குவைத்தில் சாதனை படைத்த தமிழகப் பெண்!

குவைத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரண்யாதேவி முதல் பரிசைப் பெற்றுள்ளார். அங்கு இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிசைப் வென்றுள்ளது, இதுவே முதன் முறை.

1

கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா தேவி. குவைத்தில் கணவருடன் வசித்து வரும் இவர் அங்கு இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல் என்ற பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். கோவையில் கல்லூரி படிக்கும் போதே காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். பின்னர் குவைத்திற்கு சென்று அங்குள்ள ரைபிள் கிளப்பிலும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றார். இந்நிலையில் குவைத் நாட்டில் அல் மெய்தான் மைதானத்தில் நடைபெற்ற அல்கந்தாரி சாம்பியன் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு ஐம்பது மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சரண்யா முதல் இடத்தை பெற்றார். 

குவைத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இடத்தைப் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள சரண்யாதேவி, கோவையில் பயிற்சி பெற்ற போது கிடைக்காத வெற்றி தனக்கு குவைத் நாட்டில் கிடைத்து இருப்பதாகவும், கோவையில் பெற்ற பயிற்சியே இந்த வெற்றியை பெறக் காரணம் என்றும் கூறுகிறார்.

பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். இதில் பைசல் அல் கந்தரி, இந்தியாவைச் சேர்ந்த பெண் பரிசு பெறுவது மகிழ்ச்சி என பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நெகிழ்கிறார், சரண்யா.

”மற்ற நாட்டு பெண்களுக்கு மத்தியில் இந்தியா சார்பில் என்னுடைய பெயரை அறிவித்த தருணத்தை என் வாழ்வில் மறக்க முடியாது எனும் சரண்யா, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.”

சரண்யாதேவியின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும், கோவையில் உள்ள அவரது தந்தை கண்ணன், தனது மகள் குவைத்தில் உள்ள தமிழ் வம்சாவழி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் பணியையும் செய்து வருவதாக பெருமையுடன் கூறுகிறார்.

சரண்யாவிற்கு விளையாட்டு மேல் உள்ள காதலுக்கு, அவர் வீடு முழுவதும் உள்ள கோப்பைகளே சான்று. மகள் வெற்றி குறித்து நெகிழ்ந்து அவர் வாங்கிய பதக்கங்களை பார்த்து மகிழ்க்கின்றனர், அவரது பெற்றோர்கள்.

துப்பாக்கி பயிற்சி பெற தேர்வாவதே கடினம் என்ற சூழ்நிலையிலும், சரண்யாவின் விளையாட்டு ஆர்வத்தால் எளிதில் தேர்வானதாக கூறுகிறார், அவரது தந்தை கண்ணன். குவைத்தில் பெற்ற 6 மாத பயிற்சியும், பயிற்சியாளரும் கொடுத்த நம்பிக்கையில் சரண்யா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகையை சூடியதாக பெருமை தெரிவித்துள்ளார்.

Related Stories

Stories by Jessica