உங்கள் சருமத்துக்கு ஏற்ற அழகுப் பொருட்களை இயற்கை வழியில் நீங்களே தயாரிக்கலாம்...

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, லோஷன், ஷாம்புகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான இரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 100% இரசாயனம் கலக்காத வீட்டில் தயாரித்த அழகுப் பொருட்களை விற்கின்றது இந்த சென்னை நிறுவனம்!

2

தொழில்நுட்பங்கள் வளந்தாலும் அந்த வளர்ச்சியால் நாம் உண்ணும் உணவு நம் வாழ்வாதாரம் என அனைத்தையும் மாற்றிக் கொண்டாலும் தற்பொழுது மீண்டும் நம் முன்னோர்கள் போல் இயற்கை விவசாயத்தையும் இயற்கை உணவு பொருட்களையும் ஆதரிக்கத் துவங்கி விட்டோம். அதேபோல் இங்க ’பி கைன்ட்’ (BeKind) என்னும் நிறுவனம்  கிராமங்களில் பயன்படுத்தும் இயற்கை அழகுப் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

அனைவரும் அழகான தோற்றம், பொலிவான முகம், அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என விரும்புவோம். அதற்காக சந்தையில் விற்கும் பல பொருட்களை வாங்கி உபயோகிக்கிறோம். அதில் என்ன வகையான ரசாயனங்கள் உள்ளது என நாம் யோசித்து பார்த்ததில்லை. இதைப் பற்றி நன்கு அராயந்தபின் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரித்த அழகு பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது பி கைன்ட்.

“நாம் உண்ணும் உணவில் ஆரோக்கியத்தை பார்க்கிறோம் ஆனால் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் நாம் அதை கவனிப்பதில்லை. உணவை போலவே இதில் பயன்படுத்தும் ரசாயனுமும் நம்மை அதிக அளவு பாதிக்கும்..”
நிறுவனர் ராஜன்
நிறுவனர் ராஜன்

அதுமட்டும் இன்றி நம் தோலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்முடன் பேச துவங்குகிறார் பி கைன்ட் நிறுவனர் ராஜன். பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் எம் பி ஏ முடித்துள்ள ராஜன், பெரும்பாலானவர்கள் போல பெரும் ஐ டி நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்தார். சிறிது காலம் அங்கு பணிபுரிந்த அவருக்கு ஆர்கானிக் ஃபார்மிங் மீது ஈர்ப்பு வந்ததால் தன் வேலையை விட்டுவிட்டு விவசாய ரீதியான தொழிலில் ஈடுபடலாம் என முடிவு செய்தார்.

“ஆர்கானிக் விவசாயம் என்னை அதிகம் கவர்ந்ததால் என் ஐ டி வேலையை விட்டுவிட்டு வீட்டிலே ஆர்கானிக் காய்கறிகளை வளர்த்து அக்கம்பக்கத்தில் விற்றேன். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது,” என தன் முதல் சறுக்கலை பகிர்கிறார்.

சில மாதங்களில் அது தோல்வியில் முடிய அடுத்ததாக மூலிகை ஜூஸ் கடையை நிறுவினார் இவர். ஆனால் அதிலும் தோல்வியைத்தான் சந்தித்தார் ராஜன். இயற்கை மற்றும் ஆர்கானிக் விவசாயத்தின் மீதான பற்றால் மீண்டும் அத்துறைச் சார்ந்தே சென்னையில் திணை மற்றும் விறகு விற்கும் பிரத்தியேக கடையை நிறுவினார். வெற்றி சுலபமாக வந்துவிடாது என்ற சொல்லுக்கு ஏற்ப அதுவும் தோல்வியில் முடிந்தது.

இருப்பினும் துவண்டு விடாமல் மீண்டு முயற்சித்து ’பி கைன்ட்’ நிறுவனத்தின் வெற்றிகரமான நிறுவனர் ஆகியுள்ளார். பல சறுக்கல்கள் வந்தாலும் இயற்கை விவசாயத்தை கைவிடாமல் அதை சார்ந்த பல தொழில்களை முயற்சித்து வெற்றிக்கண்டுள்ளார்.

இயற்கை விவசாயத்தில் ஏன் இத்தனை ஈடுபாடு?

பொதுவாக இங்கு இயற்கை பொருட்களுக்கு அதிக தேவை இருக்கிறது. இதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ள முயலும்போது செயற்கை மற்றும் ரசாயானம் சேர்க்கப்பட்ட பொருட்களின் பாதிப்பில் இருந்து மக்கள் அவர்களையும், தங்கள் குடும்பத்தையும் காக்க விரும்புகின்றனர் என்பதை தெரிந்துக்கொண்டதாக தெரிவிக்கிறார் ராஜன்.

“சுவாச பிரச்சனை, புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை காக்க இயற்கை பொருட்கள் தேவைப் படுகிறது. இதை பற்றி மேலும் படிக்க உண்ணும் உணவு மட்டும் அல்ல நாம் நம் மேனியில் பயன்படுத்தும் பொருட்களும் அதே போன்ற பாதிப்பை நமக்குள் ஏற்படுத்தும்,” என தெரிந்து கொண்டேன்.

இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நிறுவனத்தை துவங்கினோம் என்கிறார் ராஜன். முதலில் இயற்கை மருதாணி தூள், சியக்காய் தூள் போன்றவற்றை விற்கத் துவங்கினர். அதன் பின் நம் முன்னோர்கள் முக அழகுக்கு மற்றும் அழகிய கூந்தலுக்கு பயன்படுத்திய இயற்கை அழகு சார்ந்த பொருட்களை இணைத்துள்ளனர்.

“நம் முன்னோர்கள் பயன்படுத்திய எல்லா மூலிகைகளை பற்றி படித்து, என் மனைவி மற்றும் நண்பரின் உதவியோடு அழகு குறிப்புகளை தயாரித்தோம். அதன் பின் வாடிக்கையாளர்களே அவர்களுக்கு தேவையான அழகு பொருளை தயாரிக்கலாம் என்னும் கருவை கொண்டு வந்தோம்...”

பி கைன்டில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து அவர்கள் குறிப்பிடும் குறிப்பைக்கொண்டு நமக்குத் தேவையான அழகுப் பொருட்களை தயாரிக்கலாம். இதுவே இந்நிறுவனத்தின் முக்கிய அம்சமாகும். மேலும் இந்தியாவில் இந்த கருத்தை முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் இதுவே.

சந்தித்த சவால்கள்

இயற்கையான மூலிகை பொருட்களை பெறுவதில் இருந்து பேக் செய்து விநியோகம் செய்யும் வரை அனைத்துமே துவக்கத்தில் சற்று சவாலாகத்தான் இருந்தது என்கிறார் ராஜன். ஆனால் இவையெல்லாம் ஆரம்ப காலத்தில் சகஜம் என்றும் அதை நாளடைவில் சரி செய்துவிட்டதாகவும் கூறுகிறார்.

முதலில் ஒரு குறிப்பிட்ட விவசாயிகளிடம் இருந்து மூலிகைகளை பெற்றதால் வழங்கல், தரம் மற்றும் போக்குவரத்து சிக்கல்களை சந்தித்துள்ளார். ஆனால் தற்பொழுது அதற்கான யுத்தியை அறிந்து அந்த சிக்கலையும் சரி செய்துவிட்டதாக குறிப்பிடுகிறார்.

சொந்த சேமிப்பில் இருவரால் மட்டும் துவங்கப்பட்ட நிறுவனம் தற்பொழுது ஏழு பேர் கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது.

“தற்பொழுது சந்தையில் சுய பராமரிப்பு பொருட்களுக்கு அதிக தேவை இருக்கிறது. அதாவது கூடிய விரைவில் 10 பில்லியன் டாலர் தொழிலாக இது உயரும். மேலும் அமேரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் DIY (Do It Yourself) அழகு பொருள் ஒரு டிரெண்டாக வளரும்,” என நபிக்கையுடன் முடிக்கிறார் ராஜன்.

. இணையதளம்: bekinder.in  | முகநூல் பக்கம்: www.facebook.com/bekindbodycare

Related Stories

Stories by Mahmoodha Nowshin