.

அர்ச்சனா ஸ்டாலின்
அர்ச்சனா ஸ்டாலின்

'மை ஹார்வெஸ்ட்' எவ்வாறு செயல்படுகிறது?

”இந்தியாவில் இரண்டு பெண்களில் ஒருவருக்கு ரத்த சோகை பிரச்சனை உள்ளது. அதிகளவிலான பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் சேர்ந்த உணவை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும். இந்த துறையில் பணிபுரிய இதுவே எனக்கு தூண்டுதலாக அமைந்தது.” என்கிறார் அர்ச்சனா ஸ்டாலின்.

மை ஹார்வெஸ்டின் வருவாய் மாதிரி மிகவும் எளிதானதாகும். வாடிக்கையாளர் அவரது தேவைக்கேற்ப குறைந்தபட்சம் ஐந்து காய்கறிகள் அல்லது செடிகள் அடங்கிய பேக்கேஜை 3,000 ரூபாய்க்கு வழங்குவார்கள். இதில் மண், விதைகள், உரங்கள் மற்றும் இதர தேவையானப் பொருட்கள் இருக்கும்.

ஒரு வாடிக்கையாளர் இவர்களை தொடர்பு கொண்டதும் இவர்களது குழு வாடிக்கையாளரின் தேவையைத் தெரிந்துகொள்ள நேரடியாக அவர்களது வீட்டிற்குச் செல்வார்கள். அவர்களிடம் ஒரு பட்டியல் கொடுக்கப்படும். அதிலிருந்து அவர்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சாதனங்களை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதையும் எப்படி காய்கறிகளை வளர்க்கவேண்டும் என்பதையும் குழுவினர்கள் வாடிக்கையாளரிடம் விவரிப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜ் பொருத்து ஒன்றிரண்டு முறை கூடுதலாகவும் மை ஹார்வெஸ்ட் சார்பில் வாடிக்கையாளர் வீட்டிற்குச் செல்வார்கள். 

“முதல் அறுவடை வரை வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.” என்றார் அவர்.

மேலும் வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் சந்தேகம் அல்லது கவலை இருந்தால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக உதவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளார்கள் செடிகள் குறித்தும் அதன் வளர்ச்சியைக் காட்டும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் செயல்முறை முழுவதும் வாடிக்கயளர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களை ஊக்குவிக்க உதவும்.

சென்னை முழுவதுமுள்ள ஆர்கானிக் கடை விற்பனையாளர்களிடமிருந்தும், பாரம்பரிய விதை விற்பனையாளர்களிடமிருந்தும் விதைகள் பெறப்பட்டு மண் மற்றும் உரங்களை பஞ்சகவ்யம் போலவே இக்குழுவினர் தயார் செய்கின்றனர்.

துவக்கம்

28 வயதான அர்ச்சனா, 30 வயதான அவரது கணவர் ஸ்டாலின் காளிதாஸ், 32 வயதான அவரது சகோதரர் சோமு காளிதாஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கியதுதான் சென்னையைச் சேர்ந்த ’மை ஹார்வெஸ்ட்’ (MyHarvest). சோதனை முயற்சியை மதுரையில் துவங்கினார் சோமு. இயன்றபோதெல்லாம் அர்ச்சனா அவருடன் இணைந்துகொண்டார். 40 வீடுகளை எட்டியதும் அர்ச்சனா தனது கார்ப்பரேட் பணியிலிருந்து விலகி முழுநேரமாக மை ஹார்வெஸ்டில் பணிபுரியத் துவங்கினார். 

”சமூக நிறுவனத்தை துவங்கவேண்டும் என்பதே எப்போதும் என்னுடைய விருப்பமாக இருந்தது.” இதுவரை அவர்களது சேவையை 90 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் 6 பள்ளிகளுக்கும் வழங்கியுள்ளனர்.

”எங்களது வீட்டை கட்டிக்கொண்டிருந்த சமயம் மழைநீர் சேகரிப்பு மூலமாக நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தவும் சமையலறைத் தோட்டம் அமைக்கவும் திட்டமிட்டோம்.” என்றார் அர்ச்சனா. “எங்கள் குடும்பத்தின் உணவுப்பழக்கமும் மாறியது. சமையலில் அதிக பச்சை காய்கறிகளையும் கீரை வகைகளையும் சேர்க்கத் துவங்கினோம்.” உணவுப் பழக்கத்தில் ஏற்படுத்திய மாற்றம் அவரது மாமனாரின் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தியதை கவனித்தார்.

உள்ளூர் செய்தித்தாள்களில் அர்ச்சனாவின் சமையறை தோட்டம் குறித்த செய்திகள் வெளியானது. ”மக்கள் இது குறித்து அதிகம் தெரிந்துகொள்ள என்னை அழைக்கத் துவங்கினார்கள்.” என்றார்.

சில சமயம் பழங்களும் காய்கறிகளும் காப்பர் சல்ஃபேட்டினால் கலர் செய்யப்படுகிறது. ஃப்ரெஷ்ஷாக தெரியவேண்டும் என்பதற்காக ஹார்மோன்களை உட்செலுத்துகின்றனர். உணவுப்பொருட்களில் ரசாயனங்கள் இருப்பது மக்களுக்கு தெரிந்தாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆர்கானிக் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கினாலும் ’ஆர்கானிக்’ என்கிற சொல்லை நம்பியே வாங்கவேண்டிய சூழல் நிலவுகிறது.

இவ்வாறு சார்ந்து இருப்பதை குறைக்கவும் காய்கறிகளிலுள்ள பூச்சிக்கொல்லிகளை அழிக்கும் தேவையில்லாத கூடுதல் வேலையை நீக்கவும் அர்ச்சனா மற்றும் அவரது குழுவினர் மை ஹார்வெஸ்ட் மூலமாக ஒரு எளிதான தீர்வை முன்வைத்துள்ளனர்.

தோட்டம் சார்ந்த கற்றல்

பள்ளிகளில் தோட்டம் சார்ந்த கற்றல் முயற்சியில் கவனம் செலுத்த விரும்பியது மை ஹார்வெஸ்ட். தற்போது மூன்று பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவை மூன்று விதங்களில் அணுகப்படுகிறது. முதலில் ஒரு நாள் பயிலரங்கு நடத்தப்படும். இதில் மண், விதை, ஒரு சிறிய தொட்டி ஆகியவை மாணவர்களிடம் அளிக்கப்பட்டு வீட்டில் எப்படி செடிகளை வளர்ப்பது என்று வழிகாட்டப்படும். குழந்தைகள் செடி வளர்ப்பில் முனைப்புடன் ஈடுபடவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இரண்டு முதல் மூன்று மாதம் வரை நடைபெறும் நிகழ்ச்சியே இரண்டாவது அணுகுமுறையாகும். இதில் மை ஹார்வெஸ்ட் சில பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து பள்ளியில் தோட்டப்பணிகளில் ஈடுபடுவார்கள். குழந்தைகள் அடிக்கடி உணவுப்பொருட்களை வீணாக்குவார்கள். ஏன் அவ்வாறு வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். 

”உணவை தயாரிப்பதில் எடுக்கப்படும் முயற்சிகளை குழந்தைகள் கண்ணெதிரே பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால் வீணாக்குவது குறித்து சிந்திப்பார்கள்.” என்கிறார் அர்ச்சனா.

மூன்றாவது அணுகுமுறையில் குழந்தைகளை சென்னை புறநகர் பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். உணவுப் பொருட்கள் அவர்களது தட்டிற்கு வருவதற்கு எந்த மாதிரியான தொடர் செயல்களைக் கடந்து வருகிறது என்பதை காட்சிப்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

எதிர்கால திட்டங்கள்

”நாங்கள் எங்களை தோட்டக்காரர்களாக சந்தைப்படுத்திக்கொள்வதில்லை. மக்கள் தாங்களாகவே உற்பத்தி செய்துகொள்ள வழிகாட்டுகிறோம். இறுதியில் அவர்களது முயற்சியே விவசாய அனுபவத்தை அளித்து அவர்களுக்கு பலனளிக்கிறது.” என்றார்.

பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர்கள் அடங்கிய சென்னை போன்ற மெட்ரோக்களில் சமையலறைத் தோட்டத்திற்கான இடம் இருக்காது. இந்த மிகப்பெரிய குறையை போக்குவதற்காக வெர்டிகல் ஃபார்மிங் முறையை ஆராய உள்ளார் அர்ச்சனா. மேலும் அவ்வாறு சமையலறைத் தோட்டம் சாத்தியமில்லாதவர்களுக்காக விளைச்சல் நேரடியான வாடிக்கையாளர்களைச் சேர நம்பகமான விவசாயிகள் மற்றும் விநியோகம் செய்பவர்களுடன் இணையவும் திட்டமிட்டு வருகிறார்.

சமீபத்தில் ‘மை ஹார்வெஸ்ட் பாக்ஸஸ்’ என்பதை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த தனித்துவமான பரிசுப்பெட்டியை பெறுபவர்களுக்கு ஆர்கானிக் கீரை, காய்கறி போன்றவற்றை வளர்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். 25 நாட்களில் அறுவடை செய்யும் விதத்தில் இந்த பாக்ஸ் அமைந்திருக்கும். மற்ற நகரங்களிலும் விரிவடைய விரும்புகின்றனர். இதுவரை சுய முதலீட்டில் செயல்பட்டு வரும் இவர்கள் வருங்காலத்தில் நிதியை உயர்த்த உள்ளதாக தெரிவித்தனர்.

ஆங்கில் கட்டுரையாளர் : மெஹர் கில்

Related Stories

Stories by YS TEAM TAMIL