ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ’MobiCash’ செயலியை பிஎஸ்என்எல், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து அறிமுகம்!

0

வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 'மோபிகேஷ்' 'MobiCash' என்ற புதிய செயலியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்திய ஸ்டேட் வங்கியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள், செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வதுடன், மற்றவர்களுடன் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்.

இந்த புதிய செயலியை பி.எஸ்.என்.எல். லின் சென்னை டெலிபோன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் கலாவதி மற்றும் ஸ்டேட் வங்கியின் மேலாளர் இந்து சேகர் ஆகியோர் சென்னையில் தொடங்கிவைத்தனர்.

இந்த செயலி மூலம் ஸ்மார்ட் போன் மட்டுமின்றி சாதாரண அடிப்படை செல்போன்கள் மூலமும் பணப்பரிவர்த்தனையை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என்பது தான் இந்த செயலியின் சிறப்பம்சம். இந்த செயலி மூலம் மொபைல்போன்களை ரீசார்ஜ் செய்ய கட்டணம் ஏதும் இல்லை. இது போல் குடிநீர் மற்றும் மின்சார பில்களை இந்த செயலி மூலம் எளிதாக செலுத்தலாம்.

இந்த செயலி முதல் கட்டமாக பி.எஸ்.என்.எல். செல்போன்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். அடுத்த கட்டமாக மற்ற வசதிகள் அறிமுகம் செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் ஸ்டேட் வங்கியில் தங்கள் அடையாள விவரங்களை வழங்கியபின் ரூ 1 லட்சம் வரை இந்த செயலி மூலம் மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யலாம். இதற்கான பரிவர்த்தனைக் கட்டணம் ரூ 3 முதல் ரூ 120 வரை. பரிவர்த்தனை செய்யப்படும் தொகைக்கு ஏற்ப இந்த கட்டணம் அமையும்.

மிகவும் பாதுகாப்பான வகையில் இந்த செயலி வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும், இந்த செயலியில் முதலில் பணம் செலுத்துவதற்கு தற்போது வாடிக்கையாளர்கள் சேவை மையம் அல்லது சில்லறை விநியோக முகவரை அணுக வேண்டும் என்றும் கலாவதி தெரிவித்தார். இந்த செயலியை பயன்படுத்த வங்கிக் கணக்கு அவசியமில்லை என்றும் இந்த செயலியை பயன்படுத்த மிகவும் எளிதான வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இந்த செயலியின் கணக்கில் பி.எஸ்.என்.எல்.லின் சில்லரை முகவர்கள் மூலம் செலுத்தலாம். அதுபோல் தங்கள் பணத்தை கணக்கில் இருந்து சில்லறை முகவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சில்லறை முகவர் ஏ.டி.எம். மையம் போல் செயல்படுவார்.

இந்த செயலிக்கு வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்திய ஸ்டேட் வங்கியின் மேலாளர் இந்து சேகர் குறிப்பிட்டார். ஸ்டேட் வங்கியின் மற்றொரு செயலியான ‘படி’ (Buddy). 60 லட்சம் பயனர்களால் பயன்படுத்தப் படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.