லண்டனில் வேலை இழந்த இந்தியர் தொடங்கிய வடா பாவ் உணவகம் 4.4 கோடி விற்றுமுதல் காணும் தொழிலான கதை!

0

சுஜய் சொஹானி 2009-ல் யூகேவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் வேலையை இழந்தார். நம்பிக்கையை இழக்காமல் தன் நண்பர் சுபோத் ஜோஷியை அணுகினார். இரு நண்பர்களும் இணைந்து மும்பையின் பிரபல உணவான வடா பாவ்-வை லண்டனில் விற்க முடிவெடுத்தனர். தற்போது அவர்களின் நிறுவனத்தின் விற்றுமுதல் 4.4 கோடி ரூபாய் ஆகும். அவர்களின் வாழ்க்கையே மாறிப்போனது.

சுஜய் அதற்கு முன் லண்டனில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவுப்பிரிவின் மேலாளராக இருந்தார். சுபோத் அவருடன் மும்பையில் படித்த கல்லூரி நண்பர். இருவரும் தொடர்பிலே இருந்து வந்தனர். சுஜய் வேலையை இழந்தபோது சுபோத்திடம் தன்னால் ஒரு வடா பாவ் கூட வாங்க வழியில்லாமல் இருப்பதைக் கூறி வருத்தப்பட்டுள்ளார். 

அப்படி பேசிக்கொண்டிருந்த போது உருவானதே வடா பாவ் விற்கும் ஹோட்டல் ஐடியா. ஆகஸ்ட் மாதம் 2010-ல் இருவரும் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா வடா பாவ் என்ற பெயரில் ஹெளன்ஸ்லோ ஹை ஸ்டீரிட்டில் தொடங்கினார்கள்.

ஆரம்ப நாட்களில் இருவரும் அங்கே கடையை நடத்த பாடுபட்டனர். ஒரு பாலிஷ் ஐஸ்கிரீம் கடை முதலாளி இவர்களுக்கு சிறிய இடம் ஒன்றை அளித்தார். அதற்கு வாடகையாக மாதத்திற்கு 35000 ரூபாய் எதிர்ப்பார்த்தார். அந்த பணத்தை புரட்ட நண்பர்கள் திண்டாடினர்.

தொடக்கத்தில் அவர்கள் ஒரு வடா பாவ்வை ஒரு பவுண்ட் அதாவது 80 ரூபாய்க்கு விற்றனர். தபேலி என்ற மற்றுமொரு உணவை ஒன்றரை பவுண்டுக்கு விற்றனர். லண்டன் மக்களை கவர இந்திய உணவான வடா பாவ்வை இலவசமாக கடை வழியே சென்றவர்களுக்கு கொடுத்தனர். 

வடா பாவ் மக்களை கவர, தொழில் சூடு பிடித்து, விற்பனை அமோகமாக நடந்தது. தற்போது அவர்களின் விற்றுமுதல் சுமார் 4.4 கோடி ரூபாயாக உள்ளது என்றால் பாருங்கள். சிறிய கடையாக தொடங்கிய அந்த கடை இப்போது பல கிளைகளுடன் 60 வகை இந்திய உணவுவகைகளை அளித்து லண்டன் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.