சென்னையைச் சேர்ந்த ‘சிக்‌ஷா பினானஸ்’ ஒரு மில்லயன் டாலர் நிதியை முதலீடாக பெற்றுள்ளது!

0

சென்னையைச் சேர்ந்த பள்ளி கல்வி கடன் உதவி புரியும் தொடக்க நிறுவனம் சிக்‌ஷா பினான்ஸ் சேவை நிறுவனம் (Shiksha Financial Services India Private Limited), 1 மில்லியன் டாலர் அதாவது ரூ.6.7 கோடி நிதியை மைக்கேல் & சுசன் டெல் அமைப்பு மற்றும் அஸ்பாடா இன்வெஸ்ட்மெண்ட் அட்வைசர்ஸ் (Aspada Investment Advisors) இடம் இருந்து பெற்றுள்ளனர். 

ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப்
ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப்

2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ’சிக்‌ஷா பினான்ஸ்’, NBFC விருது பெற்ற, ரூ.3-67 கோடி அளவிற்கு தனியார் பள்ளிகளுக்கு கடன் உதவி செய்யும் நிறுவனம். நடுத்தர மற்றும் அதற்கும் கீழுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தங்களின் குழந்தைகளின் பள்ளிக்கல்வி நிதிக்காக கஷ்டப்படுகின்றனர். இதனை மனதில் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனமே சிக்‌ஷா பினான்ஸ். இதுவரை இந்நிறுவனம் 200 கல்வி நிலையங்களுக்கு கடன் உதவி செய்துள்ளது. இப்போது அவர்கள் பெற்றுள்ள முதலீடு இவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்யவும் உதவியாக இருக்கும். இந்த முதலீட்டை கொண்டு 2,300 பள்ளிகளுக்கு வரும் மூன்று ஆண்டுகளில் கடனுதவி செய்ய முடியும் என்று சிக்‌ஷா இயக்குனர் மற்றும் சிஇஒ விஎல்.ராமகிருஷ்ணன் கூறினார். 

”Michael & Susan Dell Foundation மற்றும் Aspada சிக்‌ஷாவில் முதலீடு செய்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மேற்கல்விக்கு கடன் பெற பல வழிகள் இந்தியாவில் உள்ள நிலையில், சிக்‌ஷா; பள்ளி கல்விக்கு கடனுதவி அளிக்கும் தளத்தை தேர்ந்தெடுத்தது. பள்ளிக்கல்வியில் நிதி உதவி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ளது. கல்விக் கடன், பள்ளிகளில் நல்ல கட்டமைப்பு மற்றும் கல்வி தரத்தை உருவாக்கி குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வழி செய்யும்,” என்றார் ராமகிருஷ்ணன். 

ஷிக்க்ஷாவின் பின்னணி

ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப் ஆகிய இருவருமே பட்டய கணக்காளர்கள் (CA) , ஒன்றாக பணி புரிந்தவர்கள். கார்ப்பரேட் பணியை விடுத்து தொழில்முனைய வேண்டும் என்று எண்ணிய பொழுது இருவருமே கல்வி சார்ந்த துறையில் ஈடுபடவே விரும்பினர். அதற்கான முயற்சிகளை தொடங்கிய பொழுது, பிற நிறுவனங்கள் போல் அல்லாமல் புதிதாக ஏதேனும் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணினர். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று அதன் கோட்பாடுகளுக்கு உட்பட்டு 2015 ஆம் ஆண்டு ஷிக்க்ஷா செயல் படத்தொடங்கியது.  

குழந்தைகளின் பெற்றோர்கள் கல்வி கடன் பெற வழிவகுக்கும் ஷிக்க்ஷா நிறுவனம் அவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், யுனிஃபார்ம், ஷூஸ் மற்றும் பேக்குகள் வாங்குவதற்கு கடனுதவி அளிக்கின்றனர். மேலும் ஒரு கல்வி ஆண்டிற்கு தேவையான கட்டணத்தில் 80% கடனுதவியாக அதிகபட்சம் தொகையான ரூபாய் 30,000 வரை ஒரு குழந்தைக்கு வழங்கப்படுகிறது. 6-10 மாதங்களுக்கு வழங்கப்படும் இக்கடனுதவிக்கான வட்டி விகிதம் ஒவ்வொருவரின் சூழ்நிலை பொருத்து வசூலிக்கப்படுகிறது. தேவையான ஆவணங்களை மட்டும் கொண்டு ,பெற்றோர்கள் சுலபான வழியில் ஷிக்க்ஷா நிறுவனத்திடம் இருந்து கடனுதவி பெறலாம்.

அரசு அங்கீகாரம் பெற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அந்த பள்ளியின் ஒப்புதலோடு அவர்கள் பரிந்துரைக்கும் பெற்றோர்களுக்கு கல்வி கட்டணத்தை விரைவாக திரும்ப செலுத்தக் கூடிய கடனாக அளிக்கிறது ஷிக்க்ஷா.

ஷிக்‌ஷா நிறுவனம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: Shiksha Finance