உலக மாணவராக பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர்- ஒரு பார்வை!

0

பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் 126– வது பிறந்த தினத்தை இந்தியா ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடியது. 126 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மத்தியப் பிரதேசம் மோவ் என்ற சிறிய கிராமத்தில் முற்காலத்தில் சொல்லப்பட்ட தீண்டத்தகாத குடும்பத்தில் பிறந்தார் பீம்ராவ். 

பாபா சாஹேப் அம்பேத்கர் பணிகள் குறித்து அநேகம் ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும், எழுத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இன்றளவு வரை சுதந்திர போராட்ட இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். புரட்சிகரமான அரசியல் பார்வையாளர் என்ற வகையில் மட்டுமின்றி அறிவு சார்ந்த கல்வியாளராகவும் அவரது பங்களிப்பு இருந்தது. குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்து அதனால் பலராலும் எழுதப்படும் அநேக தலைவர்களில் ஒருவராக மட்டுமின்றி பாபா சாஹேப் தானே மிகவும் பயனுள்ள பொருள்கள் பற்றி எழுதி எதிர்காலச் சந்ததியினர் அவற்றை வாசிக்க தகுந்த வகையிலும் உருவாக்கித் தந்தவர்.

தற்கால வரலாற்று ஆசிரியர்களில் முன்னிலை வகிப்பவரான ராமச்சந்திர குஹா அவரது நூலான ‘Makers of Modern India’ என்ற நூலில் நவீன இந்தியாவின் முன்னணித் தலைவர்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார். அபூர்வமான அறிவாற்றலும் அரசியல் தலைமைப் பண்பும் சம அளவில் கலந்து ஏற்பட்ட சிறப்பு கலவையாக அவரது வாழ்க்கை மிளிர்ந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அம்பேத்கரின் உரைகள் மற்றும் எழுத்துக்களை பிரபலப் பொருளாதார நிபுணரும், அறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான நரேந்திர யாதவ், 6 தொகுதிகளாக உருவாக்கி உள்ளார். இவை ’அம்பேத்கர் பேசுகிறார்’, ’அம்பேத்கர் எழுதுகிறார்’ என்ற இரண்டு பதிப்புக்களாக வெளிவந்துள்ளன. அம்பேத்கர் அறிவு விசுவரூபி என்று யாதவ் குறிப்பிடுகிறார். பாபா சாஹேப் பன்முகத் தன்மை கொண்ட மனிதர். பொருளாதாரம், சமூகவியல் மனித இன இயல், அரசியல் ஆகிய புலங்களில் அவரது அறிவாற்றல் எவரும் வியக்கும் படைப்புகளை உருவாக்கியது. இவை எதற்கும் பின்தங்கியவை அல்ல. 

தற்போது அனைவராலும் பேசப்படும் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கையை பாபா சாஹேப் தாம் பொருளாதார மாணவராக இருந்த போதே சிந்தித்து வெளியிட்டவையாகும். அவரது நிரந்தரமான படைப்புகளை குறிப்பிட்ட சமுதாயம், அரசியல், கொள்கைக்குள் கட்டுப்படுத்துவது அவரது ஆன்மாவுக்கு இழைக்கும் பெரிய அநீதியாகும்.

இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி 

இந்திய அரசியல் சட்டத்தை வரைந்த ஆண்களும் பெண்களும் தலை சிறந்த நெடு நோக்கு கொண்டவர்கள். அரசியல் சட்டத்தை வரைந்த குழுவுக்கு பாபா சாஹேப் தலைமை ஏற்றிருந்தார். இந்தக் குழு உலகின் அதிக வேற்றுமைகள் கொண்ட நாட்டிற்கு மிக நீளமான அரசியல் சட்டத்தை உருவாக்கியது. மனிதகுலத்தின் 6 – ல் ஒரு பங்கான மக்கள் தொகைக்கு இந்த அரசியல் சட்டம் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. 

பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை இணைத்து மாதிரி மேம்பாட்டு அமைப்பினை உருவாக்க எவ்வளவு அறிவாற்றல் தேவை என்பதை கற்பனை செய்துதான் பார்க்க வேண்டும்.

சிறந்த கல்வியாளராக பாபா சாஹேப்

“கல்வியே மிகப் பெரிய பொருட்செல்வத்தை தரக்கூடியது என்றும் அதற்காக போராடலாம் என்றும் பின்தங்கிய வகுப்பினர் உணர்ந்து கொண்டனர். நான் பொருட்செல்வ நன்மைகளை விட்டுக் கொடுக்கலாம், நாகரீகத்தின் நன்மைகளை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் உயர்நிலைக் கல்வியின் முழுப் பலன்களை அனுபவிக்கும் வாய்ப்புகளை பெரும் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. கல்வியின்றி தங்களது வாழ்க்கை பாதுகாப்பானதாக இராது என்று தற்போது உணர்ந்துள்ள பிண்தங்கிய வகுப்பினரின் கருத்துக்களின்படி இது முக்கியத்துவம் பெறுகிறது” என்று கூறினார் பாபா சாஹேப்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாபா சாஹேப் பயின்றபோது அவரது பேராசியர் ஜான் டியூவே ஏற்படுத்திய தாக்கம் அவரது கல்வி சார்ந்த சிந்தனைகளில் வலுப் பெற்றுள்ளது. தமது அறிவுசார் வாழ்க்கை பேராசியர் ஜான் டியூவே –க்கு பெரிதும் கடமைப்பட்டிருப்பதாக பாபா சாஹேப் அவ்வப்போது கூறுவார். பேராசியர் ஜான் டியூவே அமெரிக்கத் தத்துவ ஞானி, உளவியல் அறிஞர் மிகச்சிறந்த கல்வியியல் சீர்திருத்த வாதி. செயல் நிலை உளவியல், தத்துவம், முற்போக்கு கல்வி ஆகியதுறைகளிலும் முக்கிய இடம் பெற்றவர் டியூவே.

வெளிநாடுகளில் முறையான கல்வி பெறுவதை பாபா சாஹேப் வலியுறுத்தினார். சட்டப்படிப்புக்காக இங்கிலாந்து செல்வது நல்ல சம்பாத்தியத்துக்கு வழி வகுக்கும் என கருதப்பட்ட காலத்தில் பாபா சாஹேப் தனது மனிதகுலத்தின் மீதான அன்பு காரணமாக கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி கற்றார். அமெரிக்க ரயில்வேயின் பொருளாதாரம் முதல் அமெரிக்க வரலாறு வரை பல்வேறு பாடங்களை அவர் பயின்றார்.

சமயம் பற்றி பாபா சாஹேப்

1938–ம் ஆண்டு மன்மாட் ரயில்வே பணியாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையில் டாக்டர் அம்பேத்கர் கீழ்கண்டவாறு கூறினார். 

“குணம் கல்வியை விட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்கள் சமயம் தொடர்பாக கவனக்குறைவாக இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. ஒருசிலர் கூறுவது போல சமயம் என்பது போதை மருந்து அல்ல, என்னுள் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களும், எனது கல்வியால் சமுதாயத்திற்கு நான் ஆற்றும் சேவைகளும் என்னுள்ளே இருக்கும் சமய உணர்வுகளால் தான்.”

சில மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை நீடித்த உள்ளார்ந்த சிந்தனை காரணமாக அவர் தனது பெற்றோர் சமயத்திற்கு மிக நெருக்கமான ஒரு சமயத்தை தெரிவு செய்ய முடிவு செய்தார். பல்வேறு சமயத்தலைவர்கள் அவரை தம்பால் இழுத்துக்கொள்ள முயற்சி செய்தனர். மறுக்க முடியாத பல்வேறு கொடைகளை அளிக்கவும் அவர்கள் முன்வந்தனர். 

அவரது பண்பாட்டு, ஆன்மிக ஆளுமைப்பண்புகள் அதிகமாக ஆராயப்படவில்லை.ஒருமைத் தன்மையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை கீழ்க்கண்ட அவரது வார்த்தைகளிலிருந்து உணர்ந்துக் கொள்ளலாம். “இன வாரியாக பார்த்தால் அனைத்து மக்களும் பலதரப்பு தன்மை கொண்டவர்கள். பண்பாட்டு ஒருமைப்பாடுதான் மனிதகுல ஒருமைத் தன்மையின் அடிப்படை. இந்த பின்னணியில் இந்திய தீபகற்பம் பண்பாட்டு ஒற்றுமையை பொறுத்தவரை வேறு எந்த நாளும் மிஞ்ச முடியாத நிலையில் உள்ளது என உறுதிபடக் கூறுவேன்.”

நெடுநோக்குடைய தூதர்

இந்திய வெளியுறவுக் கொள்கையில் அவரது பங்களிப்பை தளத்தகை சமுதாயம் கவனத்தில் கொள்ளவில்லை. சீனா இந்தியாவை தாக்குவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா சீனாவிற்கு பதிலாக மேற்கத்திய நாடுகளை தெரிவு செய்ய வேண்டுமென முன்னெச்செரிக்கை செய்தவர் பாபா சாஹேப். அரசியல் சட்ட ஜனநாயக தூண்களை அடித்தளமாகக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குமாறு அன்றைய தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.

1951ம் ஆண்டு லக்னோ பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய அம்பேத்கர் கீழ்கண்டவாறு முன் எச்சரிக்கை விடுத்தார். 

“அரசின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவை வலுவான நாடாக மாற்றத் தவறிவிட்டது. ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி ஏன் கிடைக்கக்கூடாது? பிரதமர் இதற்காக ஏன் பாடுபடவில்லை? இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கம்யூனிச எதேச்சதிகாரம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இறுதி முடிவுக்கு வரவேண்டும்,” என்றார். 

சீனா பற்றி குறிப்பிட்ட அம்பேத்கர் அந்த நாட்டின் திபெத் கொள்கையை கடுமையாகச் சாடினார். “பஞ்சசீலக் கொள்கையில் மாவோவுக்கு நம்பிக்கையிருந்தால் அவர் தனது சொந்த நாட்டின் புத்த சமயத்தவர்களை வேறு விதமாக நடத்தியிருப்பார். அரசியலில் பஞ்சசீலக் கொள்கைக்கு இடமேதும் இல்லை.”

ஜனநாயக நாடுகளின் அமைப்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அம்பேத்கர் பலமுறை வலியுறுத்தினார். 

“நாடாளுமன்ற ஆட்சிமுறை உங்களுக்கு வேண்டுமா? அப்படியானால் நாடாளுமன்ற ஆட்சிமுறை கொண்ட நாடுகளடன் நட்புறவுடன் இருக்க வேண்டும்” என்றார் அவர்.

அம்பேத்கரின் 126வது பிறந்தநாளின் போது தற்போதைய மத்திய அரசு தலித் மக்கள் இந்திய வளர்ச்சி வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பதற்கான பலசட்ட நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும். நிமிர்ந்து நில் இந்தியா, முத்ரா திட்டம், ஷெட்யூல்ட் வகுப்பு மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான தேசிய மையம் ஆகியவை காரணமாக நாட்டின் தலித் மக்கள் வழக்கமாக தங்களுக்கு கிட்டாமல் இருந்த துறைகளில் தங்களை வலுவாக நிலைநிறுத்த பெரிதும் உதவி உள்ளது.

(பொறுப்புதுறப்பு: கட்டுரையாசிரியர் குரு பிரகாஷ், புது தில்லியில் உள்ள இந்தியா அறகட்டளை நிறுவனத்தின் முதல் நிலை ஆராய்ச்சியாளர் மற்றும் திட்டத்தலைவர். கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துகள் ஆகும்.)