'தொழில் முனைவர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும்': இக்விட்டாஸ் நிர்வாக இயக்குனர் வாசுதேவன்

0

அன்கன்வன்ஷன் சென்னை பதிப்பின் துளிகள்

அன்கன்வன்ஷன் மாநாட்டின் சென்னை பதிப்பு ஜனவரி 30 ஆம் தேதி இனிதே நடந்தேறியது. தொழில் வல்லுனர்களின் வெற்றிப் பயணம், அனுபவங்கள் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'Impact-a-preneur Quest' என்ற விருதை வென்ற நிறுவனங்களும் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.

தமிழ் யுவர்ஸ்டோரி மீடியா பார்ட்னராக பங்கு பெற்ற இந்த மாநாட்டின் சில துளிகள் இதோ உங்கள் பார்வைக்கு:-

நடைப்பெற்ற இரண்டாம் பதிப்பில் இக்விட்டாஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் திரு.பீ.என்.வாசுதேவன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் சமூக தொழில்முனைவர்களின் பார்வை மற்றும் அணுகுமுறை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று பகிர்ந்து கொண்டார். அதேப்போல் தொழில் முனைவர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்து உரையாடினார்.

"நியாயமாக செயல்படுதல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய இரண்டும் சமூக தொழில் நிறுவனங்களின் அத்தியாவசிய அம்சமாகும். இவை இரண்டும் இருந்துவிட்டால் வெற்றி நிச்சயம்"

மேலும் இதை பற்றி விரிவாக கூறுகையில்:

சமூகத்தில் உள்ள இடைவெளியை சரி செய்யும் நோக்குடன் பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான சேவையை லாப நோக்கில்லாமல் வழங்குவதே சமூக நிறுவனங்களின் நோக்கம். இந்த நோக்கத்தை செயல்படுத்தும் போது இந்நிறுவனங்கள் தங்களின் கொள்கைகளில் நியாயமான போக்கை கடைபிடிப்பது மிகவும் அவசியம். தேவை இருப்பதனாலேயே அந்த நிலைமையை நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி நியாயமற்ற முறையில் ஈடுபட்டால் அதன் நோக்கத்தை மட்டுமின்றி சமூக நிறுவன அமைப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றார்.

அதேப் போல் சமூக நிறுவன சூழல் அமைப்பில் அரசாங்கம், சமூகம், ஊடகம் என மேலும் பல பங்குதாரர்கள் உள்ளனர். சமூகத்தின் கீழ் தட்டு மக்களுடன் செயல்படும் போது இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு செயல்படுவது அவசியம், ஆகவே வெளிப்படைத்தன்மையான செயல்பாடு முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

அனுபவங்கள், தகவல்கள் என அமைந்த அவரின் உரையை அடுத்து 'Impact-a-preneur Quest' போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இரண்டு கட்ட சோதனையிடலை கடந்து 6 நிறுவனங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த நிறுவன நிறுவனர்கள், மாநாட்டிற்கு வந்தவர்கள் முன்பு தங்களின் நிறுவனத்தை பற்றி பகிர்ந்து கொள்ள ஒரு நிமிட அவகாசம் தரப்பட்டது.

கண்டுபிடிப்பில் புதுமை, சமூக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய யோசனை, அணியின் திறமை என முக்கிய கோட்பாடுகள் அடிப்படையில் இரண்டு நிறுவனங்கள் சம நிலையில் இருந்ததால், இரண்டு நிறுவனங்களுக்கு இந்த விருது சேர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

'கிரீன் ரோபோ மெஷினரி' நிறுவனத்தின் மனோகர் சம்பந்தம் மற்றும் 'பயோடெக் கிளப்' நிறுவனத்தின் அபிஷேக் ஆகிய இருவரும் இவ்விருதை வென்றனர்.

டைகான் தலைவர் திரு.ஆர்.நாராயணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அறிவித்தார். இவருடன் இணைந்து திரு.வாசுதேவன், திரு ராமராஜ் ஆகியோர் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தனர்.

விருது தேர்வு ஜூரியில் இடம்பெற்ற மணிக் ராஜேந்திரன், தேர்ந்தெடுக்கப்பட்ட முறையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "இறுதிப் பட்டியலுக்கு தேர்வான ஒவ்வொரு நிறுவனமும் சிறந்ததாக அமைந்தன, ஆகையால் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பது கடினமாகவே இருந்தது, முதலில் நீக்குதல் முறையை பயன்படுத்தினோம், இதன் பிறகு முன்னிலையில் இருந்த மூன்று நிறுவனங்களில் தேர்ந்தெடுப்பது சிரமமாகவே இருந்தது. புதுமை மற்றும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் மிகவும் அவசியம் என்று கருதிய இரண்டு நிறுவனங்களை தெரிவு செய்தோம், இரண்டுமே சம அளவில் இருந்ததால் இம்முறை இரண்டு நிறுவனங்களுமே தகுதியின் அடிப்படையில் விருது பெற வேண்டும் என்று முடிவெடுத்தோம்" என்றார்.

விவசாய நிலத்தில் ஈடுபடத் தேவையான வேலையாட்கள் அமையாதது பெரும் சவாலாகவே இருக்கும் இன்றைய நிலையில், 'கிரீன் ரோபோ மெஷினரி' நிறுவனம் தங்களின் கண்டுபிடிப்பின் மூலம் இந்த சவாலை இலகுவாக எதிர்கொள்ள வழி வகுத்துள்ளது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நிறுவனம் பயோடெக் கிளப் கிராமப்புறங்களில் தானியங்கி ஆய்வகங்களை எடுத்துச் செல்லும் முனைப்பில் உள்ளது. உதாரணமாக பாலில் உள்ள கலப்படத்தை எளிய லிட்மஸ் போன்ற சோதனை மூலமாக அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு கருத்து பரிமாற்றம் கொண்ட இந்த மாநாட்டின் நிறைவாக வில்க்ரோ நிறுவனத்தின் பால் பேசில் உரையாற்றினார். தொடக்கமே பெரும் சவாலாக உள்ளது என்றும் எவ்வாறு சமூக தொழில்முனை நிறுவனங்கள் தங்களை ஒவ்வொரு கட்டத்திலும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கினார்.

இந்தியா போன்ற கட்டமைப்புள்ள நாட்டில் சமூக நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி சமூகத்திலும் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.