நீங்களும் தலைவரே!- ஷாரூக்கான் அடுக்கிய 9 வாழ்க்கைப் பாடங்கள்!

0

பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் முதன்முறையாக நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புடனான 'ஐஐஎம்பியூஇ-யின் தலைமைத்துவ மாநாடு (Leadership Summit) நிகழ்வில் அவர் பாடினார், வசீகரித்தார், கடுகடு கார்ப்பரேட் நபர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். ஆம், சமீபத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களை அசத்தியவர், பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான். சிறந்த முறையிலான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய அட்டகாச பாணியில் தலைமைப் பண்புகள் குறித்து பாடங்களையும் எடுத்தார்.

பிரபல நகைச்சுவை ஒன்றை மேற்கோள்காட்டி, படைப்புத்திறனுடான தலைமைத்துவம் குறித்து பேசிய ஷாரூக் அடுக்கிய வழிகாட்டுதல்கள் அனைத்துமே பார்வையாளர்களுக்கு அறிவு விருந்தாக அமைந்தன. அவர் தனது வாழ்க்கைப் பாடங்களையொட்டி தலைமைப் பண்பு தேவைப்படுவோருக்கு வழங்கிய குறிப்புகளில் ஒன்பது முக்கிய அம்சங்கள் இதோ...

1. தலைவர்கள் தங்கள் அனுபவங்களை மிகச் சரியாக உள்வாங்கிக்கொண்டு, அவற்றை தனித்துவமான உலகமாக மறுபடியும் கட்டமைக்க வேண்டும். வாழ்க்கையில் தேவையான தருணங்களில் அந்த அனுபவங்களை கச்சிதமாகப் பிரித்துப் பயன்படுத்த வேண்டும். கேள்விகள் கேட்கவும், கற்பனை செய்யவும், கனவு காணவும், மிக முக்கியமாக - நம்பிக்கைக் கொள்ளவும் அவர்கள் தயங்கக் கூடாது. தங்கள் செயல்களால் வெற்றி கிட்டாத நிலையிலும் கூட, அவர்கள் செயலாற்றுவதற்கு அஞ்சக் கூடாது. ஒரு பிரபலம் என்ற வகையில், எனது செயல்கள் மீது கேள்விகள் எழுந்துள்ளன, விமர்சனங்கள் மலிந்துள்ளன, கருத்துகள் சிதைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எதிர்வினைகளை நான் எதிர்கொண்டாலும், "ஹம் தோ ஆக்டர் கரேகா, துனியா சே நஹி டரேஹா" என்று பாடியபடி உலகைப் பற்றிய கவலையின்றி, எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பேன். எனவே, செயல்படுவதை மட்டுமே நிறுத்தாதீர்கள். செயல்தான் எல்லாமே.

2. கனவு காண்பது மட்டுமே போதாது. தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு பழைய கனவுகளையும் யோசனைகளையும் சீர்படுத்த வேண்டும். ஏற்கெனவே நீங்கள் தீட்டிய யோசனைகள் சிலவற்றால் இப்போது வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அவற்றைப் பகுத்து அறிவது முக்கியம். இதன் மூலம் உங்களது இழப்புகளும் தோல்வி பயங்களும் அகற்றப்படுவதுடன், உங்களது நிலைகளிலும் வேலைகளிலும் மாற்றங்கள் உண்டாகும். நீங்கள் நிஜமாகவே ஒரு படைப்பாற்றல் மிக்கவராக உருவெடுப்பீர்கள். நான் வர்த்தக உலகில் வெற்றியாளர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது யோசனைகள் மிகவும் தெளிவாக இருக்கும், ஆனால் அவர்கள் பேசும் விதம் இதயபூர்வமாக இருக்காது. தன்னை மறந்த ஈடுபாடும் உணர்வுபூர்வமும் அவர்களிடம் காணாமல் போயிருக்கும். தொழில் என்பது பெரும்பாலும் எண்ணிக்கை சார்ந்ததாக ஆவதை கவலையோடுதான் பார்க்கிறேன். இதுபோன்ற இலக்குகளை அடைவது என்பது எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. இலக்குகளையும் தகுதிகளையும் வரையறுப்பது என்பது ஓர் அற்புதக் கவிதையை உருவாக்குவதற்கு ஈடானது என்றே கருதுகிறேன். உருவாக்குதல் என்பது மேலாண்மை சார்ந்தது அல்ல; மாறாக, கற்பனைத்திறன் என்ற அம்சம் மிகவும் அவசியம்.

3. தலைமை வகிப்பது என்பது ஊக்கமளிப்பதுதான். சக மனிதர்களை எந்திரத்தனமாகவோ, புள்ளிவிவரங்கள் மூலமோ அல்லது எண்ணிக்கைகள் வாயிலாகவோ உங்களால் ஊக்குவிக்க முடியாது. ஒருவேளை பங்கு வர்த்தகம், வங்கித் துறை போன்ற சில துறைசார்ந்தவர்களுக்கு வேண்டுமானால் இந்த அம்சங்கள் பலனளிக்கக் கூடும். ஒரு தயாரிப்போ, ஒரு யோசனையோ அல்லது உங்களைச் சார்ந்தவையோ எதுவாக இருந்தாலும் அவற்றின் மீது மனிதர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, கற்பனை செய்து கனவைத் தீட்டும் திறனுடன் உணர்வுபூர்வமாக கட்டமைப்பதுதான் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாகும். ஒரு சிறிய பெட்டிக்குள் அடக்கிடக் கூடிய காரியம் அல்ல... இது ஒரு வெளிப்படையான அணுகுமுறை. இதற்காக, எவ்வளவு வெறித்தனமாக செயல்பாட்டாலும் வரவேற்கத்தக்கதே!

4. நான் ஒருபோதும் இலக்குகளை நிர்ணயித்தது இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்ட வேண்டும் என்றோ அல்லது பாக்ஸ் ஆபிஸில் இத்தனை கோடிகளைக் காட்ட வேண்டும் என்றோ அல்லது மற்றொருவருடன் என் பணிகளை ஒப்பிட்டோ பார்த்ததே இல்லை. உண்மையில், எண்ணிக்கை அடிப்படையிலான இலக்குகள் என்பதை வெறும் மாயை என்றே சொல்வேன். மாறாக, கடின உழைப்பு மட்டுமே நிஜம். உங்கள் கனவு எனும் விமானம் சிறகுகள் இல்லாமலேயே வானில் பறந்திடும் என்று நம்புவது சிறுபிள்ளைத்தனமானது. ஒவ்வொரு தருணத்திலும் விடாமுயற்சி அவசியம். உங்கள் கனவுகளை எட்டுவதற்கு உரிய உழைப்பைத் தராத பட்சத்தில் வாழ்க்கையும் வழக்கம்போல் சாதாரணமானதாகவே பின்தங்கிவிடும்.

5. பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதும் தலைமைத்துவத்தின் ஓர் அங்கம்தான். உங்களைப் பேரிடர் தாக்கக் கூடும். ஒரு தோல்வியாகவோ அல்லது உங்கள் அன்புக்குரியவரை விலக்கும் சூழலாகவோ இது வரலாம். அதுபோன்ற தருணங்களில் என்ன செய்வீர்கள்? சுய இரக்கம் கொண்டு விழுந்து புரள்வீர்களா? நானும் சுய இரக்கம் கொண்டு உள்ளுக்குள் அழுவேன்; ஆனால், என்னை நானே தேற்றிக்கொண்டு மீண்டுவிடுவேன். எந்தப் பேரிடரையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளத் தயாராகிவிடுவேன். எனவே, கொஞ்சம் அழுது புரள்வது பரவாயில்லைதான். ஆனால், சூழலைப் புரிந்து ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் பார்வையை மாற்றிக்கொண்டு, உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளத் தயாராவதற்குப் பெயர்தான் தலைமைப் பண்பு.

6. என்னைப் பொறுத்தவரையில் ஒரு கச்சிதமான வாழ்க்கை என்று சொல்வதே ஒரு கேலிக்கூத்துதான். கச்சிதமான வாழ்க்கை என்று ஒன்றே இல்லை. கச்சிதமற்ற வாழ்க்கையை விட அழகானது எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். என்னுடைய வர்த்தகத்தில், வாழ்க்கை என்பது புத்தாக்க மற்றும் அசத்தல் யோசனைகளுக்கு வித்திடும் உரமாகவே இருக்கிறது. உண்மையில், பிரச்சினைகள்தான் நம்மை மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திட காரணமாகிறது என்கிறபோது, அவற்றை கட்டித் தழுவ வேண்டியதானே முறை. நாம் விதியையும் ஆரத் தழுவ வேண்டும். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்... காஜோல், மாதுரி, அலியாவையும் கூட தழுவ வேண்டிய நிலை. ஹா ஹா... எந்தச் சூழலையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு உங்களுக்கு உகந்ததாக மாற்றிக்கொள்ளுங்கள்.

7. தலைவிதிகள் பற்றி கவலைப்படாதீர்கள். விபத்துகள் நேர்வது என்பது இயல்பானது. அவற்றை எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஒரு சினிமா நட்சத்திரமாக, ஒரு தொழில்முனைவராக, ஐ.ஐ.எம். கூட்டத்தில் பேச்சாளராக நானே ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறேன். நான் ஒரு விளையாட்டு வீரனாக விரும்பினேன். என் முதுகில் காயம் ஏற்பட்டபோது, முழுமையான சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாத நிலை. எனவே, என் கவலையைப் போக்க நாடகக் குழுவில் சேர்ந்தேன். என் அப்பா திடீரென இறந்துவிட்டார். எங்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேறி, குறைந்த செலவில் சிறிய வீட்டை நாடினோம். வீட்டு வர்த்தகரின் மாமனார் 'ஃபவுஜி' எனும் டிவி சீரியல் எடுத்துக்கொண்டிருந்தார். அவருடன் என்னை அம்மா அனுப்பிவைத்தார். அபிமன்யூ சிங்குடன் நான் பங்கு வகித்தேன். பின்னர், படிப்படியாக முன்னேறி இந்த இடத்தில் இப்போது நிற்கிறேன்.

8. தலைவிதி என்பதும் தன் பங்குக்கு வேலை செய்யும். அதை எப்படி எதிர்கொள்வது, பின்தொடர்வது என்பது பற்றியெல்லாம் யாரும் நமக்குச் சொல்லித் தர முடியாது. ஒரு பேரிடர் போலவே அது தன் போக்கில் வந்து போகும். ஆனால், அதுபோன்ற பேரலைகள் வரும்போது, அதில் சிக்கி மூழ்கிடாத வகையில் உத்வேகத்துடன் செயல்பட்டு மீள வேண்டியது அவசியம். புயலுக்குப் பின் வாழ்க்கையில் அமைதி திரும்பும்போது நாமும் திடமுடன் இருக்க வேண்டும். எனவே, வாழ்க்கையின் ஜாலங்களுக்காக உங்கள் விழிகளை எப்போதும் திறந்து வையுங்கள்.

9. நீங்கள் இதயபூர்வமாக வாழாவிட்டால், அதாவது 'தில்வாலே'வாக வாழுங்கள். அதுவே, வாழ்க்கையின் பல சிறப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கவல்லது. அறிவு என்பது படைப்பாற்றலின் விதை. இங்கே, மனம் என்பது வளம் நிறைந்த மண். திறந்த மனம் இல்லாமல் ஒரு விதையால் முளைக்க முடியாது. எனவே, உங்களுடன் சுற்றியுள்ள அனைவரையுமே முன்னேற்றத்தை நோக்கி அரவணைத்துச் செல்லுங்கள். படைப்பாற்றலுடன் கூடிய உண்மையான தலைமைத்துவத்துடன் நிஜ வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் அடையத் தயராகுங்கள்.

ஆக்கம்: தீப்தி நாயர் | தமிழில்: கீட்சவன்