முடக்குவாதம் தாக்கப்பட்ட ஹரி குமார் தன்னம்பிக்கையுடன் எவரெஸ்ட் அடிவாரம் வரை பயணம் செய்த கதை!

0

ஹரி குமார் எழுதிய ’மைண்ட் ஓவர் மவுண்டன்’ ஒரு சாதாரண புத்தகம் அல்ல. மன உறுதிக்கும் துணிவிற்கும் சான்றாக விளங்கும் சுயசரிதை ஆகும். முடக்குவாதம் தாக்கி வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போன பிறகு இந்த சுயசரிதையில் தனது பயணத்தைத் தொகுக்க தீர்மானித்ததும் இதன் நூலாசிரியருக்கு ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது.

தொழில்முறையாக ஒரு கார்ப்பரேட் பயிற்சியாளராக இருந்த ஹரியின் வாழ்க்கை பயிற்சி, அடிக்கடி பயணம் மேற்கொள்ளுதல் என நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு முறை முடக்குவாதம் தாக்கியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனை அனுபவம் மிகவும் கடினமானதாக இருந்தது. அவரால் நகர முடியாமல் போனது. தீவிர வலி இருந்தது. அதன் பிறகு பழைய நிலைக்கு திரும்பவேண்டும் என்கிற ஏக்கம் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை முன்னேறத் துவங்கியது. ஐஏஎன்எஸ் உடனான நேர்காணலில் அவர் கூறுகையில்,

”உடல் ரீதியான வலி மற்றும் உணர்ச்சி ரீதியான தாக்கம் என மறுவாழ்விற்கான நாட்கள் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் வருந்தத்தக்க காலகட்டமாக இருந்தது. நான் இயல்பு வாழ்விற்கு மாறுவதற்கான பயணமாக அது அமையவில்லை. நிஜ உலகின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து சிறப்பாக செயல்பட கற்றுக்கொள்ளும் பயணமாகவே அது அமைந்தது.”

இமயமலை வழியாக மலையேற்றம் செல்லவேண்டும் என்கிற உறுதியான முடிவை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹரி தனது மருத்துவருடன் பல முறை ஆலோசித்த பிறகு பயணத்திற்கு ஆயத்தமானார். அவரது புத்தகமான ’மைண்ட் ஓவர் மவுண்டன்’ அவரது பயணக்கட்டுரை மட்டுமல்ல அவரது மன வலிமையின் அளவைக் காட்டும் புத்தகமாகும்.

எந்த சூழலிலும் தனது மன உறுதி குறையாமல் பார்த்துக்கொண்டார். ஓரளவிற்கு நோயிலிருந்து மீண்டதும் தனது வலியை சவாலாக ஏற்று கடினமான பணியான ஹிமாலயா மலையேற்றப் பணியை மேற்கொண்டார். நான்கு நண்பர்களுடன் இணைந்துகொண்டு எவரெஸ்ட் அடிவார முகாமிற்குச் சென்றார். உறையும் வானிலையில் ஹரியும் அவரது குழுவினரும் இலக்கை நோக்கி அணிவகுத்தனர்.

ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்து முடக்குவாதத்தால் தாக்கப்பட்ட நிலை வரையிலும் ஹரியின் பயணத்தை இந்த புத்தகம் படம்பிடித்துக் காட்டுகிறது. இதை விவரிப்பதற்காக மேலாண்மை கோட்பாடுகளையும் நிஜ உலக அனுபவத்தையும் சேர்த்து பயன்படுத்தியுள்ளார். 

சிலிக்கான் இந்தியா பத்திரிக்கையில் ‘அமெரிக்காவின் 50 முன்னணி இந்திய தொழில்முனைவோர்’ பட்டியலில் ஹரி இடம்பெற்றுதாகவும் பிசினஸ் டுடே ‘இந்தியாவின் இளம் நிர்வாகிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டதாகவும் ஹரியின் புத்தகத்தை வெளியிட்ட கோனார்க் பதிப்பகம் அதன் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA