பவர்பாயிண்ட் பிரசன்டேஷன்களை டிசைன் செய்து அழகுப்படுத்தும் 'ஸ்கெட்ச்பபிள்'

0

ஒரு நல்ல பிரசன்டேஷனின் போது உங்களின் வாடிக்கையாளர்களை உங்கள் பக்கம் ஈர்க்க, அந்த பிரசன்டேஷனில் வெறும் கருத்துகள் மட்டும் இருந்தால் பார்ப்பவர்களுக்கு போர் அடிக்கும். அதனால் டிசைனிலும் வித்தியாசம் காட்ட வேண்டியது அவசியம். இதற்காக வெளியிலிருந்து உதவிக்குக் கூப்பிட்டால் லட்சக்கணக்கில் பணம் தரவேண்டியது இருக்கும். இந்த காரணத்தினாலேயே பெரும்பான்மையான நேரங்களில் நாமே பிரசன்டேஷனை வடிவமைக்க வேண்டியது இருக்கும்.

என்னதான் மைக்ரோசாஃப்ட்டும், ஆப்பிளும் வடிவமைப்பதை எளிமைப்படுத்தியிருந்தாலும், நம் உழைப்பை கணிசமாய் செலவழிக்க வேண்டியதாய்தான் இருக்கிறது. இது தவிர,  HaikuDeck, Canva, DeckSet, SlideSource என பல தளங்கள் இருந்தாலுமே பல நேரங்களில் இந்த வேலை சிரமமானதுதான். தொழிலில் நேரம் செலுத்துவதை விட்டுவிட்டு இப்படி பிரசன்டேஷனுக்கு நேரம் செலவழிப்பதில் யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்?

ஏற்கெனவே பக்காவாய் டிசைன் செய்யப்பட்ட வடிவங்களை நமக்கு வழங்கி இந்த பிரச்சனையை தீர்க்கிறது 'ஸ்கெட்ச்பபிள்' (SketchBubble). நம் கருத்துகளை இணைத்து சில அடிப்படை மாற்றங்களை செய்தால் முடிந்தது வேலை.

'ஸ்கெட்ச்பபிள்' கதை

ஸ்கெட்ச்பபிளின் நிறுவனர்களான ஆஷிசும், ரோஹித்தும் ஒரு செல்போன் கண்காணிப்பு மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள். முதலீட்டாளர்களை ஈர்க்க ஒரு தரமான பிரசன்டேஷன் தேவைப்பட்டது. இருவருமே அந்த ஏரியாவில் வீக் என்பதால், 500 டாலர் செலவழித்து வெளியில் டிசைன் செய்து வாங்கினார்கள்.

அப்படி வாங்கிய டிசைன் அருமையாக இருக்க, நாம் ஏன் இந்தத் துறையில் முயற்சித்துப் பார்க்கக் கூடாது என அவர்களுக்குத் தோன்றியது. பணம், நேரம் என எல்லாவற்றையும் அவை மிச்சப்படுத்துமே!

செப்டம்பர் 2014ல் முன்பே வடிவமைக்கப்பட்ட 50 பவர்பாயிண்ட் டிசைன்களோடு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இவர்களிடம் 800 பவர்பாயிண்ட் டிசைன்களும், 10ஆயிரம் ஸ்லைட்களும் உள்ளன. ரோஹித் தொழில்நுட்ப ரீதியில் உதவ, வடிவமைப்பது, மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றை ஆஷிஷ் பார்த்துக்கொள்கிறார். சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கை பங்கஜ் என்பவர் பார்த்துக்கொள்கிறார்.


இந்தத் துறையின் சவால்கள்

தொடக்கத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்துகொள்ள இவர்கள் சிரமப்பட்டார்கள். பவர்பாயிண்ட்டின் ஒவ்வொரு பகுதியையும் எடிட் பண்ண முடியும் அளவிற்கு மாற்றினார்கள். பொதுவான வண்ணங்களை அதிகம் பயன்படுத்தினார்கள்.

நாம் என்ன முயற்சித்தாலும் சில வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாது என்பதை உணர்ந்தார்கள். வெவ்வேறு கலர் காம்பினேஷன்களில் டிசைன்களை வடிவமைத்து பார்வைக்கு வைத்தார்கள்.

யாருக்கு நன்மை?

இந்த டிசைன்களை இன்னார்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை. ஹெச்.ஆர், புராடக்ட் மானேஜர் என சகல தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிதாய் தொழில்முனைவோருக்கும் மார்க்கெட்டிங் திட்டங்கள், வர்த்தக திட்டங்கள், மேலாண்மை ஆவணங்கள் போன்ற ஏராளமான வசதிகள் இருக்கின்றன.

மாணவர்கள், வக்கீல்கள் போன்றவர்கள் கூட இந்த டிசைன்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இவர்களின் அனைத்து வடிவமைப்பும் 4:3, 16:9 என்ற விகிதாச்சாரத்தில் வருகின்றன.

ஸ்கெட்ச்பபிளின் தனித்துவம்

"எங்களின் போட்டியாளர்களை விட நாங்கள் சிக்கனமாய் இருக்கிறோம். சீக்கிரமே பிரசன்டேஷனில் உங்கள் 'அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் இடமாக எங்கள் தளம் இருக்கும். எங்களைப் போல இவ்வளவு வசதிகளை அளிக்கும் தளம் வேறு எதுவுமே இல்லை" என்கிறார் ஆஷிஷ்.

இந்நிறுவனத்தை அதன் தாய் நிறுவனமான இன்போஷோர் தான் நடத்துகிறது. லட்சக்கணக்கான வியூஸ்களோடு மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கிறது. அவர்களின் இணையதளத்திலிருந்து சில இலவச டிசைன்களையும் இறக்குமதி செய்துக்கொள்ளலாம்.

இவர்களின் எதிர்காலத் திட்டம் என்வாடோ போல ஒரு நிலையான இடத்தை பெறுவதே ஆகும். இப்போதைக்கு  Keynote, Google Slides and Prezi ஆகியவற்றுக்கு டிசைன் செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள்

இணையதள முகவரி: SketchBubble

ஆக்கம் : பர்தீப் கோயல் | தமிழில் : சமரன் சேரமான்