குழந்தைகளின் விருப்பத் துறையை பெற்றோர்கள் தேர்ந்தெடுக்க உதவும் செயலி!

Pinwi செயலி அய்வு செய்யப்பட்ட சமயத்தில் பல தாய்மார்கள் இதைப் பயன்படுத்தியிருந்தனர். ஹேட்ச் டேக்ட் இன்னோவேஷன்ஸ் இவர்களிடமிருந்து நிதி உயர்த்தியுள்ளது.

0

'ஹேட்ச் டேக்ட் இன்னோவேஷன்ஸ்' (Hatch Tact Innovations) வழங்கும் Pinwi என்பதன் பொருள் Play-Interest-Wise. குழந்தையின் வளர்ச்சிக்கு அவர்களது விருப்பத்தில் கவனம் செலுத்தும் அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது தரவுகள் சார்ந்த இந்த மொபைல் செயலி. பெற்றோர் தங்களது குழந்தைகளின் ஆர்வத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதனால் குழந்தைகளிடம் ஒரு வாழ்க்கைப்பாதையை திணிக்காமல் இயற்கையாகவே அவர்களுக்கு ஆர்வம் இருக்கும் பகுதியை சிறப்பாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.

பல்லாண்டுகளாகவே பலரும் மருத்துவர், பொறியாளர் என்கிற பட்டத்தை இணைத்துக் கொள்ளவே விரும்பினர். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல இப்படிப்பட்ட குறுகிய வட்டத்தைத் தகர்த்தெறிந்து பல்வேறு புதிய வாய்ப்புகள் முளைக்கத் துவங்கியது. எனினும் இப்படிப்பட்ட எண்ணற்ற வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. இத்துடன் மன அழுத்தமும் சேர்ந்து குழந்தைகளும் பெற்றோரும் அடுத்தடுத்த வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருக்கின்றனர்.

Pinwi செயல்பாடுகள்

Pinwi உருவாக்கியவர்கள் நிறுவனர் ரச்னா கண்ணா மற்றும் இணை நிறுவனர் அன்கித் கேசர்வானி. ஹேட்ச் டேக்ட் இன்னோவேஷன்ஸ் தரவுகள் சார்ந்த புதுமையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. Pinwi 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டு ஆகஸ்ட் 2016-ம் ஆண்டில் தனது ஏஞ்சல் நிதிச் சுற்றை பெற்றது. 6 முதல் 13 வயது குழந்தைகளின் பெற்றோரிடம் குருக்ராம் சார்ந்த இந்த வென்சர் கவனம் செலுத்துகிறது. ரச்னா கூறுகையில்,

ஒரே வரியில் சொல்வதானால் இந்தச் செயலி ஒரு நடுநிலையான ஆலோசகராக செயல்பட்டு பயனாளி தனது குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வழிகாட்ட உதவுகிறது.

Pinwi-யை ஒரே மாதிரியான சிந்தனைகள் கொண்ட ப்ரொஃபஷனல்ஸ், தாய்மார்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், டெவலப்மெண்ட் உளவியலாளர்கள் போன்றோர் தங்களது சிந்தனைகளை ஒன்றிணைத்து உருவாக்கியுள்ளனர். இந்தச் செயலி பெற்றோர் அதிக திறனுடன் முடிவெடுக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்குகிறது.

Pinwi –யின் பின்னணி

ரச்னா 12 வருடங்களாக மார்கெட்டிங் மற்றும் தொடர்பு பிரிவில் ஊடகத் துறையில் பணியாற்றி வந்தார். 2012-ல் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு தனது ரெஸ்யூமை புதுப்பித்தபோது அவரது படிப்பும் பணியும் ஒன்றோடொன்று தொடர்பின்றி இருந்ததை கவனித்தார். கட்டடக் கலைஞராக வேண்டும் என்பதற்காக படித்துவிட்டு ஊடகங்களில் பணிபுரிந்தார். வேறு பணிக்கு மாறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஒருவர் தனது தனிப்பட்ட ஆர்வத்தினால் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது அவரால் அதை நிறைவாக செய்ய முடியும் என்பதை ரச்னா ஓய்வாக இருந்த அந்த இடைப்பட்ட காலத்தில் உணர்ந்தார். அவர் நினைவுகூறுகையில்,

“நமக்கு என்ன வேண்டும் என்பதன் அடிப்படையில் நாம் முடிவெடுப்பதில்லை. மற்றவர்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை முன்னிறுத்தியே நாம் முடிவெடுக்கிறோம்.”

குழந்தைகள் எதைப் படிக்க விரும்புகிறார்களோ அதையே தேர்ந்தெடுக்கவும் அதைச் சார்ந்த வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ளவும் அவர்களுக்கு வழிகாட்ட விரும்பினார் ரச்னா. அவர் எடுத்துக்கொண்ட இடைவெளியில் Pinwi துவங்குவதற்கான திட்டம் தோன்றியது.

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கற்றல் ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட செயலி Pinwi. பல மாதங்கள் ஆய்விற்கு பிறகே இந்தச் செயலி உருவானது. இதில் குழந்தைகளிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இந்தச் செயலி தொடர்புப்படுத்தும் முறைகளைப் பயன்படுத்தி தரவுகளை ஆய்வு செய்யும். குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வம் குறித்து தனிப்பட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறது இச்செயலி. இந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் வெவ்வேறு பயனர் இடைமுகம் உள்ளது. இதனால் இருவருக்கும் தனித்துவமான செயலி அனுபவம் வழங்கப்படுகிறது

செயலி எவ்வாறு பணிபுரிகிறது?

குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்துகொள்ள அனைத்து பெற்றோர்களும் போராடுவர். ஏன் சில நடவடிக்கைகளில் ஈடுபடும்போது குழந்தைகள் விரைவாகவே சலிப்படைந்து விடுகிறார்கள்? ஒரு காலகட்டத்தில் அதிக விருப்பமாக இருந்த நடவடிக்கைகள் திடீரென்று ஏன் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதில்லை? எதைக் குழந்தைகள் அதிகம் ரசிப்பார்கள்? எதனால் அதிக லாபமடைவார்கள்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பல பெற்றோர் திண்டாடுகின்றனர். குழந்தைகளின் விருப்பதைப் பல பெற்றோர்கள் தங்களது உள்ளுணர்வின் அடிப்படையில் தெரிந்துகொண்டாலும் உண்மையான ஆர்வத்தை அறிந்துகொள்வதற்கான எளிய வழிமுறைகள் இல்லை. விளையாட்டு வடிவத்தில் இருக்கும் ஊடாடும் மொபைல் இடைமுகம் வழியாக தினமும் குழந்தைகளின் விருப்பத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள Pinwi உதவுகிறது.

குழந்தைகளை எது அதிகம் மகிழ்விக்கிறதோ அல்லது எதில் ஈடுபடும்போது அதிகம் திருப்தியடைகிறார்களோ அதுவே குழந்தைகளுக்கு விருப்பமான செயலாகும். எது குழந்தைகளை மகிழ்விக்கிறது என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் மிகவும் எளிமையான வழியாகும். இந்தச் சிறிய நுணுக்கத்தை உணர்ந்து செயல்படுகிறது Pinwi. குழந்தைகள் தங்களது விருப்பு வெறுப்புகளை தினமும் தாங்களே பதிவு செய்துகொள்ளலாம். இதனால் பெற்றோர் அவர்களது விருப்பத்தை தினமும் தெரிந்துகொள்ளலாம். இதற்காக குழந்தைகள் Pinwi-யில் பத்து நிமிடங்கள் செலவிட்டு கீழ்கண்ட தகவல்களை பதிவுசெய்யலாம்.

• பள்ளியில் மற்றும் பள்ளிக்கு வெளியில் ஈடுபட்ட நடவடிக்கைகளை தரம் பிரிக்கலாம்

• தாங்கள் செய்ய விரும்பும் நடவடிக்கைகள் குறித்த விருப்பப் பட்டியலை உருவாக்கலாம்

• அவர்களுடைய நடவடிக்கைகள் சார்ந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்

குழந்தைகளின் விருப்பத்தை தெரிந்துகொள்வதற்காக உருவான Pinwi பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தரவுகளை ஆராய்ந்து பேட்டர்ன்களை கண்டறிந்து பெற்றோர்களுக்கு பயனுள்ள நுண்ணறிவை வழங்குகிறது. சமூக தொடர்பு, கைகளால் பணிபுரிவது, பேச்சுத் தொடர்பு, எழுத்துத் தொடர்பு, காட்சி உணர்வு, கேட்கும் உணர்வு, சுவை மற்றும் மணம், தர்க்கரீதியான சிந்தனை, எண் சார்ந்த சிந்தனை, கருத்து சிந்தனை, படைப்பு வெளிப்பாடு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல், திகில் மற்றும் சாகசம் போன்ற பல்வேறு விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய உதவுகிறது Pinwi.

குழந்தையின் ஆர்வம் குறித்த அதிக ஆழமாக ஆய்வு செய்ய பெற்றோர் விரும்பினால் 600 ரூபாய் செலுத்தி Pinwi Full Access-க்கு அப்க்ரேட் செய்து கொள்ளலாம். இதில் பெற்றோர் மற்ற பெற்றோருடன் ஒருங்கிணைவதற்கு வாய்ப்பளிக்கும். குழந்தைகளும் அவர்களுக்கான பாதுகாப்பான சமூகத்தில் ஒருங்கிணையலாம். இந்தச் செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் iOS தளத்தில் உள்ளது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,000-க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

Pinwi செயலி அய்வு செய்யப்பட்ட சமயத்தில் பல தாய்மார்கள் இதைப் பயன்படுத்தி இருந்தனர். ஹேட்ச் டேக்ட் இன்னோவேஷன்ஸ் இவர்களிடமிருந்து நிதி பெற்றது. 25 பேர் அடங்கிய குழுவாக நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகும் விதத்தில் Pinwi-யின் தற்போதைய வணிக மாதிரி அமைந்துள்ளது. வளர்ச்சியை நோக்கிய பாதையில் கல்வி நிறுவனங்களுடன் இணைய விரும்புகிறது Pinwi. மேலும் மாணவர்கள் தங்களது வாழ்க்கைப் பாதை குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டம் அவர்களது பதின் பருவமாகும். எனவே அவர்களிடம் கவனம் செலுத்தும் விதத்தில் 13 முதல் 18 வரையுள்ளவர்களுக்கென பிரத்யேகமாக Teen Pinwi அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்