ஒரு பசுமை நாயகனின் பெங்களூரு நாட்கள்: 35,000 மரங்கள் நட்ட ஐ.டி. நிபுணர்!

0

சத்தீஸ்கரில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த மென்பொருள் - ஐ.டி. துறை நிபுணர் கபில் சர்மாவுக்கு ஓர் அதிர்ச்சிக் கவலை... 'ஒரு நகர் முற்றிலும் பசுமையை இழந்து வருகிறதே!' என்று. அவருக்கு சட்டென ஒரு யோசனை உதித்தது. தன் வார விடுமுறைகளில் பெங்களூருவில் நகர்வலம் வந்தார். அங்கிங்கெனாதபடி எங்கும் செடிகளை நடத் தொடங்கினார். கொஞ்சம் காலத்தை முன்னோக்கி ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்து 9 ஆண்டுகள் கழித்து இப்போது பார்த்தால், நகர் முழுவதும் பரவலாக கபில் சர்மா நட்டுவைத்த மரங்களின் எண்ணிக்கை 35,000-ஐ தாண்டுகிறது.

'சே ட்ரீஸ்' (SayTrees) எனும் என்.ஜி.ஓ.வின் இணை நிறுவனருமான இவர், நகர் பகுதிகளைப் பசுமையாக்க பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கிராமங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தன் ஆரம்பகால பெங்களூரு நாட்களை பசுமையுடன் நினைவுகூர்ந்த கபில், அப்போது அந்த நகரத்தின் பசுமை வேர்கள் முற்றிலும் கான்கிரீட் காடாக மாறி வந்தததைக் கண்டு ஆழ்ந்த கவலைகொண்டதையும் பகிர்ந்தார்.

"2007-ல் பெங்களூருவில் கடும் காலநிலை மாற்றத்தின் காரணமாக, மரங்கள் வேரோடு விழுந்து சாய்ந்ததை பரவலாகப் பார்க்க முடிந்தது. நான் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், என்ன செய்வது என்பது தெரியவில்லை. மாநகராட்சி அதிகாரிகளுடன் பலமுறை சந்தித்துப் பேசி, ஒருவழியாக பெங்களூருவில் மரம் நடுவதற்கு உரிய இடங்களைத் தேர்வு செய்து களத்தில் இறங்கினேன்" என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா-வுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஒற்றை மனிதராக களம் இறங்கி, இப்போது சுற்றுச்சூழல் தனனார்வலர்கள் பலர் கொண்ட அமைப்பாக தன் ஈரக் கரத்தை இன்னும் வலுப்படுத்தியிருக்கிறார் கபில். இந்தத் தன்னார்வலர்கள் தங்களால் நட்டுவைக்கப்பட்ட செடிகளை கவனித்து வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த அர்ப்பணிப்பு மிக்க பணியால், இதுவரை நடப்பட்டதில் 80 சதவீத செடிகள் இப்போது மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.

தி பெட்டர் இந்தியாவுக்கு கபில் அளித்த பேட்டியில், "இன்னும் நிறைய பள்ளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களோடு இணைந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக, செடிகள் நடுவதற்கு உரிய உதவிகள் செய்வதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்" என்றார் கபில்.

ஆக்கம்: திங்க் சேஞ்ச் இந்தியா | தமிழில்: கீட்சவன்