மாற்றுத்திறனாளிகள் 25 ஆயிரம் பேரை சிறு தொழில்முனைவோர் ஆக்கிய தனிநபரின் சாதனை!

சமூகப் பிரச்சனைகளுக்கு புதுமையான தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கி தீர்வுகாண ’சாசெண்ட்ஸ்’ நிறுவனத்தை அமைத்தும் ’சௌதாகர்’ முயற்சியை மேற்கொண்டும் மாற்றுத்திறனாளிகள் எஃப்எம்சிஜி கடைகளை நிறுவ உதவுகிறார் ஆலோக் மிஸ்ரா.

1

ஆலோக் மிஸ்ரா உத்திரப்பிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர். அவருக்கு வளர்ந்து வரும் நிறுவனங்கள் மீது இருந்த நம்பிக்கையும் எஃப்எம்சிஜி பகுதியில் இருக்கும் வாய்ப்புகளும் அவர் ’சௌதாகர்’ முயற்சியை உருவாக்கக் காரணமாக அமைந்தது. ஆப்ரிக்காவின் பர்கினோ ஃபாசோ பகுதியில் அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். இவர் எஃப்எம்சிஜி பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து பர்கினோ ஃபாசோவின் உட்பகுதிகளில் விநியோகம் செய்து வந்தார்.

நமது நாட்டின் 70 சதவீத பங்குவகிக்கும் பகுதியான கிராமப்புறங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகங்களால் பலனடையாமல் உள்ளது என்கிறார் 27 வருட வணிக அனுபவமிக்க இந்தத் தொழில்முனைவோர்.

சமூகத்தின் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனம் சாசண்ட்ஸ் (Socents).

இந்நிறுவனம் சில்லறை வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு துறைகளில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலமாகவும் நிறுவனங்கள் வாயிலாக நீக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது. உத்திரப்பரதேசத்தின் கிராமப்புறங்களில் இதன் முக்கிய முயற்சியான ’சௌதாகர்’ திட்டத்தின் மூலம் தற்போது செயல்பட்டு வருகிறது.

வணிகத்திற்கான உந்துதல்

சாசண்ட்ஸ் ஆய்வின்படி உத்திரப்பிரதேசத்தின் மக்கள்தொகையில் 1.8 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களில் பெரும்பாலோனோர்க்கு வேலை இல்லை.

25,000 அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு கிராமப்புற சில்லறை வர்த்தகத்தைப் பயன்படுத்தி சுய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது சௌதாகர்.

2,000-க்கும் அதிகமான மக்கள் இருக்கும் உத்திரப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி மற்றும் கட்டமைப்பு வசதிக்கு ஆதரவளிக்கிறது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, பானங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பு சௌதாகர் அவுட்லெட்களில் இருக்கும். வலுவான விநியோக நெட்வொர்க் மூலம் பொருட்கள் கடை அமைப்பவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.

இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கௌரவமாக சம்பாதிக்க குறைவான வாய்ப்புகளே உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் அடிநிலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிறார் ஆலோக்.

பெரும்பாலானோருக்கு அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் தங்களது வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இவர்களுக்கு ஆலோசனை வழங்கபடுவது அவசியமாகிறது. சௌதாகரின் ஊழியர்களும் தொலைபேசி வாயிலாக சேவை வழங்குவோரும் இந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

வணிக மாதிரி

பயன்பெறக்கூடியவர்களை கண்டறிந்ததும் இந்நிறுவனம் அவர்களுக்கு ஊக்கமளித்து வங்கிக் கடன் பெற உதவுகின்றனர். அத்துடன் பொருட்களை வழங்குவோரிடமும் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி பொருட்கள் சௌதாகர் அவுட்லெட்டை வந்தடைவதை உறுதிசெய்கின்றனர்.

சௌதாகர் முயற்சியின் கீழ் பொருட்கள் வெவ்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்டு சாசண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் சௌதாகர் அவுட்லெட்களுக்கு விநியோகம் செய்யப்படும். சௌதாகரின் கால் செண்டர் மூலமாகவோ அல்லது களத்தில் பணியாற்றும் விற்பனைக் குழுவிடமிருந்து நேரடியாகவோ புக் செய்து பொருட்களின் இருப்பை மறு நிரப்பீடு செய்துகொள்ளலாம். ஆர்டர்கள் 15 நாட்களில் கடையை வந்தடைந்துவிடும். இதனால் கடை வைத்திருப்போரின் நேரம் மிச்சமாவதுடன் போக்குவரத்து சார்ந்த சிரமங்களும் இருக்காது.

அலோக் கூறுகையில், 

”நிறுவனத்துடன் இணைக்கப்படும் கிரானா கடைகள் கிராம மக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவடன் அவர்களுக்கு போலியான தயாரிப்புகள் கிடைக்காமல் இருப்பதையும் உறுதிசெய்கிறது.

சௌதாகர் கடைகள் அமைப்பதற்காக இதுவரை 1,400 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அறுபது விண்ணப்பங்களுக்கு கடன்கள் ஒப்புதல் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 32 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளது. 17 கடைகள் செயல்படத் துவங்கியுள்ளது.

ஒரு தனிநபர் கடை வாயிலாக சுமார் 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டப்படும். சில நேரங்களில் இதைக்காட்டிலும் கூடுதல் வருவாயும் ஈட்டப்படுகிறது.

ஓராண்டு வரை சுயநிதியில் இயங்கிய சௌதாகர் ஐஐடி-கான்பூரிடமிருந்து சீட் நிதி பெற்றுள்ளது. ஆறு பேர் அடங்கிய இவர்கள் குழு மேலும் விரிவடைந்து அதிகம் பேரை சென்றடைய அடுத்த கட்ட நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஷின்ஜினி சௌத்ரி

Related Stories

Stories by YS TEAM TAMIL