எல்லைப் பாதுகாப்பில் கண்காணிப்பில் ஈடுபடும் ரோபோ வடிவமைத்துள்ள சிறுவன்!

1

ஒடிசாவை சேர்ந்த 17வயது சிறுவன் நம் நாட்டு எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு பதிலாக இயங்கக்கூடிய ரோபோ’வை வடிவமைத்துள்ளார். ரோபோ வீரர்களை எல்லைப் பகுதியில் நிற்கவைத்துவிட்டால் பல வீரர்களின் உயிர்களை காக்கமுடியும் என்பதே சிறுவன் நீல்மாதவ் பெஹெராவின் எண்ணம். 

பலசோர் என்னும் ஊரைச் சேர்ந்த நீல்மாதவ், ஹுமனாய்ட் ரோபோ ஒன்றை மெய்நிகர் அறிவுசார்ந்த முறையின் படி வடிவமைத்துள்ளார். ‘ஆட்டம் 3.7’ என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ ராணுவத்தில் மட்டுமின்றி பொழுதுபோக்கு, கல்வித்துறை, உற்பத்தி மற்றும் உள்நாட்டு சேவைகளுக்கும் பயன்படுத்தமுடியும். இந்த ரோபோ உத்தரவுகளின் அடிப்படையில் செயல்படும். 

தலநகர் ஜூனியர் கல்லூரியில் 12-ம் வகுப்பு மாணவனான நீல்மாதவ், கடந்த ஜனவரி மாதம் இந்த ரோபோ வடிவமைப்பை தொடங்கினார். சுமார் ஓர் ஆண்டுக்கு பின் 4 லட்ச ரூபாய் செலவில் ரோபோவை கட்டமைத்துள்ளார். 4.7 அடி உயரத்துடன் 30 கிலோ எடையுடன் இந்த ரோபோ ஒரு மனிதனை போல் இருக்கிறது. 14 சென்சர்கள் பொறுத்தப்படு 5 கண்ட்ரோல்களுடன் ப்ரோகாமிங் அடிப்படையில் ரோபோ இயங்கும். 

நீல்மாதவிற்கு சிறுவயது முதல் அறிவியல் பாடங்களில் ஈடுபாடு அதிகம். அறிவியல் தொடர்பான பொம்மைகளை ஆர்வமாக விளையாடுவார். அவர் மூன்றாம் வகுப்பில் இருந்த போதே அறிவியல் ப்ராஜக்டுகளை செய்வார். ஆறாம் வகுப்பில் இருந்தபோது ரோபோ செய்யும் ப்ராஜக்டை முதன்முதலில் செய்தார். அப்போது அதில் வெற்றி கிட்டவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சித்து இன்று ஒரு ரோபோவை செய்துள்ளார். 

நீல்மாதவின் அப்பா ஆரம்பத்தில் இந்த ஐடியா மீது நம்பிக்கையில்லாமல் இருந்தார். ஆனாலும் தன் மகன் தீவிர முயற்சியாலும், இண்டர்நெட்டின் உதவியோடும் ரோபோவை கட்டமைத்ததை கண்டு வியந்தார். மகனின் இந்த விடாமுயற்சியைக் கண்டு நம்பிக்கை பெற்ற அவர் நீல்மாதவுக்கு உறுதுணையாக இருந்தார். தேவையான நிதி உதவியையும் அவர் செய்தார்.

அவரைப் பொருத்தவரை, இதற்கு அதிக பணச்செலவும், தொடர் முதலீடும் தேவை என கருதுகிறார். நீல்மாதவிற்கு ரோபோடிக்ஸ் துறையில் மேற்படிப்பு படிக்க ஆர்வம் உள்ளது. வருங்காலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ட்ரோன்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளார்.

கட்டுரை: Think Change India