இன்றைய தலைமுறை பயணிகளுக்கான தங்கும் விடுதிகள் பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் அப்!

0

'யூ ஹாஸ்டல்ஸ்' (U Hostels) என்கிற ஸ்டார்ட் அப் 2017-ம் ஆண்டு கௌரவ் மர்யா, சுதிர் சின்ஹா ஆகிய நிறுவனர்களால் நிறுவப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் விருந்தோம்பல் துறையில் செயல்படுகிறது.

’ஒருவர் சென்றடையவேண்டிய இடம் என்பது அந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் சுட்டிக்காட்டுவது அல்ல அதை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது’ என்கிற வரிகளுக்கு ஏற்ப வாழ்கின்றனர் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பயணம் மேற்கொள்ளும் நபர்கள். 

ஏற்கெனவே முயற்சித்துப் பார்த்த ஹோட்டல் புக்கிங்கையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தங்கும் முறையையோ பயணிகள் தேர்ந்தெடுக்கும் காலம் மலையேறிவிட்டது. இன்றைய பயணிகள் பல்வேறு வாய்ப்புகளில் இருந்து தேர்வு செய்யவே விரும்புகின்றனர். பயணிகள் மட்டுமல்லாது இடம் பெயர்ந்து வருபவர்களும் நிரந்தர இடவசதியைக் கண்டறியும் வரை குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கான தங்குமிட வசதியை எதிர்நோக்குகின்றனர்.

எனவே மேக்மைட்ரிப், புக்கிங் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் பயண நிறுவனங்கள் வழக்கமாக ஹோட்டலில் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்வதுடன் பிரத்யேக தங்குமிட வசதியையும் வழங்கி வருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

பல்வேறு வணிக மாதிரிகளை முதன் முதலில் நிறுவியவர் ஃப்ரான்சைஸ் இண்டியா தலைவர் கௌரவ் மர்யா. இவர் இந்த சந்தையைக் கைப்பற்ற பெஸ்ட் வெஸ்டர்ன் இண்டியா ஹோட்டல் செயின் சிஓஓ சுதிர் சின்ஹாவுடன் இணைந்து யூஹாஸ்டல்ஸ் திட்டம் குறித்து சிந்தித்தார்.


பகிர்ந்துகொள்ளும் வகையிலான தரமான தங்கும் இடங்களை உருவாக்குதல்

’யூஹாஸ்டல்ஸ்’ ப்ரீமியம் மற்றும் உயர்தர தங்கும் விடுதிகளின் ப்ராண்டாகும். இது சர்வதேச விருந்தோம்பல் தரநிலைக்கு இணையானதாக இருப்பினும் உற்சாகம் நிறைந்த பயணிகளுக்கு சேவையளிக்கிறது.

சுதீர் குறிப்பிடுகையில்,

”விருந்தோம்பல் துறையில் இருப்பதால் இந்தத் திட்டத்தை நான் பெரிதும் பாராட்டினேன். கௌரவும் நானும் இணைந்து இந்த ப்ராடக்டை உருவாக்கினோம். தற்போது இந்தியாவில் உள்ள தங்குமிட வசதிகளும் ஹோட்டல்களும் அதிகளவில் மாறுபட்டுள்ளது. ப்ரீமியம் சேவைகளுடன்கூடிய தங்குமிடம் நீண்டகால அடிப்படையில் விலை உயர்ந்ததாகும். மற்றொரு புறம் மலிவு விலையில் இருப்பவை தரமானதாக இருப்பதில்லை. யூஹாஸ்டல்ஸ் உயர்தர வசதிகளையும் நகர்புற பயணிகள் விரும்பும் சிறப்பான வசதிகளையும் மறக்கமுடியாத அனுபவங்களையும் வழங்குகிறது.

இந்தத் தங்கும் விடுதிகள் மலிவு விலை, நிலையான கட்டமைப்பு, பிரத்யேக கலாச்சார நிகழ்வுகள், ஊடாடும் அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்ட பகிர்ந்துகொள்ளும் வகையிலான தரமான விடுதிகளாகும். டெல்லி என்சிஆர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி முதலில் செயல்படத் துவங்கியது. இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட இந்தத் தங்கும் விடுதிகள் விரைவில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் செயல்பட உள்ளது.

ஒவ்வொரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தங்குமிடத்திலும் பகிர்ந்துகொள்ளும் வசதியுடன்கூடிய தங்குமிடம், கலாச்சார நிகழ்வுகள், பகிர்ந்துகொள்ளும் பணியிடங்கள், ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் பிரத்யேகமாக கட்டணம் செலுத்தும் முறையில் ஜிம் வசதி, நீட்டிக்கப்படக்கூடிய தங்கும் வசதி, சலவை வசதிகள், உணவகங்கள், பராமரிப்புப் பணி, இலவச வைஃபை ஆகியவை வழங்கப்படும்.

யூஹாஸ்டல்ஸ் மூன்று வணிக மாதிரிகளில் செயல்படுகிறது. லீஸ் மாதிரி மற்றும் FOFO மாதிரிகளைப் பின்பற்றுகிறது.

சவால்களை எதிர்கொள்ளுதல்

ஒழுங்குமுறை சார்ந்த பணிகளில் இக்குழுவினர் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்தனர்.

இந்தக் குறிப்பிட்ட துறை தொடர்பான தெளிவான அரசு வழிகாட்டுதல்கள், உரிமங்கள், சலுகைகள் போன்றவை இல்லை என்கிறார் சுதிர். 

”இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும் தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதற்கும் சிறந்த வழிமுறைகளைக் கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். ஆனால் தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சலுகைக்கான வழிமுறைகள் நிச்சயம் உதவும்,” என்றார்.

விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் துறையைச் சேர்ந்தவர்களை இணைத்துக்கொண்டு யூஹாஸ்டல்ஸ் முக்கியக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு 10 முதல் 12 ப்ரீமியம் தங்கும் விடுதிகளை உருவாக்கத் தற்போது 300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 90 நாட்களுக்கும் அதிகமான தங்கும் வசதிக்கான இரண்டு, மூன்று மற்றும் நான்கு பேர் பகிர்ந்துகொள்ளும் வகையிலான அமைப்பிற்கான கட்டணம் 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் ஆகும். பகிர்ந்துகொள்ளும் வகையிலான ஒரே ஒரு படுக்கை வசதி கொண்ட அறைக்கான ஒரு நாள் கட்டணம் 999 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை ஆகும். பகிர்ந்துகொள்ளாமல் ஒரே நபரே தங்கும் வசதிக்கான ஒரு நாள் கட்டணம் 2,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை ஆகும்.

இதன் தாய் நிறுவனம் 300 நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் 50-க்கும் அதிகமான அலுவலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ப்ராபர்டியும் சுமார் 40 அறைகளைக் கொண்டுள்ளது. 80 முதல் 90 சதவீத அறைகள் புக் செய்யப்பட்டிருக்கும். யூஹாஸ்டல்ஸ் அடுத்த பத்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. அடுத்ததாக குருகிராம், நொய்டா, பெங்களூரு, ஹைதராபாத், நவி மும்பை ஆகிய பகுதிகளில் செயல்பட உள்ளது.

எதிர்கால திட்டம்

பகிர்ந்துகொள்ளும் வகையிலான தங்குமிட வசதிக்கான தற்போதைய சந்தை அளவு 30 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும். விற்கப்படாத இடங்களை வைத்திருக்கும் டெவலப்பர்களுடன் இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போது சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் முதலீட்டாளர்களைத் தேடி வருகிறது.

நாட்டில் குடியேறிய மக்களில் அதிகளவிலானோருக்கு (15 முதல் 29 வயது வரையிலானோர்) முறையான தங்குமிட வசதி தேவைப்படுகிறது. பல கிளைகளைக் கொண்ட தங்கும் விடுதி நிறுவனங்களான தி ஹாஸ்டல் க்ரௌட், Moustache Hostel, Zostel போன்றவை இந்தப் பகுதியில் சேவையளித்து வருகிறது. பகிர்ந்துகொள்ளும் வகையிலான வசதிகளை வழங்கும் ஸ்டேஅபோட் மற்றும் நெஸ்ட்அவே நிறுவனங்களும் இதே பிரிவுகளைச் சேர்ந்ததாகும்.

ப்ரீமியம் தங்கும் விடுதி பிரிவு இந்தியாவில் இல்லை என்றும் அந்த இடைவெளியை இவர்கள் நிரப்ப விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் சுதிர்.

”விருந்தினர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட சேவைகள் மற்றும் மதிப்பு கூட்டல் சேவைகளை வழங்குவதற்காக புகழ்பெற்ற ப்ராண்டுகளான ஜிம் 99, யூக்ளீன் மற்றும் Entrepreneur USA போன்றவை பார்ட்னர்களாக இணைந்துள்ளது. எங்களது ப்ராடக்ட் அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் அல்லது நீண்டகால அடிப்படையில் தங்கும் வசதியை எதிர்நோக்கும் நகர்புற கார்ப்பரேட் பயணிகளுக்காகவும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும்,” என்றார்.

அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் யூஹாஸ்டல்ஸ் பெருநிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்காக 10-12 ப்ரீமியம் தங்கும் விடுதிகளை அனைத்து மெட்ரோ நகரங்களிலும் அமைக்க திட்டமிட்டுள்ளது. “தற்போது செயல்படும் விதத்துடன் 100 அறைகளைக் கொண்ட 80 முதல் 100 தங்கும் விடுதிகளை அடுத்த ஏழு முதல் பத்தாண்டுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார் சுதிர்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL