ஃபிளிப்கார்ட்டில் இருந்து விலகிய பின்னி பன்சல்...

தனிப்பட்ட நடத்தை தொடர்பான விசாரணையின் அடிப்படையில் பன்சல் விலகியதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

0

ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் மற்றும் குழும சி.இ.ஓவான பின்னி பன்சல், தனிப்பட்ட மோசமான நடத்தை தொடர்பான விசாரனையை அடுத்து உடனடியாக பதவி விலகியிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"தீவிரமான தனிப்பட்ட மோசமான நடத்தை தொடர்பான புகார் குறித்து ஃபிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நடத்திய சுயேட்சையான விசாரனையை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனினும் அவர் இந்த குற்றச்சாட்டை தீவிரமாக மறுத்துள்ளார்,” 

என வால்மார்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இருப்பினும், விசாரணை முறையாக மற்றும் முழுமையானது என்பதை உறுதி செய்து கொள்ளும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. பின்னிக்கு எதிரான புகாரை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் எதுவும் விசாரனையில் தெரியவரவில்லை என்றாலும், முடிவெடுப்பதில் சில தவறுகள் நடந்திருப்பது, குறிப்பாக இந்தச் சூழலை பின்னி கையாள்வதில் வெளிப்படைத்தன்மையில் தவறு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக அவரது ராஜினாமவை ஏற்றுக்கொண்டோம்,’ என வால்மார்ட் தெரிவித்துள்ளது.

வால்மார்ட் கடந்த ஆண்டு, ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு வாங்கியது. நிறுவனம் 20 பில்லியன் டாலர் கொண்டதாக மதிப்பிடப்பட்டது. இதில் 2 பில்லியன் டாலர் நிறுவன முதலீடாகவும் எஞ்சிய தொகை, பங்குதாரர்கள் பங்குகளை வாங்கவும் செலவிடப்படுகிறது.

ஃபிளிப்கார்ட்டின் மிகப்பெரிய முதலீட்டாளர்களின் ஒன்றான, சாப்ட்பாங்க் விஷான் பண்ட், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் தனது பங்குகளை விற்றதன் மூலம் ரூ.9,457.8 கோடி ஆதாயம் அடைந்ததாக அண்மையில் தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆக்ஸ்ட்டில் முடிவடைந்த இந்த டீலில் பங்கு மாற்றம் தொடர்பாக ரூ.4,184 கோடி மூலதன ஆதாய வரி பதிவானதாகவும் தெரிவித்தது.

பின்னி பன்சல் 5 முதல் 6 சதவீத பங்கை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பின்னியை ஃபிளிப்கார்ட்டின் முக்கிய அங்கம் என்று கூறியுள்ள வால்மார்ட், அண்மை கால நிகழ்வுகள் கவனச்சிதறலாக அமைந்துள்ளதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சில காலமாக தலைமை மாற்றத்தை பின்னி பரிசீலித்து வந்ததாகவும், இது தொடர்பாக திட்டத்தில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், இது தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வால்மார்ட் தெரிவித்துள்ளது.

ஃபிளிப்கார்ட் சி.ஐ.ஓவாக கல்யாண் கிருஷணமூர்த்தி தொடர்கிறார். ஃபிளிப்கார்ட் அண்மை நிதியாண்டில் 7.5 பில்லியன் டாலர் மொத்த மதிப்பு தொகையை (ஜி.எம்.வி) பெற்றுள்ளது. நிகர விற்பனை 4.6 பில்லியன் டாலராகும்.

ஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் பல்லா | தமிழில்: சைபர்சிம்மன்