உலக சுற்றுச்சூழல் தினம்: மாற்றத்திற்காக போராடும் ‘தனி ஒருவன்'கள்

0

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1972ம் ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலகச் சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. அதன் முடிவில் ஜுன் 5ஆம் தேதியை ’உலக சுற்றுச் சூழல்’ (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

அதன்படி இன்று உலக சுற்றுச்சூழல் தினம். மனிதன் நாளுக்கு நாள் சுற்றுச்சூழலை மாசு படுத்தி தன் அழிவுக்கு தானே அடித்தளம் இட்டு வருகிறான். நமது வருங்கால சந்ததிக்கு இயற்கையான உலகை விட்டுச் செல்ல வேண்டுமென்றால், சுற்றுச்சூழலை பாதுகாத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது.

அப்படியாக, நாம் வசதியாக வாழ்ந்தால் போதும், அடுத்த தலைமுறையைப் பற்றி நமக்கென கவலை என வாழாமல், தங்களால் இயன்ற அளவிற்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தங்களது செயல்களால் பலர் செய்து வருகின்றனர்.

இதோ அப்படிப்பட்டவர்களில் சிலரைப் பற்றிய ஒரு தொகுப்பு...

1. ‘தனி ஒருவன்’ ராஜேஷ்:

பலரும் தங்கள் வீடுகளில் இருக்கும் கழிப்பறையை சுத்தம் செய்வதற்கே முகத்தை சுளிப்பர். அப்படியிருக்கையில் பொதுக்கழிப்பறைகளுக்குச் சென்றால், மூன்று நிமிடம் மூக்கைப் பொத்திக் கொண்டு தன் வேலையை முடித்து விட்டு கிளம்பிவிட வேண்டும் என்று தான் நினைப்பர். ஆனால், அவர்களில் இருந்து வேறுபட்டவர் ராஜேஷ். 

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காரைக்குடியை சேர்ந்த ராஜேஷ், 2015ல் IELTS தேர்வு எழுதுவதற்காக சென்னை குரோம்பேட்டில் தங்கி இருந்தார். அப்பொழுது ஊரப்பாக்கத்தில் இருக்கும் தன் நண்பரை சந்திக்க ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு முதல் முதலாக வந்த ராஜேஷ் அசுத்தமாக இருந்த ரயில் நிலையத்தை கண்டு சுத்தம் செய்ய முடிவு செய்தார். அன்று தொடங்கிய அவரது பணி இன்றளவும் தொடர்கிறது. தனிமனிதனாக சென்னையில் ரயில் நிலையங்களை சுத்தம் செய்து வருகிறார். 

அவரைப் பற்றி இந்தச் செய்தியில் மேலும் தெரிந்து கொள்ளலாம்...

2. ‘எகோ மித்ரா’ சுமித்ரா:

ஜெர்மனில் வசிக்கும் சுமித்ரா தனது நண்பர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து சென்னையில் ’எகோ மித்ரா’ (Eco Mitra) என்னும் அமைப்பை துவங்கியுள்ளார். இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் மண்ணையும், சுற்றுச்சூழலையும் மாசாக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளை பயன்படுத்துவது தான். ஒரு முறை பயன்படுத்தி தூக்கிப்போடும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச் சூழல்களை அதிகம் பாதிக்கிறது அதனால் பயன்படுத்திய துணியை மறுசுழற்சி செய்து விற்கின்றனர் இவர்கள். இந்தச் செய்தியில் இவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

3. வீடென்பது கல்லும், மணலும் அல்ல...

ஆண்டுதோறும் கோடை காலம் வருகிறதென்றாலே மக்களுக்கு பயம் தான். கொளுத்தும் கோடையின் வெப்பம் வீட்டிற்குள்ளும் வரக்கூடாதே என்று. மழைக்காலம் வந்தால் அதனை தாங்கும் பலம் வேண்டும் என்று வேறு மாதிரி பயம். எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வீடுகளை சமூக அக்கறை நிறுவனங்கள் சில உருவாக்கி வருகின்றன. இதோ அவற்றைப் பற்றிய தகவல்கள்.

4. புதுமையான இயற்கை அடுப்புகள்:

சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கியமானது காற்று மாசுபாடு. இதற்கு வாகனங்களின் பெருக்கம் ஒரு காரணம் என்றால், வீடுகளில் பயன்படுத்தப்படும் விறகு அடுப்புகள் மற்றொரு காரணம். விறகு அடுப்புகளால் சமையல் செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் கேடு தான். எனவே தான், சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமையான அடுப்புகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ். இதோ அவரது அடுப்பினைப் பற்றி தெரிந்து கொள்ள...

5. குப்பைக்காரன்:

நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை என மத்திய அரசும், மாநில அரசும் எத்தனையோ திட்டங்கள் கொண்டு வந்தாலும், வீட்டை பேணும் அளவிற்கு தெருவைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை மக்கள். எனவே, தான் ‘குப்பைக்காரன்’ என்றொரு அமைப்பை தொடங்கி அதன் வழியே குப்பை மேலாண்மையை பெருமளவில் செய்து கொண்டிருக்கிறார்கள் சேலத்தைச் சேர்ந்த நான்கு நண்பர்கள். சமூக செயல்முனைவின் வழியே அறிமுகமான கெளதம், பரணிதரன், செழியன் மற்றும் சைதன்யனின் மனைவி ஹரிணி ஆகிய நால்வரும் இணைந்து இந்த அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி மேலும் இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

6. மண்பாண்ட பாத்திரங்கள்:

பழைய பாரம்பரியத்தையும் சமையல் பாத்திரங்களையும் திரும்ப கொண்டு வர தீர்மானித்து, கொச்சியைச் சேர்ந்த ராதிகா மேனனும் ப்ரியா தீபக்கும் உருவாக்கியது தான் ’தி வில்லேஜ் ஃபேர் நேச்சுரல் குக்வேர்’ (The Village Fair Natural Cookware). இதன் மூலம் நான்ஸ்டிக் உள்ளிட்ட பாத்திரங்களால் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீங்கிற்கு எதிரான விழிப்புணர்வு பணிகளை இந்தப் பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள...

7. காலி பாட்டில்:

தொழில் செய்ய வேண்டும் என்ற தங்களது சுயநலத்தில், சற்று பொதுநலத்தையும் கலந்து செயல்பட்டு வருகிறது பெங்களூரைச் சேர்ந்த ’காலிபாட்டில்’ நிறுவனம். வெறும் குப்பை மறுசுழற்சி மூலமே சம்பாதிக்கிறது இந்த ஸ்டார்ட்-அப். தெளிவாகக் கூறினால், வாடிக்கையாளர்கள் குப்பைகளை விற்று பணம் சம்பாதிக்கலாம், அதைப்பெறும் இந்நிறுவனம் மறுசுழற்சி செய்து லாபம் ஈட்டுகிறது. இதன் மூலம் நாடும் சுத்தமாகும், இவர்களுக்கு லாபமும் கொழிக்கும். இதோ அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...