2 லட்சம் முதலீட்டில் துவங்கப்பட்ட திருமண ஆலோசனை சேவை நிறுவனம், தற்போது 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது!

1

இந்திய கலாச்சாரத்தில் திருமணங்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆடம்பரமான பாலிவுட் பாணியிலான திருமண விழாவாகட்டும் அல்லது சாதாரண திருமண விழாவாகட்டும் திருமணங்கள் விரிவாகவும் விலையுயர்ந்ததாகவும் மாறி வருகிறது.

ஒரு வழக்கமான இந்திய திருமண ஏற்பாட்டிற்குக்கூட மிகவும் கவனமாக திட்டமிடவேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் இந்த முக்கிய நாளுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சரியாக இருக்கவேண்டும். அதாவது ஷாப்பிங், சமையல் ஏற்பாடுகள், அழைப்பிதழ்களை அனுப்புதல் என பல்வேறு பணிகளை பல வாரங்கள் செலவிட்டு செய்து முடிக்கவேண்டியிருக்கும். ஆனான் மும்பையைச் சேர்ந்த மின்னாத் லால்புரியாவின் ஸ்டார்ட் அப்பான 7Vachan இவை அனைத்தையும் எளிதாக்குகிறது.

மின்னாத்தின் முயற்சி ஒரு திருமண ஆலோசனை மையமாகவே செயல்படுவதால் மற்ற திருமண ஏற்பாட்டாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. திருமண விழாவிற்கான இடத்தை தேர்வுசெய்வது, ஃபோட்டோகிராஃப்பி ஏற்பாடு, சமையல்காரர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கையாள்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் மிகச் சிறப்பான சேவையை இவரது ஸ்டார்ட் அப் உறுதிசெய்கிறது. ஒவ்வொரு சேவைக்கும் இரண்டு சதவீதம் கமிஷன் தொகையாக பெற்றுக்கொள்கிறார்.

மும்பையின் ஜுஹுவில் உள்ள ஆர்ய வித்யா மந்திர் பள்ளியில் படிப்பை முடித்ததும் எஸ்பி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பாடம் படித்தார். டிசிஎஸ் நிறுவனத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றிய பிறகு டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் பணியாற்றினார். ஐந்தாண்டு பணி அனுபவம் பெற்ற பிறகு இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தார்.

அதன் பிறகு மின்னாத் சொந்தமாக தொழில் துவங்க தீர்மானித்தார். திருமண ஆலோசனை சேவையில் செயல்பட எண்ணினார். ரியல் எஸ்டேட் பிரிவில் செயல்பட்ட அவரது அப்பா அவருக்கு உந்துதலளித்தார். இவரது முடிவிற்கு குடும்பத்தினர் ஆதரவளித்தனர். மின்னாத் யுவர்ஸ்டோரியுடன் உரையாடுகையில்,

நாங்கள் திருமண தரகர்களோ அல்லது திருமண ஏற்பாட்டாளர்களோ அல்ல. திருமண ஏற்பாட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு திருமணங்களை ஏற்பாடு செய்வார்கள். ஆனால் நாங்கள் ஆலோசகர்களாக செயல்படுகிறோம்.

ஆடைகள், ஒப்பனை சேவை, ஆபரணங்கள், அலங்காரம், இடம், ஃபோட்டோகிராஃபர் என ஒவ்வொரு சேவையையும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 7Vachan அவர்கள் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் மூன்று அல்லது நான்கு தேர்வுகளை வழங்குகிறது. மின்னாத்தின் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி கிடைப்பதை உறுதிசெய்ய வெவ்வேறு ப்ராண்டுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

மின்னாத் 7Vachan நிறுவனத்தை 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுவினார். அந்த வருடமே 300 திருமணங்களுக்கு சேவை வழங்கினார். இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு சேவை வழங்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 3,500 திருமணங்களுக்கு சேவையளிக்கிறார். சுமார் 6,500 ஹோட்டல்களுடன் பார்ட்னர்ஷிப் உருவாக்கியுள்ளார். ஒரே ஒரு ஊழியருடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 12 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.

2 லட்ச ரூபாய் முதலீட்டுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம் முதல் ஆண்டிலேயே 50 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியது. தற்போது மின்னாத்தின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 10-12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. விரைவில் நிறுவனத்தின் லாபம் 18-20 கோடியை எட்டும் என மின்னாத் மதிப்பிடுகிறார்.

கட்டுரை : Think Change India