அமெரிக்கப் பணியைத் துறந்து நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் ஐபிஎஸ் அதிகாரி!  

0

நிஷாந்த் திவாரி பீஹாரின் புர்னியா மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகவேண்டும் என்பதற்காக அமெரிக்கப் பணியைத் துறந்தார். காவல் அதிகாரியாக செயல்படுவதுடன் சமூகப் பணியாற்றவேண்டும் என்கிற அர்ப்பணிப்புடன் பீஹாரில் நலிந்த மக்களுக்காக ‘மேரி பாட்ஷாலா’ என்கிற பள்ளியை நிறுவியுள்ளார்.

நிஷாந்த் அமெரிக்காவில் சில நாட்கள் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. எனவே இந்தியா திரும்பினார். யூபிஎஸ்சி தேர்வெழுதி வெற்றிபெற்று காவல்துறை கண்காணிப்பாளர் ஆனார். காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதால் நடைமுறை யதார்த்தங்களை சிறப்பாக புரிந்துகொள்ள முடிந்தது.

குடிபெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில்லை என்பதையும் சமூகத்தின் வளர்ச்சிக்கு இவர்களது திறன்களை மேம்படுத்தவேண்டிய அவசியம் இருப்பதையும் தெரிந்துகொண்டார். இந்த நோக்கத்துடன் ’மேரி பாட்ஷாலா’ துவங்கினார். இந்த பள்ளியின் அவசியம் குறித்து ‘தி லாஜிக்கல் இண்டியன்’ நேர்காணலில் பகிர்ந்துகொண்டபோது,

”எந்த ஒரு ஆவணத்திலும் கையொப்பமிடுதற்கு முன்பு அவர்கள் அதை படித்துப் பார்க்கவேண்டியது அவசியம் என்பதால் குடிபெயர்ந்தவர்களுக்கு கல்வியறிவு அத்தியாவசியாகிறது. அவர்கள் பெருவிரல் ரேகையை பதிவு செய்யாமல் கையொப்பமிட தெரிந்துகொள்ளவேண்டும் என நாங்கள் விரும்பினோம். தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்டு அவர்களுக்கான அரசாங்க திட்டங்களை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.”

கல்வியின் முக்கியத்துவம் குறித்து நிஷாந்த் எடுத்துரைத்ததும் குடிபெயர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை மகிழ்ச்சியாக பள்ளிக்கு அனுப்ப சம்மதித்தனர். குழந்தைகளுடன் இளம் வயதினரும் பெண்களும் மேரி பாட்ஷாலா வந்தனர்.

நிஷாந்த் பள்ளியில் கற்றுக்கொடுப்பதுடன் மற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த முயற்சியில் இணைந்துகொண்டு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கற்றுத்தர ஊக்கமளித்தார். ஆரம்பத்தில் புர்னியா பகுதியில் மட்டும் ஒரே ஒரு பள்ளி துவங்கப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வந்ததால் நிஷாந்த் மற்ற கிராமங்களிலும் மேரி பாட்ஷாலா திறக்க உதவினார்.

”குடிப்பழக்கத்தை கைவிட்ட பல இளைஞர்கள் இந்தப் பள்ளிகளில் மாணவர்களாக சேர்ந்தனர். சிலர் கற்றுக்கொடுக்க இணைந்து கொண்டனர். தீய பழக்கங்களுக்கு அடிமையானவர் அவற்றை துறந்ததால் உருவான நேர்மறை தாக்கத்தை இந்த மாலை நேரப் பள்ளிகளில் பார்க்கமுடிந்தது,” 

என்று பள்ளிக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து பிடிஐ-க்கு தெரிவித்தார் நிஷாந்த்.

கட்டுரை : Think Change India